பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படத்தைத் திரையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரவு தீர்ப்பளித்தது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார். விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட
கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்தார். இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வந்தார். இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த நிலையில்இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன். இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார். மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர். எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அரசுத் தரப்பு, கமல்ஹாசன் தரப்பு, சென்சார் போர்டு தரப்பு என வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இரவு 8 மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார். நள்ளிரவுக்கு 2 மணி நேரததிற்கு முன்பு வந்த தீர்ப்பு ஆனால் தீர்ப்பு 10 மணிக்குத்தான் அறிவிக்கப்படும் என்று நீதிபதியிடமிருந்து பின்னர் அறிவிப்பு வந்தது. இதனால் தீர்ப்பை அறியக் காத்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஏன் இத்தனை தாமதம் என்ற கேள்விகளும் எழுந்தன. இந்த நிலையில் ஒரு வழியாக பத்து மணிக்கு மேல் தீர்ப்பு வெளியானது. திரையிட அனுமதி அதன்படி விஸ்வரூபம் படத்திற்கு ஜனவரி 24ம் தேதி தமிழக அரசு விதித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது. விஸ்வரூபம் படத்தை தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையிடலாம் என்று நீதிபதி அறிவித்தார். பெருமளவில் போலீஸ் குவிப்பு முன்னதாக உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். கோர்ட் வளாகம் தவிர கோர்ட்டுக்கு வெளியேயயும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் கோர்ட்டுக்குள் குழுமியிருந்த வெளியாட்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். உயர்நீதிமன்றத்தைச் சுற்றிலும் ஏராளமான கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 144 தடை உத்தரவுக்கும் தடை அதேபோல பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவுக்கும் தடை விதித்து நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டார்.