சூரியனில் இருந்து ஒன்பதாவதாக அமைந்திருக்கும் கிரகம், புளூட்டோ. இதுதான் சூரியக்குடும்பத்திலேயே மிகச்சிறிய கிரகமாகும். அதேபோல், சூரியக்குடும்பத்தின் கடைசி எல்லையில் இருக்கும் கிரகமும் இது தான். புளூட்டோவைப் பற்றிய சில தகவல்களை இங்கு காண்போம்.
கண்டுபிடிப்பு
சூரியனில் இருந்து எட்டாவதாக அமைந்திருக்கக் கூடிய நெப்டின் கிரகத்திற்கு அப்பால் ஒரு கிரகம் இருக்கக் கூடும் என்ற உண்மையை எடுத்துரைத்தவர், பெர்சிவல் லோவல். இவர், அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் அறிஞர். செவ்வாய்க் கிரகம் குறித்து பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டவர். இவர் இறந்து (1916) 14 ஆண்டுகளுக்குப் பிறகு தான் `புளூட்டோ’ கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி இந்தக் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டறிந்தவர், வானியல் ஆராய்ச்சியாளரான கிளைட் டாம்பே. மிகச்சிறிய கிரகமாக இருந்தாலும், பெரிய நீள்வட்டம் போட்டு சூரியனைச் சுற்றி வருகிறது. இது சூரியனுக்கு 440 கோடி கிலோமீட்டர் அருகாமையிலும், 730 கோடி கிலோமீட்டர் தூரத்திலும் நீள்வட்டம் போடுகிறது.
எட்டாவது கிரகம் சில சமயங்களில், நெப்டினின் சுற்றுப்பாதையைத் தாண்டி சூரியனுக்கு அருகில் வந்து விடுகிறது இந்தக் கிரகம். அதுபோன்ற சமயங்களில் நெப்டினே சூரியனில் இருந்து தொலைவில் இருக்கும் கிரகமாகக் கருதப்படும். கடந்த 1979-ம் ஆண்டு ஆண்டிலிருந்து 1999-ம் ஆண்டு வரை புளூட்டோ இப்படி இருந்ததால், நெப்டின் தான் கடைசி கிரகமாக இருந்தது. பின்னர் வழக்கம்போல தூரத்துக்குச் சென்றுவிட்டது புளூட்டோ. சூரியனைச் சுற்றும் காலம்புளூட்டோ, ஒருமுறை சூரியனைச் சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம், 248 ஆண்டுகள். இதில் 228 ஆண்டுகள் ஒன்பதாவது கிரகமாகவும், 20 ஆண்டுகள் எட்டாவது கிரகமாகவும் இருக்கும். இப்படி எட்டாவது இடத்துக்கு புளூட்டோ வரும்போது, நெப்டினின் பாதையில் குறுக்கிட்டாலும், இரண்டின் சுற்றுப்பாதைகளும் மிகப்பெரியவை என்பதால், இதுவரை இவை இரண்டும் மோதிக்கொள்ளும் ஆபத்து ஏற்பட்டதில்லை. ஆய்வு செய்வதற்காக இதுவரை எந்த விண்கலமும் அனுப்பப்படாத கிரகம், புளூட்டோ. ஆராய்ச்சியாளர்கள் இதனை `மிகவும் மர்மமான கிரகம்’ என்றே வர்ணிக்கின்றனர். துணைக் கிரகம்
புளூட்டோவின் துணைக் கிரகம், காரோன். இது 1978-ம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளரான ஜேம்ஸ் கிறிஸ்டி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது புளூட்டோவில் இருந்து சுமார் 12 ஆயிரத்து 200 மைல் தொலைவில் உள்ளது. காரோனின் விட்டம், சுமார் ஆயிரத்து 200 கிலோமீட்டர். புளூட்டோ மற்றும் காரோன் ஆகிய இரண்டும் ஒரே அளவுடையவை. இவை இரண்டும் இரட்டைக் கிரகங்கள் போல, ஒன்றையொன்று பார்த்தவாறு சுற்றி வருகின்றன. புளூட்டோ, இரண்டு மாறுபட்ட பகுதிகளால் ஆனது. ஒரு பகுதியில் பனியும், பனி இல்லாத மற்றொரு பகுதியையும் கொண்டது. பனிப்பகுதி, உறைந்த நைட்ரஜனால் ஆனது. மேலும், சிறிதளவு உறைந்த கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் ஆகியவற்றையும் அந்த பனிப்பகுதி பெற்றுள்ளது.