அறிவியலில் எடைகள் மிக முக்கியமானவை. அளவைகள் இல்லாவிடில் அறிவியலே இல்லை. எல்லாப் பொருட்களும் வெளியில் ஓர் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. பொருட்கள் இல்லாத இடைவெளிகளும் உண்டு. ஒரு பொருளுக்கும், இன்னொரு பொருளுக்கும் இடையே உள்ள தூரத்தை நாம் நீளம் என்கிறோம். பரப்பைக் கண்டுபிடிக்க நீளம் ஜ் அகலம். இதேபோல் மற்றவையும் உள்ளன.
அளவைகளில் அடிநிலை அளவைகள், வழிநிலை அளவைகள் என்று இரு பிரிவுகள் உள்ளன. நீளம், நிறை, காலம் ஆகிய மூன்றுமே அடிநிலை அளவைகள். பரப்பு, அடர்த்தி, பருமன், வேகம் ஆகியவற்றை அடியொற்றி வருபவை வழிநிலை அளவைகள் ஆகும்.
பல்வேறு நாடுகளிலும் பல்வேறு அளவை முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதில் பிரிட்டீஷ் முறை பரவலாகப் பயன்பாட்டில் இருந்தது. எனினும் அதைக் கொண்டு கணக்கிடுவதில் பல இடர்ப்பாடுகள் இருந்தன. ஒரே சீரான- அதேசமயம் கணக்கிட எளிதாக உள்ள முறையின் தேவை உணரப்பட்டது.
இந்நிலையில், 1791-ம் ஆண்டு பிரான்சில் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தனர். அந்த முறைக்கு `மெட்ரிக்’ என்று பெயர். `மீட்டர்’ என்ற லத்தீன் வார்த்தைக்கு `அளவை’ என்று பொருள். நீளத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட இச்சொல்லில் இருந்துதான் மெட்ரிக் என்ற பெயர் மற்ற அளவைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இம்முறை, கணக்கிட மிகவும் எளிது. எல்லாமே 10-ன் மடங்குகளாக வருவதால் நினைவில் வைத்துக்கொள்வதும் எளிது. தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் எல்லாம் பயன்படுத்தப்பட்டு வரும் முறை இதுதான்.