`போன்சாய்’ என்பது ஜப்பானிய முறையில் தாவரங்களை வளர்க்கும் முறையாகும். `போன்சாய்’ என்பதற்கு ஜப்பானிய மொழியில் ஒரு மரத்தையோ அல்லது தாவரத்தையோ குட்டையான தொட்டியிலோ அல்லது தட்டிலோ அழகுக்காக வளர்க்கும் பூந்தோட்ட முறை என்று பொருள். இதில் கலையும் அறிவியலும் இணைந்திருப்பதை உணர முடியும்.
போன்சாய் கலை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் தோன்றியது. இம்முறையில் செடிகளை வளர்க்க விரும்புகிறவர்கள், பொதுவாக மரத்தன்மை கொண்ட தாவரங் களையே தேர்ந்தெடுப்பார்கள். எடுத்துக்காட்டாக, மா, நாவல், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, எலுமிச்சை போன்ற பலன் தரக்கூடிய செடி வகைகளையும், அழகுக்காக வளர்க்கக்கூடிய காகிதப் பூச்செடி போன்றவற்றையும் தேர்ந்தெடுப்பார்கள். இம்முறையில் செடிகளை வளர்க்கக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்: 10 செ.மீ. உயரத்துக்குக் குறைவான தொட்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், இயற்கை உரம் நிறைந்த மண்ணை இடவும். பிறகு, தாங்கள் விரும்பும் சிறுசெடியை வேருடன் பிடுங்கி, பிரதான இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வேர்களையும், தண்டின் அடிப்பகுதியில் 3 அல்லது 4 இலைகளை விட்டுவிட்டு மற்ற னி இலைகளையும் வெட்டிவிட வேண்டும்.
தொட்டியில் குறைந்த அளவுக்கு நீர் விடவும். அவ்வப்போது தொட்டியை வெயிலில் வைத்து ஒளிச்சேர்க்கை நடைபெறும்படி பார்த்துக்கொள்ளவும். இவ்வாறு ஆறு மாதத்துக்கு ஒருமுறை செடியைத் தொட்டியிலிருந்து எடுத்து வேர்களையும், இலைகளையும் வெட்டி விடவும். இவ்வாறு வளர்ந்த தாவரங்கள் சிறியதாக இருக்கும். ஆனால் நான்கு அல்லது ஐந்தாண்டுகள் கழித்துப் பலன் தரத் தொடங்கும்.