வாழ்வின் உயிர்நாடியாக இருப்பது கார்பன். எல்லா உயிரினங்களிலும், எல்லா பொருட்களிலும் குறைந்தது ஒரு சதவிகிதமாவது இத்தனிமம் உள்ளது. தனிம அட்டவணையில் 6-வது இடத்தில் இருப்பது இதுதான். கார்பனில் ஒவ்வொரு அணுவும் மற்ற நான்கு அணுக்களுடன் உறுதியாகப் பிணைந்துள்ளன. இந்த நான்கில் ஒவ்வொன்றும் வேறு நான்கு அணுக்களுடன் இணைந்துள்ளன. இவற்றைப் பிரிப்பது கடினம்.
கரியின் பலவகைகள் கார்பனையே குறிக்கின்றன. கார்பன் என்ற இத்தனிமம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியவில்லை. `கிரா’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு `கொதிக்க வைக்கும்’ என்ற பொருள் உண்டு. கரி என்ற பொருள்படும் லத்தீன் மொழிச் சொல்லின் வேர் இதிலிருந்து தோன்றியது என்று கூறப்படுகிறது.
பெண்களின் காதிலே மின்னும் வைரத் தோடுகள், ஓவியர்கள் கையில் உள்ள பென்சில் எல்லாமே கார்பன்தான். உயிரினங்கள் வாழ கார்பன் இன்றியமையாதது. கார்பனோ அதன் சேர்மங்களோ இல்லாத பொருட்களே இல்லை.