புரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய ஆய்வில் கண்டறியப்பட்ட மரபணு குறைபாடு
புற்றுநோய்களில் ஒன்று புரோஸ்டேட் புற்றுநோய். இது ஆண்களுக்கு மட்டுமே வரும் வியாதி ஆகும். அவர்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ள புரோஸ்டேட் சுரப்பிகளில் ஏற்படும் கட்டிகளே நாளடைவில் புற்றுநோய் ஆக மாறுகிறது. பெரும்பாலும் ஆரம்ப நிலையில் இதன் அறிகுறி தெரிவதில்லை. இந்த வியாதி இங்கிலாந்தினரையே அதிகம் தாக்குகிறது. அவர்களில் வருடத்திற்கு சுமார் 35,000 பேர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 10,000 பேர் வரை இறக்கின்றனர். தற்போது, அமெரிக்காவில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மருத்துவ படிப்பு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் புரோஸ்டேட் புற்றுநோய் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர். ஆய்வின் முதற்கட்டமாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட 7 பேர்களின் புற்றுகட்டிகளின் மரபணுவை முழுவதும் பகுப்பாய்வு செய்தனர். பின்னர் அவை ஆரோக்கியமான ஒருவரது மரபணுவுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. அப்பொழுது புற்றுநோய் பாதிப்பு கண்ட மரபணுவின் குறியீடுகளில் ஏறத்தாழ 5,900 எழுத்து பிழைகள் காணப்பட்டன. எனினும் இந்த பிழைகள் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவற்றில் காணப்படுவதை காட்டிலும் மிக குறைவே ஆகும். மேலும் மரபணுவின் பெரும்பான்மையான பகுதிகள் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. இது தொடர்பான ஆய்வுகள் புற்றுநோய்க்கு மேற்கொள்ளப்படும் ரேடியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாக ஒரு எளிய தீர்வினை தரும் என கருதப்படுகிறது.