சிறுவாணி விமர்சனம்

நடிகர் : சஞ்ஜய்
நடிகை : ஐஸ்வர்யா
இயக்குனர் : ரேஸ்கோர்ஸ் ரகுநாத்
இசை : தேவநேசன் சொக்கலிங்கம்
ஓளிப்பதிவு : வி ஏ ராமலிங்கம்


கோவையில் ஆராய்ச்சி கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் நாயகன் சஞ்சய். இவர் படிக்கும் கல்லூரியிலேயே நாயகி ஐஸ்வர்யாவும் படித்து வருகிறாள். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து அறிமுகமாகி காதலித்து வருகிறார்கள். இந்நிலையில், இவர்கள் படிக்கும் கல்லூரி புரொபசரான தயா, கோவைக்கு அருகில் உள்ள செம்மேடு என்கிற கிராமத்தில் உள்ள காட்டில் யுரேனியம் தாது இருப்பதாகவும், இதை கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சி குழுவுடன் காட்டுக்குள் செல்லவும் அரசாங்கத்தின் உதவியை நாடுகிறார்.

இவரைப்போலவே டாக்டர் ராயும், அந்த காட்டுக்குள் இருக்கும் யுரேனியம் தாது பொருளை கண்டுபிடிக்க அரசாங்கத்தின் உதவியை நாடி வருகிறார். ஆனால், கடைசியில் காட்டுக்குள் சென்று ஆராய்ச்சி செய்யும் உத்தரவை புரொபசர் தயாவுக்கு அரசாங்கம் அளிக்கிறது.

அதன்படி, சஞ்சய், ஐஸ்வர்யா, சுரேஷ் உள்ளிட்ட 7 மாணவர்களுடன் புரொபசர் தயாவும் இணைந்து காட்டுக்குள் செல்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய உதவிகளை காட்டு இலாகா அதிகாரிகளும், போலீசாரும் செய்து கொடுக்கின்றனர். மறுமுனையில், தனக்கு கிடைக்காத வாய்ப்பு புரொபசர் தயாவுக்கு கிடைத்ததில் டாக்டர் ராய் வருத்தமடைகிறார். இதனால் காட்டுக்குள் செல்லும் ஆராய்ச்சி குழுவை ரகசியமாக நோட்டமிட ஒரு நபரை நியமிக்கிறார் ராய். அவர்களின் நடவடிக்கைகளை அந்த நபர் ரகசியமாக நோட்டமிடுகிறார். 

இந்நிலையில், சுரேஷும் அந்த குழுவில் உள்ள ஒரு மாணவியும் காதலர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒருநாள் காட்டுக்குள் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும்போது, சுரேஷ் அவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான். ஆனால், இதுபிடிக்காத அவளது காதலி, அவனை பிடித்து தள்ளுகிறாள். இதனால் மனமுடைந்த சுரேஷ் அவளை அடிக்கிறான். அவள் கீழே உள்ள கல்லில் விழுந்து பலத்த அடிபட்டு இறந்துபோகிறாள். 

இந்த கொலையை மறைக்க அந்த காட்டுக்குள் இருக்கும் புதைகுழிக்குள் அவளின் பிணத்தை போடுகிறான் சுரேஷ். ஆனால், இந்த கொலையை ரகசியமாக படம் பிடித்துவிடுகிறாள் நாயகி ஐஸ்வர்யா. இதை பார்த்ததும் அவளை துரத்துகிறான். இவனிடம் பிடிபடாமல் காட்டுக்குள் ஓடிப்போய் மறைந்துவிடுகிறாள் ஐஸ்வர்யா. அவளை, ராய் அனுப்பிய நபர் கடத்திக் கொண்டுபோய் ராயிடம் ஒப்படைக்கிறார். 

ராய், நாயகனுக்கு போன் போட்டு, ஆராய்ச்சி பற்றிய தகவல்களை தனக்கு தெரிவித்தால், அவனது காதலியை விடுவிப்பதாக மிரட்டுகிறார். நாயகனும், அதற்கு பணிந்து, ஆராய்ச்சி பற்றிய தகவல்களை ராய்க்கு அனுப்பி வைக்கிறார். இந்நிலையில், சுரேஷின் காதலியும், ஐஸ்வர்யாவும் தொலைந்துபோனதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கின்றனர். போலீசார் அவர்களை தேட மலைவாழ் மக்களின் உதவியை நாடுகிறது. அவர்களும் காட்டுக்குள் சென்று அவர்களை தேடிப் பார்க்கின்றனர். 

ஒருகட்டத்தில் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் நாயகி ஐஸ்வர்யா, காட்டுக்குள் இருக்கும் தனது சக நண்பன் ஒருவனுக்கு சுரேஷ் பற்றிய ரகசியங்களை போன் போட்டு சொல்கிறாள். இதை தெரிந்துகொண்ட சுரேஷ், அவனை கொன்று, தனது காதலியை தூக்கிப்போட்ட புதை குழியிலேயே இவனையும் போடுகிறான். தொலைந்துபோனவர்களை தேடிக் கொண்டிருக்கும் மலை வாழ் மக்களின் தலைவன் நெல்லை சிவாவுக்கு, புதை குழிக்குள் அவர்கள் விழுந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது. அதனால், புதை குழியில் சோதனை செய்ய போலீசாருக்கு சொல்ல நினைக்கிறார்.

இந்த விஷயம் போலீசிடம் சென்றால் நாம் மாட்டிக்கொள்வோம் என்று பயந்து, மலை வாழ் மக்களின் தலைவனையும் அந்த புதை குழிக்குள் தள்ளிவிட்டு கொன்றுவிடுகிறான் சுரேஷ். இறுதியில், இந்த கொலைகளை செய்த சுரேஷை, நாயகன் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தாரா? இவர்கள் செய்த ஆராய்ச்சி வெற்றியில் முடிந்ததா? தனது காதலியை ராயிடம் இருந்து நாயகன் மீட்டு, வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தாரா? என்பதை கிரைம் பின்னணியில் எடுத்திருக்கிறார்கள்.

நாயகன் சஞ்சய், கல்லூரி மாணவனாக பளிச்சிட்டாலும் காதல் காட்சிகளில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார். நாயகி ஐஸ்வர்யாவுக்கு அழகாக வந்து அழுத்தம் பதித்திருக்கிறார். சஞ்சய் நண்பராக வரும் சுரேஷுக்கு இந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் அதை செவ்வனே செய்து அசத்தியிருக்கிறார். மற்றபடி, படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும், அவர்களின் நடிப்பு எதுவும் மனதில் நிற்கவில்லை.

இயக்குனர் ரகுநாத், கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் கதையை கையில் எடுத்துக்கொண்டு அதை சிறப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அதற்கு தேவையான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலும், திரைக்கதையிலும் கோட்டை விட்டுவிட்டார். ஒரு கிரைம் கதையில் பயணிப்பதுபோன்ற உணர்வே இல்லாதது படத்திற்கு பெரிய இழப்பு.

தேவா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்தான். ராமலிங்கம் ஒளிப்பதிவில் காட்டில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் அருமை.

மொத்தத்தில் ‘சிறுவாணி’ ருசியில்லை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget