ஜூராசிக் பார்க் என்ற ஹாலிவுட் திரைபடத்தில் டைனோசார் தோன்றுவதை பார்த்திருப்போம். சுமார் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசார் இனம் வாழ்ந்து வந்துள்ளது. அப்பொழுது பூமியின் மீது விண்வெளியில் இருந்து சக்தி வாய்ந்த பெரிய விண்கல் ஒன்று மோதியதாகவும் அதனால் ஏற்பட்ட பேரழிவால் அந்த இனம் அடியோடு அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர். தற்போது டைனோசார் பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்த டைனோசார்கள் தாவரம் மட்டும் உண்பவை, மாமிசம் உண்பவை, நில வாழ்வன, நீர் வாழ்வன என பல பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஹேட்ரோசார் என்ற டைனோசார் தாவர உண்ணி வகையை சேர்ந்தது. அளவில் மிக பெரியதாக காணப்படும் இதனுடைய வாய் பகுதி பிளாட்டிபஸ் என்ற நீர்வாழ் உயிரினத்தின் அலகு போல் காணப்படும். தற்போது நியூ மெக்சிகோவில் இவ்வகை டைனோசார் ஒன்றின் எலும்பு புதைபொருளாக கிடைத்து உள்ளது. இதனை ஆய்வு செய்ததில் அதன் வயது 64.8 மில்லியன் ஆண்டுகள் என கணக்கிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் முன்பு குறிப்பிட்ட வருடங்களை விட 7 லட்சம் ஆண்டுகள் அதிகமாக இவ்விலங்கு பூமியில் வாழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் தலைவர் லேரி ஹீமேன் கூறும்போது, தாவரங்களை உண்டு வாழ்ந்த இந்த டைனோசார்களுக்கு போதுமான அளவு தாவர உணவு சில இடங்களில் கிடைத்துள்ளது. அதனால் குறிப்பிட்ட அளவு ஹேட்ரோசார்கள் பேரழிவு காலத்திலிருந்து தப்பி மீதமிருந்த தாவரங்களை உண்டு உயிர் வாழ்ந்துள்ளன என அவர் கூறினார்.