கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் "டிவைஸ் மேனேஜர்' மவுஸ், கீ போர்ட், மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர் பிரிவுகளும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப் படுகின்றன என்று இதில் தெரியவரும். அத்துடன் ஒவ்வொரு ஹார்ட்வேர் சாதனமும் எப்படி இயங்க வேண்டும் என்பதனையும் இதன் மூலம் சென்று அமைத்திடலாம். இதன் மூலம் ட்ரைவர்
புரோகிராம்களை அப்டேட் செய்திடலாம்; ஹார்ட்வேர் அமைப்பு வழிகளை மாற்றிடலாம்; பிரச்னைகளை எளிதாக தீர்த்துவிடலாம். ஏதாவது ஒரு ஹார்ட்வேர் சாதனத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால், டிவைஸ் மேனேஜர் சென்று அந்த குறிப்பிட்ட சாதனம் எப்படி செட் செய்து அமைக்கப்பட்டுள்ளது என்று பார்த்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். தற்காலிகமாக அவற்றை நீக்கி மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம். ஹார்ட்வேர் பிரிவுகள் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்து கொள்வதில் தவறில்லை.ஆனால் இவை எல்லாம் நன்றாகத் தெரிந்த பின்னரே இவற்றில் கை வைக்க வேண்டும்.
டிவைஸ் மேனேஜரைப் பெற்றுக் காண, My Computer/ Computer ஐகானை ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில் Hardware என்ற டேபைக் கிளிக் செய்தால், கிடைக்கும் விண்டோவில் Device Manager என்ற பட்டன் காணப்படும். இதனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப் பெறலாம். இங்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும். ஏதாவது ஒரு சாதனத்தின் இயக்க நிலையை அறிய வேண்டும் என்றால் பட்டியலில் அதனைப் பார்த்து அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். அந்த சாதனத்துடன் தொடர்புடையவை தெரியவரும். அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் டேப்களில் General என்ற டேபைக் கிளிக் செய்தால் Device status பாக்ஸ் கிடைக்கும். இங்கு அந்த சாதனம் சரியாகச் செயலாற்றுகிறதா என்ற தகவல் கிடைக்கும். அதில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் Troubleshoot பட்டனை அழுத்தி பிரச்னையைச் சரி செய்வதில் முனையலாம். குறிப்பிட்ட பிரிவின் தன்மை, வேலைத் திறன் மற்றும் பிற விபரங்களை அறிந்த பின்னரே இதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மாற்றங்களை மேற்கொள்ளும் முன், அவை எந்நிலையில் இருந்தன என்பதனையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.