விஸ்வரூப பிரச்சனையில் இஸ்லாமிய தலைவர்கள் சொல்வது சரியா?


விஸ்வரூபத்தின் கதை என்ன, அதில் முஸ்லீம்களை கமல் எப்படி சித்தரித்திருக்கிறார் என்பது தெரியாத நிலையில் படத்தைப் பார்த்த இஸ்லாமிய தலைவர்கள் சொல்லியிருக்கும் குற்றச்சாற்றை வைத்தே இந்தப் பிரச்சனையை அணுக வேண்டியிருக்கிறது. திருக்குரான் தீவிரவாதிகளின் கையேடு போலவும், தொழுகை முதலான இஸ்லாமியர்களின் மத வழிபாடுகள் தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தில் நம்பிக்கை உள்ள அல் கய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் வெளியிட்டுள்ள 

வீடியோ பதிவுகளில் அவர்கள் தொழுகை நடத்துவதும், திருக்குரான் ஓதுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோஜா திரைப்படத்தில் இந்திய தேசிய கொடியை இஸ்லாமிய தீவிரவாதிகள் எரிப்பதை எதிர்த்து ஹீரோ போராடும் போது பிரதான தீவிரவாதி தொழுகை நடத்திக் கொண்டிருப்பதாக மணிரத்னம் காட்சி வைத்திருப்பார். தீவிரவாதிகள் என குற்றஞ்சாற்றப்பட்டவர்கள் தொழுகை நடத்துவதும், திருக்குரான் ஓதுவதும் ஒன்றும் புதிதல்ல, அனைவருக்கும் தெரிந்ததே. ஆக, ஒரு தீவிரவாதி திருக்குரான் ஓதுவதையும், தொழுகை நடத்துவதையும் கமல் காட்சியாக வைத்திருப்பதை வைத்து மட்டும் விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற முடிவுக்கு வர இயலாது. அதைத் தவிர வேறு என்னவிதமாக சித்தரித்திருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். 

தமிழ்நாட்டின் பல பகுதிகள் தீவிரவாதிகளின் புகலிடங்களாக படத்தில் காட்டப்பட்டுள்ளது.

விஜயகாந்த் நடித்த பல படங்கள் இந்தியாவே தீவிரவாதிகளின் பிடியில் இருப்பது போலதான் எடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன் தமிழில் எந்த நடிகர் தமிழகத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடுவது போல் நடிக்கவில்லை? சிம்புவின் வானம் படத்திலும்கூட சென்னையை இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குவது போலதான் கிளைமாக்ஸை வைத்திருந்தார்கள். உண்மையில் இதற்காக விஸ்வரூபத்தை மட்டும் கண்டிக்கக் கூடாது. ஒட்டு மொத்த தமிழ் சினிமா மனோபாவத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும். தமிழகத்தில் ஒருபோதும் நடக்காத பயங்கரவாதத்தையும், குண்டு வெடிப்பையும் காலங்காலமாக தமிழ் சினிமா காட்சிப்படுத்தி வரும் நிலையில் தீவிரவாதிகள் தமிழகத்தின் சில பகுதிகளில் பதுங்கியிருப்பதாக கமல் காட்சி வைத்திருப்பதை மட்டும் கேள்விக்குட்படுத்துவது சரியா? இதுபோன்ற காட்சிகளை விஸ்வரூபத்தில் மட்டுமின்றி எந்தப் படத்தில் இடம்பெற்றாலும் கேள்விக்குட்படுத்த வேண்டும் என்பதே நியாயமானதாக இருக்கும்.

தாடி, நீண்ட அங்கியுடன் முஸ்லீம் தோற்றத்தில் இருப்பவர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்வது போலவும், ஒவ்வொரு கொலையின் போதும் திருக்குரான் வாசகம் சொல்வது போலவும் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது. 

இந்திய முஸ்லீம்களும் சரி இங்கு இயங்கி வரும் சிமி போன்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தவரும் சரி எவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தகவல் இல்லை. அதேநேரம் ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் இதே செயலை செய்திருப்பதை நாம் இணையத்திலேயே பார்த்திருக்கிறோம். கமல் இந்தியாவிலுள்ள இந்திய முஸ்லீம்கள் இப்படியொரு பாதகத்தை செய்திருப்பதாக காட்டியிருந்தால் அது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியதே. இந்தியாவுக்குப் பதில் ஆப்கானிஸ்தானில் நடந்ததை அவர் காட்டியிருந்தால் நம்முடைய கோபத்தை கமலிடம் திருப்புவதற்குப் பதில் அந்த கொலையை செய்தவர்களின் மீது காண்பிப்பதுதான் சரியானதாக இருக்கும்.

சிறுவனொருவன் பள்ளிக்கு செல்லாமல் கண்ணை மூடிக் கொண்டே துப்பாக்கிகளின் ரகத்தை சொல்வதாக காட்சி உள்ளது.

இதுவும் மேலே சொன்னது போல் இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சிறுவனென்றக்ல் கண்டிப்பாக கமல் போலியாக சித்தரித்தது என்று அடித்துக் கூறலாம். இதுவே ஆப்கான் சிறுவனென்றக்ல்...? ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிறுவர்களுக்கு போர் பயிற்சி அளிப்பது குறித்து எத்தனையோ பேர் பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறக்ர்கள். அந்த சிறுவர்களின் பால்யத்தை வன்முறைக்களமாக்கும் அந்த அடிப்படைவாதிகளைதான் ஒவ்வொரு இஸ்லாமியரும் கண்டிக்க வேண்டும்.

தொழுகைக்கு வரும் முஸ்லீம்கள் வெடிகுண்டுகளுடன் வருவதாகவும், அந்த வெடிகுண்டு வெடித்து பள்ளி வாசல் இடிந்து போவதாகவும் காட்சி வைத்திருக்கிறார் கமல்.

இந்திய மசூதிகளில் நடந்த குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தவர் காரணம் என ஆதாரங்களுடன் அரசே கூறியிருக்கும் நிலையில் இப்படியொரு காட்சி விஸ்வரூபத்தில் இடம்பெற்றிருப்பது நிச்சயம் ஆட்சேபத்துக்குரியது. முஸ்லீம்களே குண்டு வெடிப்பை நடத்திவிட்டு ஆர்.எஸ்.எஸ் மீது பழி போடுவதான தோற்றத்தை இது ஏற்படுத்திவிடும் என்ற இஸ்லாமிய தலைவர்களின் அச்சம் நியாயமானது. எனினும் இந்தக் காட்சியை இந்தியாவில் நடப்பது போல் கமல் வைத்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். ஆம் எனில் அந்தக் காட்சி கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்தியாவில் பள்ளி வாசல்களில் நடந்த குண்டு வெடிப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, அரசு தெரிவித்திருப்பது போல் இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். ஸை சேர்ந்தவர்களே காரணம் என கமலிடமே ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டு உண்மையை தெரியப்படுத்துவது எளிதானது. 

மாமன் மச்சான் உறவுடன் வசிக்கும் சமூக நல்லிணக்கத்தை இப்படம் சிதைக்கும்.

வைதீக பிராமணனைவிட முற்போக்கு பிராமணன் ஆபத்தானவன் என்ற ஐயா பெரியாரின் வார்த்தை கமல் மூலம் உறுதியாகிறது.

உண்மையில் இதுபோன்ற பேச்சுகள்தான் சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானவை. பெரியார் சாதி, மத, இன, மொழி அடையாளங்களை கடந்து பேசிய வார்த்தைகள் எல்லா தரப்பிலும் உள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றுக்கும் எதிரானவை. எல்லா அடையாளங்களும் கடந்து பெரியார் கூறிய கருத்துக்கும் முஸ்லீம் என்ற அடையாளத்துடன் பிராமணன் என்ற சாதியை குறித்து இவர்கள் முன் வைக்கும் பேச்சுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவேயில்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை கற்பித்தவன் அயோக்கியன் என்றும் ஐயா பெரியார்தான் கூறினார். 

விஸ்வரூபத்துக்கு எழுந்திருக்கும் இந்த எதிர்ப்பு இணையத்தில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இஸ்லாமியர்கள் மட்டுமா குண்டு வைக்கிறார்கள். மாலேகன், சபர்மதி எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித் போன்ற இடங்களில் வெடிகுண்டு வைத்ததில் ஆர்எஸ்எஸ் ஸின் பங்கு உள்ளதே..?

இந்து அடிப்படைவாதிகள் தேசபக்தி, கலாச்சாரம், வரலாறு என்ற பெயரில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு - உதாரணமாக அயோத்திப் பிரச்சனை, குஜராத் படுகொலைகள் - நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை படுகொலை செய்து உடமைகளை முற்றாக அழித்து அதற்கு முறையான நீதி வழங்கப்படாத நிலையில் வன்முறையை தோந்தெடுக்க முஸ்லீம்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த பாதையை தேர்ந்தெடுப்பவர்கள் சொற்பமானவர்களே. பாதிக்கப்பட்டவன் திருப்பியடிப்பதை தீவிரவாதம் என்று ஊதி முழக்கும் அதேநேரம் அதற்கு காரணமான இந்து அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் காப்பதையே இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்களும், சினிமாக்களும் செய்து வருகின்றன. 

அயோத்தி பிரச்சனைக்குப் பிறகே மதரீதியிலான வன்முறை அதிகரித்தது என்று பல அறிஞர்கள் தெரிவித்திருப்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையில் இந்து அடிப்படைவாதிகளின் வன்முறைதான் அதிகமாக பேசப்பட்டிருக்க வேண்டும். தேசபக்தியின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும் வன்முறைகள் நிகழும் போது குற்றவாளிகள் தண்டனையிலிருந்து மட்டுமின்றி தீவிரவாதி என்ற அடையாளத்திலிருந்தும் தப்பி விடுகிறார்கள். குஜராத் படுகொலைகளை முன்னின்று நடத்தியவர்களின் நேரடி வாக்குமூலத்தை தெஹல்கா வெளியிட்டும் அந்த குற்றவாளிகளில் பலரும் தண்டிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை.

கமல் போன்றவர்கள் இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதத்தைதான் அதிகம் பேசியிருக்க வேண்டும். அதேநேரம் அவர்களை சிறிதளவேனும் விமர்சனத்துக்குட்படுத்தியவர் தமிழக அளவில் கமல் மட்டுமே என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஹேராமில் அபயங்கரின் கதாபாத்திரம் வழியாக அவர்கள் எப்படி இஸ்லாமியர்களுக்கு எதிரான துவேசத்தை பரப்புகிறார்கள் என்பதை தெளிவுபட கூறியிருக்கிறார். (ஹேராமை இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரதியாக தவறான புரிதலுடன் சாரு நிவேதிதா போன்றவர்கள் எழுதி குவித்திருக்கிறார்கள். அதற்கான சரியான விளக்கத்தை பாஸ்கரன் தனது வேர்ல்ட்சினிமாஃபேன் பிளாக்கில் விரிவாக எழுதியிருக்கிறார்).

ஹேராமின் போது காந்திக்கு எதிரான படம் என்று வட இந்தியாவில் காங்கிரசார் படத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டார்கள். படம் வெளியான பிறகு காங்கிரஸார் கப்சிப்பாக இந்து அடிப்படைவாதிகள் கலகத்தில் குதித்தார்கள். அன்பே சிவத்தில் வில்லன் சிவனை வழிபடுகிறவர். ஓயாமல் அவர் பெயரை சொல்கிறவர். ஆனால் உண்மையில் அன்பு பாராட்டுகிறவர்களாக கிறிஸ்தவ மதத்தினரை கமல் காட்டியிருப்பார். இராம.கோபாலன் இதில் கசப்புற்று ஆமா கமல் பெரிய இவரு... என்ற ரீதியில் பேட்டிளித்தார். அவ்வை சண்முகியில் கறி தின்பவர்களுக்காக கொல்லப்படும் மாடுகளைவிட உங்க தோல் வியாபாரத்துக்காக கொல்லப்படுற மாடுகள் அதிகம் என்று பிராமினான ஜெமினி கணேசனிடம் கமல் வாதிடுவார். அப்போதெல்லாம் முற்போக்கு பிராமணன் என்று கமலை விமர்சிப்பவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 

விஸ்வரூபத்தை பொறுத்தவரை முக்கியமான விஷயம் படத்தை எதிர்ப்பவர்களின் புரிதல். இந்தப் படத்தைப் பார்த்த இஸ்லாமிய பிரமுகர் ஒருவர் பேட்டியொன்றில் இது படமே இல்லை. ஏன் சொல்றேன்னா இதில் பொதுவாக திரைப்படத்தில் இருக்கிற காதல் காட்சிகள் இல்லை, பாடல்கள் இல்லை, காமெடி சீன்கள் இல்லை என்று பட்டியலிடுகிறார். இந்த அபத்தங்கள் சத்யஜித்ரேயின் படத்தில் கூடத்தான் இல்லை. தசாவதாரம் படத்தில் முஸ்லீம் எல்லாரையும் தீவிரவாதின்னு கமல் சொல்லிட்டார் என பின்நவீனத்துவ ரைட்டர் ஒப்பாரி வைத்தார். விஷயம் இதுதான். ஏழடி உயர கமலின் தோற்றத்தைப் பார்க்கும் நாயுடு கமல், ஓ.. நீ முஸ்லீமா அப்போ எல்லோரும் தீவிரவாதிதான் என்பார்.

இந்தக் காட்சிக்கு முன்பு ஏழடி உயர கமல் ஒரு அப்பாவி என்பதையும், அந்தக் குடும்பம் பிறருக்கு

பிரச்சனை தரக் கூடியதல்ல என்பதையும், தனது தாய்க்கு ரத்தம் தந்ததால் ஆண்டாளுக்கும் (அசின்), விஞ்ஞானி கமலுக்கும் எதுவும் செய்ய தயாராக இருப்பதையும் கமல் அட்சர சுத்தமாக விளக்கியிருப்பார். இந்நிலையில் ஒரு அதிகாரி ஏழடி உயர கமலின் தோற்றத்தை மட்டும் வைத்து தீவிரவாதி என்று சொல்லும் போது பார்வையாளனின் புரிதல் என்னவாக இருக்கும்?

ஆஹா…... அப்பாவியான இந்த ஆளைப் போய் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக தீவிரவாதி என்கிறானே. இப்படிதான் முஸ்லீம்களை அவர்கள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்துக்காக தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்துகிறார்கள் என்றுதானே எண்ணத் தோன்றும். முஸ்லீம்னாலே தீவிரவாதி என மனப்பிராந்தியை கமல் காட்டமாக விமர்சிக்கும் காட்சி இது. இந்த எளிய உண்மையைக்கூட புரிந்து கொள்ள முடியாமல் நோபல் பரிசுக்கு காத்திருக்கும் பின் நவீனத்துவ ரைட்டர் சாடுகிறார்; என்றால் சினிமான்னா பாட்டும், தமாஷும் இருக்கணும் என்ற புரிதலோடு இயங்கும் இஸ்லாமிய பிரமுகர் விஸ்வரூபத்தை எந்த அர்த்தத்தில் புரிந்து கொண்டிப்பார் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.

கமல் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவரது படங்களில் வெளிப்படும் மதரீதியான அணுகுமுறை இன்னும் நுணுக்கமாக ஆராயப்பட வேண்டியதுதான். ஆனால் நிச்சயமாக இப்போது நடப்பது போல் உயிரைக் கொடுத்தாவது படத்தை தடுப்போம் என்ற ரீதியில் அல்ல. கமல் சொல்லும் எதையும் கண்ணை மூடி ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்களில்லை. ஒரு படம் சமூக நல்லிணக்கத்தை சிதைத்துவிடும் என்பதெல்லாம் ஊதிப் பெருக்கப்பட்ட கற்பனை. மக்களை அறிவிலிகளாக நினைக்கும் போதுதான் அதை பார்க்கக் கூடாது, இதை கேட்கக் கூடாது, அதனை பேசக் கூடாது போன்ற அதிகார தடைகள் சமூகத்தில் தோன்றும். விஸ்வரூபத்தை மக்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும். அது எப்படிப்பட்ட படம் என்பதை தீர்மானிக்கிற உரிமை அவர்களுக்கு தரப்பட வேண்டும். அதுவே முறையானது, சரியானது, அதுவே நீதியானதும்கூட.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget