கடந்த 1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 என்ற இரு விண்கலங்களை விண்ணிற்கு அனுப்பியது. வாயஜர் 1 விண்கலம் ஆனது மணிக்கு 38,000 மைல்கள் வேகத்தில் சூரியனின் வடக்கு பகுதியிலும், வாயேஜர் 2 விண்கலம் மணிக்கு 35,000 மைல்கள் வேகத்தில் சூரியனின் தென் பகுதியிலும் சுற்றி வருகிறது. பூமியில் காற்று இருப்பது போல் சூரியனின் வெளிப்பகுதியில் காற்று மற்றும் வாயுக்கள் ஆகியவை உள்ளன. ஆனால் இவை மணிக்கு 1 மில்லியன் மைல்கள் அளவு திசைவேகம் கொண்டவை. இந்த பகுதியை ஹீலியோபாஸ் என அழைக்கின்றனர். இந்த காற்று பகுதியை 2004 ஆம் ஆண்டிலிருந்து வாயேஜர் விண்கலம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் இந்த பகுதியை விண்கலம் வாயேஜர் 1 நெருங்கியதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஹீலியோபாஸின் எல்லை பகுதியில் உள்ள காற்றின் திசைவேகம் விண்கலத்தின் சுற்றுவேகத்திற்கு இணையாக இருப்பது இதற்கு சான்றாக அமைந்துள்ளது. இதனை கடந்த சில மாதங்களாக நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். நாசாவின் விஞ்ஞானியான எட்வர்டு ஸ்டோன், இந்த தருணத்தை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். விண்கலம், ஹீலியோபாஸ் பகுதியை நெருங்கி கொண்டிருக்கிறது, இன்னும் 4 வருடங்களில் விண்கலம் வாயேஜர் 1 சூரிய மண்டலத்தை கடந்து மிகவும் குளிர்ந்த மற்றும் அடர்ந்த வாயுக்கள் அடங்கிய இன்டர்ஸ்டெல்லார் என்ற பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.