போரின் கொடுமையையும், சர்வதேச அரசியலின் அவலங்களையும் எடுத்துக்காட்டும் படம். சோகம், நகைச்சுவை, திகில், விறுவிறுப்பு என்று பலவித உணர்வுகளையும் அவ்வப்போது கலந்தாலும், சொல்லவந்த விடயத்தின் தீவிரத்திலிருந்து சற்றும் விலகாமல் அழகாக படத்தை எடுத்திருக்கின்றார்கள். உலகில் நடக்கும் போர்களின் நடுவில் சென்று தகவல் திரட்டும் செய்தியாளர் Simon Hunt (Rechard Gere); கூடவே ஒளிப்பதிவாளர் Duck (Terrence Howard).
சிறப்பாக செயற்பட்டுக்கொண்டு வரும் இந்த இருவர் கூட்டணி Bosniaவில நடக்கும் ஒரு இனப்படுகொலை சம்பவததைப்பற்றிய செய்தியைத் திரட்டுவதற்காக வந்து சேருகின்றது. அந்த நிகழ்வின் கொடுமையினால் மிகவும் பாதிக்கப்ப்டுகின்ற Simon, நேரடி ஒளிபரப்பில் தண்ணியடித்துவிட்டுவந்து சொதப்புகின்றார். விளைவு பதவி நீக்கம். சோடியை இழந்த Duck களவேலையை விட்டுவிட்டு அமெரிக்காவிற்குத் திரும்பிவிடுகின்றார். ஐந்து வருடம் ஓடுகின்றது. இப்போது Bosniaவின் இனப்படுகொலைகள் ஓய்ந்துவிட, அமைதியை நிலைநாட்ட தங்கி நிற்கும் ஐ.நா துருப்புகள் இனக்கொலைகளில் ஈடுபட்ட போர்க்கால குற்றவாளிகளை (war criminals) தேடுவதாக சொல்லிக்கொண்டு நிற்கிறது. இவ்வாறான Bosniaவின் புதிய அமைதிக்கோலத்தை படம் பிடிக்கவென்று வந்து சேருகின்றார் Duck. இவர் எதிர்பாராத விதமாக, சடுதியாக இவரது முன்வந்து நிற்கின்றார் பலவருடங்களாக தொடர்பற்றுப்போன Simon. பழைய கவர்ச்சித் தோற்றத்தை முற்றுமுழுதாக தொலைத்துவிட்டு கரடுமுரடாக இருக்கும் Simon, பிரதானவொரு போர்க்கால குற்றவாளி இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்றும், அவனைப் பேட்டி காண்பதற்கு தனக்கு உதவி செய்தால் தனது வாழ்வை தான் மீண்டும் கட்டியெழுப்பலாம் என்றும் கேட்கின்றார். Simonமீது இரக்கப் படும் Duck அதற்கு சம்மதிக்கின்றார். பேட்டிக்காக Bosniaவின் ஆபத்தான பகுதிக்குள் சென்றுகொண்டிருக்கும் வழியில், அந்த குற்றவாளியை பேட்டி காண்பது தனது நோக்கமல்ல, அவனை சிறைப்பிடிப்பதே தனது உண்மையான நோக்கம் என்பதை வெளிப்படுத்துகின்றார் Simon. Simonஇன் திட்டம் முட்டாள்த்தனமானது என்றாலும், பழைய நட்புக்காகவும், வேறு சிலகாரணங்களிற்காகவும் Simonனோடு ஒத்துப்போகின்றார் Duck. இவர்களது இலட்சியத்தை நோக்கிய பயணம் எவ்வாறு செல்கின்றது, எவ்வாறு முடிகின்றது என்பதை படம் விபரிக்கின்றது.
படத்தின் கதை உண்மை தகவல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அடிக்கடி இலங்கையில் நடக்கும் போரினை ஞாபகப் படுத்துகின்றது. Terrence Howard தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிலைநாட்டியிருக்கின்றார். என்றாலும் படம் கதையை சொல்லும் விதம்தான் கவனத்தை மிகவும் கவருகின்றது. கொஞ்சம் seriousஆன படம். பார்க்கலாம்.