2011ஆம் ஆண்டு இறுதிக் கட்டம், 2012 ஆம் ஆண்டு முழுதும் இந்திய கிரிக்கெட்டிற்கு மோசமான காலக்கட்டமாகும். ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான இழிவான 4-0 டெஸ்ட் உதை பிறகு சி.பி.தொடர் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் இறுதிக்குள் நுழைய முடியாது தொடங்கி கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டித் தொடரை இழந்து டி20 கிரிக்கெட்டிலும் தொடரை வெல்ல முடியாது போயுள்ளது.
இலங்கைக்குச் சென்று ஒருநாள் தொடரை 4- 1 என்று கைப்பற்றியது, பலவீனமான நியூசீலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2- 0 என்று வெற்றி பெற்றாலும் ஒரு போட்டியில் ஹர்பஜன், லxமன் இன்னிக்சால் தோல்வியிலிருந்து தப்பியது.
இதைவிட ஆவலாக எதிர்பார்த்த இலங்கையில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டிகளில் சொதப்பி அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது. 2013ஆம் ஆண்டாவது இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும், இதுவும் கடினமே ஏனெனில் நிறைய அயல்நாட்டு தொடர்கள் கைவசம் உள்ளது. ஆஸ்ட்ரேலியா இங்கு வருகின்றனர், இங்கிலாந்து மீண்டும் ஒருநாள் தொடருக்காக இந்தியா வருகின்றனர்.
இந்த நிலையில் 2012ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் ஒரு சில ஒளிரும் கணங்களையாவது பார்க்கலாமே:
டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் 100வது சதம் கனவு பலிக்கவில்லை ஆஸ்ட்ரேலியாவில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 80ஆக முடிந்தது. ஆனால் வீரத் கோலி பெர்த்தில் அடித்த அந்த சதம் அவரது வாழ்வில் மிக முக்கியமான கணம். பெர்த்தில் சதம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. சச்சின் டெண்டுல்கர் தனது 17வது வயதில் பெர்த்தில் சதம் எடுத்த நினைவு வந்தது வீரத் கோலியின் இன்னிங்ஸை பார்த்தபோது. இது ஒரு நல்ல டெஸ்ட் பிளேயரை இந்தியாவுக்குப் பெற்ருத் தந்த இன்னிங்ஸாகும்.
ஒருநாள் போட்டியில் வீரத் கோலி இலங்கைக்கு எதிராக அதிரடி முறையில் ஆடி 321 ரன்கள் இலக்கை 37 ஓவர்களில் விரட்டி அபார வெற்றி பெற்றதை யாரும் மறக்க முடியாது.
ராகுல் திராவிட், விவிஎஸ். லxமன் ஓய்வு பெற்றது இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்திய மிகப்பெரிய திருப்பமாகும். இவர்கள் இருவரும் இணைந்து 2001ஆம் ஆண்டு கொல்கட்டா டெஸ்டில் மேற்கொண்ட பார்ட்னர்ஷிப் என்றும் மறக்க முடியாதது.
இது தவிரவும் 2004ஆம் ஆண்டு சௌரவ் கங்கூலி தலைமை இந்திய அணி ஆஸ்ட்ரேலியா சென்று ஸ்டீவ் வாஹ் ஆஸ்ட்ரேலியா அணிக்கு எதிராக தொடரை 1- 0 என்று கைப்பற்றியதும் பிறகு சி.பி. தொடரில் இறுதிக்குள் நுழைந்ததும் மறக்க முடியாதது இதிலெல்லாம் லஷ்மண், திராவிடின் பங்கு அளப்பறியது. 2012ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு இவர்கள் ஓய்வு பெற்றது என்றால் மிகையாகாது.
அடுத்ததாக சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை எடுப்பாரா மாட்டாரா என்ற விவகாரம். இங்கிலாந்து தொடர், ஆஸ்ட்ரேலியா, தொடர், நியூசீலாந்து தொடர் என்று அவர் தொடர்ந்து ஏமாற்றியபோது அந்த சதம் வராமலேயே அவர் ஓய்வு பெறுவார் என்றே கருதப்பட்டது. ஆனால் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்திற்கு எதிராக மார்ச் 16ஆம் தேதி அவர் தனது 100வது சதத்தை எடுத்தார். இது அவரது ஒருநாள் சதங்களிலேயே மிக மோசமான சதம் என்றால் மிகையாகாது. இந்தியா வங்கதேசத்திடம் தோல்வி தழுவி இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பறிகொடுத்தது. ஆனால் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு கணமாகும் இது.
இலங்கைக்கு சென்று 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடியது. பல தோல்விகளுக்கு இடையே ஆறுதல் தந்த ஒரு 4- 1 வெற்றியாகும் இது. குறிப்பாக தோனி கேப்டன்சியில் இலங்கை இந்தியாவை ஒருநாள் தொடரில் வீழ்த்தியதேயில்லை என்றே கூறவேண்டும். இந்தத்தொடரிலும் வீரத் கோலி ஒரு முக்கியப் பங்கு வகித்தார். 5 இன்னிங்ஸ்களில் 295 ரன்களை எடுத்து அவர் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார்.
அடுத்ததாக மிகப்பெரிய டாபிக் யுவ்ராஜ் சிங் கேன்சரிலிருந்து மீண்டு வந்தது. அவரும் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு நிறைவேற்றினார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் படு சொதப்பலாக ஆடினார். மற்ற ஒருநாள், T20 வடிவங்களில் அவரது பங்களிப்பு மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணமாக 2012ஆம் ஆண்டில் ஒன்றை கூறவேண்டுமென்றால் புற்றுநோய்க்கு பிறகு அவருக்கு கிரிக்கெட் மீது பிடிப்பு ஏற்பட்டு கடுமையாக பயிற்சி செய்து மீண்டும் வந்துள்ளார் இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வாகும்.
T20 உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறினாலும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி மறக்க முடியாததாகும்.
T20 உலகக் கோப்பையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட இப்போதைய இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் மீண்டும் இந்திய அணிக்குள் வந்து இங்கிலாந்து க்கு எதிராக 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமான பந்து வீச்சினால் வெற்றியை பறித்துக் கொடுத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னொரு நட்சத்திரம் உதயமானார். அவர்தான் செடேஷ்வர் புஜாரா, நியூசீலாந்துக்கு எதிரகா ஒரு மிகப்பெரிய சதம் எடுத்த இவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இரட்டை சதம் மற்றும் ஒரு சதம் எடுத்து திராவிடின் வழியில் வந்தவன் தான் என நிரூபித்தார்.
ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்டில் முதல் 50 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தியதோடு அபாரமான பேட்டிங் திறமையையும் இங்கிலாந்துக்கு எதிரகா வெளிப்படுத்தியது இந்திய அணிக்கு ஒரு புதிய ஆல்ரவுண்டர் கிடைத்தௌள்ளதை அறிவிக்கிறது.
சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து பவுல்டு ஆகி கிரிக்கெட் நிபுணர்களின் வசவுக்கு ஆளானது இந்த ஆண்டின் கிரிக்கெட் துயரமாகும். விஸ்வனாத் மிகப்பெரிய வீரர்தான் ஆனால் கடைசி காலத்தில் புல்டாஸிலெல்லாம் பவுல்டு ஆனார். அதுபோன்று சச்சின் ஆகிவிடக்கூடாது. 2013-இல் ஆஸி.க்கு எதிராக அவர் நல்ல நிலைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.
நியூசீலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2- 0 என்று கைப்பற்றினாலும் T20 தொடரில் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட இரண்டாவது ஆட்டம் சென்னையில் மிகவும் வலி நிறைந்த தோல்வியாக இந்திய அணிக்கு முடிந்தது.
சச்சின் டெண்டுல்கர் ராஜ்ய சபா எம்பி ஆனது பலரது பார்வையில் விமர்சனத்துக்குரியது என்றாலும், ஆஸ்ட்ரேலிய அரசின் மிகப்பெரிய உயரிய விருது அவருக்கு கிடைத்த ஆண்டு 2012 என்பது இந்த ஆண்டுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
பாகிஸ்தானை வீழ்த்துவது எப்போதும் இந்திய ரசிகர்களுக்கு பிடித்க்டமான ஒன்று. சச்சின் தனது 100வது சதத்தை அடித்த 2நாட்கள் கழித்து வீரத் கோலி தனது அதி அற்புதமான ஒருநாள் இன்னிங்ஸை விளையாடி பாகிஸ்தானின் 330 ரன்களை ஒன்றுமில்லாமல் செய்தார். 2012ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஒருநாள் இன்னிங்ஸ் இது என்றால் மிகையாகாது.
2012ஆம் ஆண்டு குறுகிய காலமே பேசப்பட்ட ஆனால் மிக முக்கியமான இந்திய வெற்றி சீனியர்களிடமிருந்து இல்லை. மாறாக ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற மிகவும் சவாலான இளையோர் உலகக் கோப்பையை இந்திய இளையோர் அணி அதன் உத்வேகமான கேப்டன் உன்முக்த் சந்தின் அபார ஆட்டத்தினால், கேப்டன்சியினால் வென்றது எதிர்கால இந்திய கிரிக்கெட்டைத் தீர்மானிக்கும் பல வீரர்களை அடையாளம் காடிய வகையில் 2012ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாகும்.
கடைசியாக சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றது. 463 ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் 18,000 ரன்களுக்கும் மேல் குவித்த குறிப்பாக ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 9 சதங்களை விளாசிய உலகின் ஆகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் புத்தகத்தில் ஒருநாள் பக்கம் புரளுவது நின்றது.