சுனாமி என்றால் என்ன?

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய அலைகளாக மாறுகின்றன. சுனாமி ஏற்படும் போது கடற்கரையில், அலையின் உயரம் நிலநடுக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும். கரையில் இருந்து அதன் உயரத்துக்கு ஏற்ப கடல்நீர், தரைப்பகுதிக்குள் ஊடுருவும். பின், இந்த பெரிய அலைகள் தரையில் பரவிய இடத்துக்கு பின்னே, தொடர்ந்து நீர் அலைகள் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கும். சுனாமி அலைகளின் உயரத்துக்கு ஏற்ப அதன் சேதம் இருக்கும்.சுனாமி அலைகளின் தாக்கத்துக்கு பின், அந்த தரைப்பகுதியில் பெரிய மாற்றம் இருக்கும். இப்படி கடல்நீர் சுனாமி அலையின் மூலம் இடம் பெயர்வதால், முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும், நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.

ஜெட் வேகத்தில் சீறும் சுனாமி : * கடற்பரப்புக்கு கீழ், கண்ணுக்கு தெரியாத சிறிய வடிவத்தில் சுனாமி உருவாகும். கடலின் மேல் பகுதியில் இருக்கும் கப்பலில் கூட, சுனாமி உருவாவதை உணர முடியாது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, இந்த சுனாமி மிகப்பெரிய அளவில் உருவாகி, கடல் பரப்பு முழுவதும் வேகமாக பரவும்.
* சுனாமி என்பது ஒரே ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும். இந்த அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ., வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். இந்த அலைகளின் வேகம், ஜெட் விமானத்தின் வேகத்துக்கு சமமானதாக, சில சமயத்தில் கூடுதலாக கருதப்படுகிறது.
* சுனாமி அலைகள் கரையை நோக்கி அதிவேகமாக சீறிப் பாய்ந்து செல்லும்போது, கடலுக்குள் இருந்த தண்ணீரின் கணிசமான பகுதி காலியாகி விடும். கடலின் கீழ்ப்பரப்பில் உள்ள பவளப் பாறைகள் கூட, கண்ணுக்கு தெரியும். அந்த அளவுக்கு, தரைப்பகுதி தெரியும்.
* சுனாமி அலைகள் மிகவும் பிரமாண்ட உயரத்தில் வருவதால்தான், அழிவு ஏற்படுவதாக தவறான கருத்து கூறப்படுகிறது. கடலில் உள்ள பெரும்பகுதி தண்ணீர், வெள்ளமென புறப்பட்டு வருவதன் காரணமாகவே அழிவு ஏற்படுகிறது. கடலில் இருந்து வேகமாக வரும் வெள்ளம், அதன் பாதையில் உள்ள அனைத்து பொருட்களையும் துவம்சம் செய்து விடும். இதன்பின், அந்த நீர் வேகமாக கடலுக்கு திரும்பும். சுனாமி அலைகள் கரையை நோக்கி வரும்போது, ஒருசிலர், அதை சமாளித்து தப்பி விட முடியும். ஆனால், சுனாமி அலைகள், கடலை நோக்கி வேகமாக திரும்பும்போது, கடலுக்குள் எல்லாமே அடித்துச் செல்லப்படும்.

உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள் : இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:
1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.
1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.
1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்
1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்
1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.
1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.
1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.
2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.
அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.
2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.

எப்படி சமாளிக்கிறது ஜப்பான்?ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்த நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை பெருமளவில் பயனளித்து வருகின்றன.
* 1952ல் ஜப்பான் வானிலை மையத்தால் (ஜே.ஏ.எம்.,) சுனாமி எச்சரிக்கை சேவை துவங்கப்பட்டது.
*பசிபிக் பிராந்தியத்தில் இயங்கி வரும், ஆறு கண்காணிப்பு மையங்களில் இருந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை, இந்த எச்சரிக்கை மையம் பெற்று உரிய நேரத்தில் அரசுக்குத் தகவல் அளிக்கும்.
*நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்றே நிமிடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கையையும் ஜே.ஏ.எம்., விடுக்கும்.
* அதையடுத்து தேசிய ஒளிபரப்பு நிலையமான என்.எச்.கே., நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை விரிவாக வெளியிடும்.
* நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், பொது இடங்களில், அவசர அறிவிப்புக்காக ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூலம் மக்கள் உஷார் படுத்தப்படுவர்.
*நிலநடுக்கம் ஏற்பட்டால் மேசைகளுக்கு அடியில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில், நிலநடுக்கப் பாதுகாப்பு மையங்கள் எங்கெங்கு உள்ளன என்று இளைய தலைமுறை
யினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அதேபோல், கடுமையான நிலஅதிர்வைத் தாங்கும் வகையில் அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புகள், வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. வழக்கமான செங்கல், மணல் அல்லாமல் ரப்பர், பைபர் போன்றவற்றாலும் வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறைக்கப்பட்டுள்ளது.
* கடுமையான அதிர்வு ஏற்படும்போது, புல்லட் ரயில் சேவைகள் மற்றும் அணு உலைகள் தானியங்கி முறை மூலம், உடனடியாக இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி விடும்.

பசிபிக் கடல் பகுதியில் அச்சத்தில் பல நாடுகள் : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, நேற்று பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, பயங்கரமான சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. இதனால் எச்சரிக்கை அடைந்த அமெரிக்க நிலவியல் நிபுணர்கள், அதன் விளைவு குறித்து ஆராய்ந்தனர். ஜப்பானின் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால், அங்கு புறப்படும் சுனாமி அலை மணிக்கு 500 மைல் வேகத்தில், பசிபிக் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதிகளை 24 மணி நேரத்திற்குள் தாக்கும் என்பதால், அப்பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலைகளின் உயரம்15 அடி முதல் 21 அடி உயரம் வரை இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து பசிபிக் பிராந்தியத்தில் உள்ள குவாம், தைவான், ஹவாய், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா, சமாவோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹவாய், வட அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மெக்சிகோ, மத்திய அமெரிக்காவின் நிகரகுவா, தென் அமெரிக்காவின் பெரு, சிலி ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.இவை தவிர சிறு தீவு நாடுகளான பிஜி, கவுதமாலா, எல் சல்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால், ஹவாய் தீவுக்கு சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் உடனடியாக ஆபத்தான கடற்கரைப் பகுதிகளில் இருந்து, உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.ஜப்பானின் வடபகுதியில் உள்ள குரில் தீவுகளில் இருந்து, 11 ஆயிரம் மக்களை ரஷ்ய அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

பசிபிக் பிராந்தியத்தில் சுனாமி ஏற்படுவது குறித்து, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த பால் கன்னலி கூறுகையில்,”இதுபோன்ற இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கு, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பதுதான் எங்களது பெரும் கவலையாக உள்ளது. இந்த சுனாமி அந்த நாடுகளுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகத் தான் இருக்கும்’ என்று தெரிவித்தார்.

பூமிக்கு அருகே சந்திரன் அழிவுக்கு பஞ்சமில்லை : பூமிக்கு அருகே சந்திரன், கடந்த 19 ஆண்டுகளுக்குப் பின், வரும் 19ம் தேதி 2,21,567 கி.மீ., தூரத்தில் வருகிறது. எப்போதெல்லாம் சூரியனுக்கு அருகே சந்திரன் வருகிறதோ, அப்போதெல்லாம் சுனாமி, எரிமலை வெடிப்பு, பயங்கர அழிவுகள் ஏற்படுகின்றன என்று, விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.பூமிக்கு அருகில் சூரியன் இம்முறை வருவதற்கு, “சூப்பர் மூன்’ என்று பெயரிட்டுள்ளனர். இதனால், பூமியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்; பகல் அதிகமாக இருக்கும். சந்திரன் உருவத்தில் பெரிதாக காணப்படும்.விஞ்ஞானிகள் கணித்ததை போல், ஜப்பானில் சுனாமி கோரம் அரங்கேறியுள்ளது. கடந்த 1947, 1974, 1992, 1995, 2004 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போதும் இதுபோன்ற கோர சம்பவங்கள் நடந்துள்ளன. 1974 ல் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போது ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரை புரட்டிப் போட்டது. 1995ம் ஆண்டு ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அணுக்கதிர் வீச்சை தடுக்க ஜப்பானில் அவசர நிலை : ஜப்பானின் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டன.

எரிமலை வெடிப்பு: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்கள் கழித்து, இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசியா தீவுக் கூட்டத்தில் உள்ள சியாவூ தீவில் உள்ள கரங்கடெங் எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 5,853 அடி உயரத்தில் உள்ள இந்த எரிமலையில் இருந்து நேற்று நெருப்புக் குழம்பும், புகையும் வெளிப்பட துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் அணு உலைகள்: ஜப்பானில் மொத்தம் 53 அணு உலைகள் உள்ளன. இவற்றில் இருந்து 34.5 சதவீதம் மின்சாரம் உற்பத்தியாகிறது. மிக அதிகளவில் அணு உலைகள் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானுக்கு 3வது இடம்.தற்போது சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில், ஒனகாவா, ஹிகாஷிடோரி, புக்குஷிமா, டோக்காய், டொமரி ஆகிய ஐந்து அணு உலைகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலநடுக்கத்தில், ஒனகாமாவும், புக்குஷிமாவில் உள்ள சில பிரிவுகளும் இயங்கவில்லை. பேரழிவு மற்றும் அபாய காலங்களில் இவை தாமாகவே இயங்காத அமைப்பைக் கொண்டவை. அணுக்கதிர் வீச்சு அபாயத்தை தடுக்க “அணு சக்தி மின்சார அவசர நிலையை’ அரசும் அறிவித்தது.

ஜப்பான் சுனாமியில் சிக்கிய ஆயிரம் பேரின் கதி என்ன?ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஆயிரம் பேரை காணவில்லை. இதுவரை 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நேற்று 8.9 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர சுனாமியால், செண்டாய் உள்ளிட்ட நகரங்கள் மூழ்கின. செண்டாய் நகரில் உள்ள வகாபாயாஷி பகுதியில் 300 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்தவர்களை காணவில்லை. சென்டாய் – இஷினோமேகி பகுதிக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. இதே போல, ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை காணவில்லை. எனவே, சுனாமியால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget