கோச்சடையான் சினிமா விமர்சனம்

Cast: Rajinikanth, Deepika Padukone, R. Sarathkumar, Sneha, Aadhi, Shobana, Jackie Shroff, Nassar
Direction: Soundarya Rajnikanth
Production: Adlabs and Ocher Studios
Music: A R Rahman

கோட்டையபட்டினம் நாட்டின் தலைமைத்தளபதி கோச்சடையான். தன் படைவீரர்களைக் காக்க அவர் செய்யும் ஒரு செயலால், தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார். கோச்சடையானின் மகன் ராணா அவர் மீதான பழியை நீக்கி, பழிவாங்குவதே கதை. (அப்போ இந்தப் படம் ராணா தானேன்னு கேட்கக்கூடாது)

முதலிலேயே சொல்லிவிடுகிறேன்...நாம் பயந்த அளவிற்கு படம் மோசம் இல்லை.



படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திற்கு ‘இது ரஜினி தானா? சரத்குமார் தானா? தீபிகா தானா?’ என்று நம் மனம் ஆராய்ச்சியில் இறங்குவது வாஸ்தவம் தான். உயிரோடு இருக்கும் ஆட்களின் தோற்றத்தில் பொம்மைகள் நடமாடும்போது, நாம் கம்பேர் பண்ணுவது இயல்பு தான். ஆனால் முதல் அரைமணி நேரத்தில் ‘ஓகே’ என்று செட்டில் ஆகிவிடுகிறோம்.

சிறுவன் ராணா கோட்டயப்பட்டினம் நாட்டில் இருந்து, அவர்களின் எதிரி நாடான கலிங்கபுரிக்கு போவதில் ஆரம்பிக்கிறது படம். அங்கே வளரும் ராணா, தன் வீரத்தால் படைத்தளபதியாக ஆகிறார். மனதிற்குள் ஒரு திட்டத்தோடு காய் நகர்த்தி, அந்த நாட்டின் மன்னன் ஜாக்கிசெராப் - இளவரசர் ஆதியை ஏமாற்றி, தான் நினைத்தபடியே கோட்டயப்பட்டினத்திற்கு ஒரு வீரனாகத் திரும்பி வருகிறார். 

கலிங்கபுரியில் மாமா நாகேஷ் (ஆம், அவர் கேரக்டரையும் பொருத்தமாக உருவாக்கியிருக்கிறார்கள்) கோச்சடையானின் தங்கையை வளர்த்து வருகிறார். கோச்சடையானின் அண்ணன் சிறுவயதிலேயே காணாமல் போய் விட்டதாகச் சொல்கிறார் நாகேஷ். ராணாவின் தங்கையை இளவரசர் சரத் குமார் காதலிக்க, இளவரசி தீபிகா படுகோனே ராணாவை காதலிக்கிறார். இந்த பண்டமாற்று முறை அரசர் நாசரை கடுப்பேற்றிவிடுகிறது. கூடவே ராணாவின் பழி வாங்கும் கதையும் சேர்ந்துகொள்ள, படம் அதன்பின் ஜெட் வேகத்தில் செல்கிறது.

உண்மையில் இந்தப் படத்தைக் காப்பாற்றுவது கே.எஸ்.ரவிகுமாரின் கதை-திரைக்கதை-வசனம் தான். கதை வலுவாக இருப்பதால், கொஞ்ச நேரத்திலேயே அனிமேசன் படம் என்பதை மறந்து படத்தில் ஒன்றிவிடுகிறோம்.இது அனிமேசன் இல்லை, மோசன் கேப்சரிங் டெக்னாலஜி என்றெல்லாம் சொல்கிறார்கள். நம் சிற்றறிவுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. சில இடங்களில் முகத்தில் உணர்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதைத் தான் சொல்கிறார்களோ, என்னவோ. நமக்கு எல்லாமே பொம்மை தான்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசையும் பாடல்களும் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கின்றன என்றே சொல்லலாம். மெதுவாகத்தான், கண்ணே கனியே, சில்லென்ற என எல்லாமே அட்டகாசமான பாடல்கள். காட்சிப்படுத்திய விதமும் பிண்ணனிக் காட்சிகளும் நன்றாகவே வந்திருக்கின்றன. படத்தின் ட்ரைலரும் பாடல் டீசரும் மொக்கையாகத் தெரிந்தன. ஆனால் தியேட்டரில் நன்றாகவே இருக்கின்றன. 

அனிமேசன் கேரக்டர்களில் சூப்பர் ஸ்டார், நாசர், சோபனா, ஆதி உருவங்கள் அருமை. சரத் குமார், ஜாக்கி செராஃப் உருவங்கள் பரவாயில்லை. ஆனால் மிகவும் மோசம், தீபிகா படுகோனே மற்றும் தங்கையாக வரும் ருக்மிணி(பொம்மலாட்டம் ஹீரோயின்), சண்முகராஜா உருவங்கள் தான். அதிலும் தீபிகாவை க்ளோசப்பில் காட்டும்போது.......ஆத்தீ! 

அதென்னவோ தெரியவில்லை, எல்லா சரித்திரப்படங்களிலும் மன்னன் மகளையே ஹீரோக்கள் லவட்டுகிறார்கள். அந்தக் காலத்திம் நம் மன்னர்களுக்குப் பெரும் தலைவலியாக இந்தப் பிரச்சினை இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அவதார் படத்தின் பட்ஜெட்டும் அவர்களின் டெக்னிகல் வசதிகளும் கோச்சடையானை விட, பலமடங்கு அதிகம். எனவே அதனுடன் இந்த ’ஸ்லோ’ மோசனை கம்பேர் செய்வது நியாயம் அல்ல. ஆனாலும் இந்திய சினிமா வரலாற்றில் இது புதிய தொடக்கமாக அமையலாம். அந்தவகையில் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இதுவரை அனிமேசன் படங்களுக்கென்று, தமிழ் சினிமாவில் மார்க்கெட் கிடையாது. இனி அது உருவாகலாம்.  அதே போன்றே மற்ற ரஜினி படங்களை நினைத்துப் பார்த்தாலும் கஷ்டம் தான். இரண்டு மணிநேரத்தில் படம் முடிவது, இன்னொரு ஆறுதல்.

கிளைமாக்ஸில் ராணா தன் தாயின் சபதத்தை நிறைவேற்றிவிடுகிறார். ஆனால் அதனாலேயே தந்தை கோச்சடையானின் சபதத்தை மீறிவிடுகிறார். படத்தின் இறுதிக்காட்சியில் காணாமல் போன அண்ணன் சோணா (அதுவும் ரஜினி தான்) வந்து நிற்கிறார். தம்பியும் அண்ணனும் மோத வேண்டிய சூழலில்.........தொடரும் போட்டு விடுகிறார்கள். சோ, இன்னொரு பாகமும் வரலாம்!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- படத்தைப் பற்றி நெகடின் இமேஜ் வரும் அளவிற்கு படத்தை உருவாக்க நேரம் எடுத்துக்கொண்டது
- படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல், கேப்டன் கூட்டணிப் பேச்சுவார்த்தை போல் விளையாட்டு காட்டியது
- மூலம் வந்தவங்க மாதிரி, காலை அகட்டி அகட்டி பல கேரக்டர்கள் நடப்பது
- என்ன இருந்தாலும், இது சூப்பர் ஸ்டார் படம் இல்லை 

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நச்சென்று எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்
- போரடிக்காமல் நகரும் திரைக்கதை
- கோச்சடையான் ஃப்ளாஷ்பேக்
- ஏ.ஆர்.ரஹ்மான்
- ரசிக்க வைத்த நாகேஷ்

பார்க்கலாமா? :
அதிகம் எதிர்பார்க்காமல் இது பொம்மைப் படம் என்ற புரிதலுடன் போனால், ஒருமுறை பார்க்கலாம். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget