நம் தளத்தில் ஏற்கனவே விஸ்வரூபம் படத்தின் விமர்சனத்தை போட்டு விட்டோன். ஆனால் தமிழகத்தில் சில மாற்றங்களுடன் இன்று திரைக்கு வருகிறது. முஸ்லிம் அமைப்புகளின் வேண்டுகோளை அடுத்து 7 காட்சிகளை நீக்கியும், மற்ற இடங்களில் வசனங்களை நீக்கீயுள்ளனர். அவற்றை விரிவாக பார்போம்
1) படத்தின் தொடக்கத்தில், "இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின்
கோட்பாடுகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல, இது ஒரு கற்பனை கதை," என டைட்டில் போடப்பட்டது.
2) படத்தில் ஆங்காங்கே காட்சிகளின் போது ஒலிக்கும் திருக்குர்ரான் வசனங்கள் நீக்கப்பட்டு வெறும் காட்சிகள் மட்டும் ஓடியது.
3) திருக்குர்ரான் வசனம் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்பட்டது.
4) அமெரிக்காவில் குண்டு வெடிப்பை தடுப்பதற்காக கமல்ஹாசன் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும், பின்னணியில் தெரியும் தொழுகை நடத்தும் காட்சிகளும் நீக்கப்பட்டது.
5) முல்லா ஒமர் கோவையிலும், மதுரையிலும் தலை மறைவாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டது.
6) நடிகர் நாசர் ஒரு காட்சியில், "முஸ்லிம் அல்லாதவர்களை அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை'' என்று வசனம் பேசுவார். அந்த காட்சிகள் நீக்கப்பட்டது.
7) ஆப்கன் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விளையாடுவது போல காட்டப்பட்டுள்ளதும் நீக்கப்பட்டது.
பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால் வந்த இடத்தில் கம்பெனி பாஸுடன் கள்ளக் காதல். நடன ஆசிரியரான கணவருக்கும் இப்படி கள்ளத் தொடர்பு இருந்தால், வெட்டிவிடுவதற்கு எளிதாக இருக்கும் என்று ப்ரைவேட் டிடெக்டிவ்வை நியமிக்கிறார். கமலை பின் தொடரும் டிடெக்ட்டிவ் கொல்லப்படுகிறார். அப்பாவி கமலும், மனைவியும் வில்லன்கள் கையில் மாட்டிக் கொள்கிறார்கள். வழக்கம்போல் ஹீரோ, வில்லன்களை அடித்து நொறுக்க, தனது அப்பாவிக் கணவனா இப்படி என்று பூஜாகுமார் விழிக்க, ஆக்ஷன் படமாக வேறு தளத்தில், பின்னணியில் விரிகிறது.
படத்தில் தெரிந்த பிற முகங்கள் சேகர் கபூர், நாசர் மட்டும்தான். அதிபர் ஒபாமா பின் லேடனை கொன்ற பிறகு பேசும் தொலைக்காட்சி உரை அப்படியே ஒலிபரப்பாகிறது. இது வரையிலும் தமிழ்த் திரையில் காட்டப்படாத நியூயார்க் நகரின் ஏனைய இடங்கள் எல்லாம் படமாக்கியுள்ளார்கள். பார்க்காதவர்கள், அட நியூயார்க் இப்படியும் இருக்குமா என்று ஆச்சரியப் பட்டுப்போவார்கள்.
ஆப்கானிஸ்தான் என்று படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருப்பது போலிருக்கின்றன. இதுவரை தலிபான்கள் பற்றி செய்திகளாக, கட்டுரைகளாகப் படித்த அத்தனை விவரங்களையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல். சண்டைக் காட்சிகள் எது நிஜம் எது க்ராபிக்ஸ் என்று தெரியாத அளவு, ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தேவையான இந்த படத்திற்கு, அதைத் தரத் தவறியிருக்கிறார் சங்கர் எசான் லாய்.
ஓளிப்பதிவு அருமை. எடிட்டிங் செய்தவர் கொஞ்சம் தூங்கி விட்டார் போலிருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக்கியிருக்கலாம். அந்த புறாக்காட்சிகள், ஒரு மெக்சிகன் (Virgingate Morenita) படத்திலிருந்து தழுவல் போலிருக்கே கமல் சார்! முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான், நியூயார்க் என்று என்று காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் தமிழகத்தை பற்றி எங்கே வருகிறது என்று தேடவேண்டியுள்ளது.
ஒரே ஒரு காட்சியில் வில்லன் தமிழ் நாட்டில் ஒரு வருடம் ஒளிந்து இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டேன் என்கிறார். அத்தோடு மதுரை, கோவை, அகமதாபாத் என்று பஸ்ஸுக்கு ஆள் கூப்பிடுவது போல் வரிசையாக சில ஊர் பெயர்களை சொல்கிறார். மற்றபடி ஆப்கானிஸ்தானையும், தலிபான்களையும் இவ்வளவு விவரமாக அமெரிக்கப் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது.
ஒரு காட்சியில் பின் லேடன் கூட தோன்றுகிறார். ஆனால் அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாகத்தான் சொல்கிறார்கள். ஆளையும் தூரத்தில்தான் காட்டுகிறார்கள். இந்த கூட்டத்தில், தமிழுக்கு தெரிந்த ஒரே முகம் நாசர் மட்டும்தான். பின்லேடன் பற்றி ஒபாமா சொல்லும் போது, பிண்ணனியில் கமல், ஆண்ட்ரியாவின் உரையாடல் இயல்பாக இருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் படத்தை துப்பாகியால் சுட்டு கூத்தாடுகிறார்கள். சொல்லப்போனால் அமெரிக்கர்கள்தான் இந்த பட்த்தை அமெரிக்காவில் தடை செய்யவேண்டும்.
தெலுங்கு, இந்தி என டப்பிங் செய்த கமல், ஆங்கிலத்தில் டப் செய்திருந்தால் அமெரிக்கர்கள் நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான சப்ஜெக்ட் அல்லவா! நியூயார்க் நகரை அணுக்கதிர் அழிவிலிருந்து காப்பாற்றியதற்காக இந்தியர்களுக்கும் மரியாதை கூடியிருக்கும்.
விஸ்வரூபம் 2 இந்தியாவில் தொடரும் என்று முடித்திருந்தாலும், அது அமெரிக்காவில் தொடரட்டும் என்றுதான் அட்வான்ஸ் கொடுத்திருப்பார் போலிருக்கிறது ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன்.
சராசரி ஹாலிவுட் படங்களை விட நன்றாகவே படமாக்கியுள்ளார் கமல். நடுவில் கொஞ்சம் கத்தரியை போட்டிருக்கலாம்.
Any how... கமலுக்கு இது விஸ்வரூபம்தான்!