குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன் என்றொரு கருத்து அறிவியலாளர்களிடம் நிலவி வருகிறது. இதனை மறுப்பவர்களும் உண்டு. மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறு எந்த விலங்குடன் பொருந்துகிறது என்ற ஆராய்ச்சியின் பயனாக சிம்பன்சி இன குரங்குகளின் டி.என்.ஏ. மூலக்கூறு 99 சதவீதம் ஒத்துபோவது கண்டறியப்பட்டது. தற்போது ஒரங்குட்டன் எனப்படும் வாலில்லா குரங்கு வகையின் டி.என்.ஏ. மூலக்கூறு 97 சதவீதம் மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறுடன் பொருந்தி காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சர்வதேச ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஆய்வாளர்கள் சூயிஸ் என்ற பெயரிடப்பட்ட சுமத்ரா இன பெண் ஒரங்குட்டனை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். பின்பு ஐந்து போர்னியன் மற்றும் ஐந்து சுமத்ரா இன ஒரங்குட்டன்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் இரு இனங்களுக்கும் இடையே டி.என்.ஏ. அமைப்பில் 13 மில்லியன் வேறுபாடுகள் இருப்பதை பதிவு செய்தனர். மேலும் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விரு இனங்களும் பிரிந்திருக்கக்கூடும் என அவர்கள் கண்டறிந்தனர். தற்போது 50,000 போர்னியன் மற்றும் 7,000 சுமத்ரா இன ஒரங்குட்டன்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக கணக்கிட்டுள்ளனர். காடுகள் அழிக்கப்படுவதால் அழிந்து வரும் நிலையில் உள்ள ஒரங்குட்டன் இன குரங்குகளின் மறுவாழ்வுக்கு இந்த ஆய்வு முடிவானது ஒரு தீர்வை தரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.