விண்வெளியில் நடக்கும் அதிசய நிகழ்வுகளை அடிக்கடி தனது செயற்கைகோள்கள் உதவியுடன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புகைப்படமாக வெளியிட்டு வருகிறது. தற்போது, நாசாவின் சூரியமண்டலத்தை ஆய்வு செய்யும் ஆய்வகமான எஸ்.டி.ஒ. ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், சூரியனின் தென்பகுதியில் சூரிய இழை போன்று கிட்டத்தட்ட 4 இலட்சத்து 35 ஆயிரம் மைல்கள் தூரம் சூரியனை சூழ்ந்து ஒளிகற்றை ஒன்று காணப்படுகிறது. இந்த தொலைவானது பூமியில் இருந்து நிலவிற்கு உண்டான தூரத்தை விட இரு மடங்கு ஆகும். இது சூரியனை விட அதிக அடர்த்தியான நிறத்தினை கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு சூரியனை ஒரு பாம்பு சூழ்ந்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிக அடர்த்தி கொண்ட சூரிய இழைகளில் வாயுக்கள் உள்ளன. இது சூரியனின் வெளி வளிமண்டலம் என அழைக்கப்படும் கரோனா என்ற பகுதியில் இருந்து உருவாகிறது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி, இந்த புதிய இழை சூரிய புயலை தோற்றுவிக்கும் பலம் வாய்ந்தது அல்லது அது சூரியனுடனேயே மறுபடியும் ஒன்று சேர்ந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்