கூகுள் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது புதிய வசதி ஒன்றைத் தொடர்ந்து தருவது அதன் வழக்கமாகும். அண்மையில் தன் ஜிமெயில் தளத் தோற்றத்திற்கு புதுப் பொலிவு கொடுத்துப் பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேவையானதை முன்னிறுத்தி, தேவையற்றதைப் பின்னுக்குக் கொண்டு சென்று, எளிமை யான, மனம் விரும்பும் வகையிலான அனுபவத்தைத் தர நாங்கள் முனைந்துள்ளோம் என்று கூகுள் அறிவித்துள்ளது.
இப்போது ஜிமெயில் தளம் சென்றீர்களானால், அதன் கீழாக “Switch to the New Look,” என ஒரு கட்டம் தெரியும். இதில் கிளிக் செய்தால், உடனே புதிய தோற்றத்திற்கு உங்கள் தளம் மாறிக் கொள்ளும். (ஆனால், மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிக் கொள்ள வாய்ப்பு தரவில்லை.) ஆனாலும், புதிய தோற்றத்திற்கு மாறிக் கொள்வது கூடுதல் வசதியைத் தருகிறது; தோற்றமும் அழகாக உள்ளது.
மாற்றங்களை சில வகைகளாகப் பிரித்துக் காணலாம். பொதுவாகப் பார்க்கையில் நிறம் மற்றும் லே அவுட் மாற்றப் பட்டுள்ளது. சில இடங்களில் பார்டர்கள் எடுக்கப்பட்டு பிரிவுகள் பளிச் எனக் காட்டப்படுகின்றன.
ஜிமெயில் லோகோ கீழாக, இடது புறம் மெயில் (Mail) என்பதில் கிளிக் செய்தால், Contacts and Tasks கிடைக்கும். முன்பு திறந்தவுடன் தொடர்ந்து காட்டப்பட்டு வந்த Archive, Spam,Delete and Labels ஆகிய ஆப்ஷன்கள், தற்போது மெசேஜ் தேர்ந்தெடுத்த பின்னரே காட்டப்படுகின்றன. பல டூல் பார் ஆப்ஷன் சிறிய கிராபிக் ஆகவோ அல்லது சிறிய டெக்ஸ்ட் அளவிலோ காட்டப்படுகின்றன. ஏற்கனவே உள்ள வரிசை மாற்றப்படவில்லை. இவை என்ன செயல்பாட்டினைத் தருகின்றன என்று அறிய, அவற்றின் மீது கர்சரைக் கொண்டு சென்றால் போதும்.
+/ஆகிய பட்டன்கள் நீக்கப்பட்டு விட்டன. இதற்குப் பதிலாக, மெசேஜ் அனுப்பியவரின் பெயர் அருகே கிளிக் செய்து தேவைப்படும் குறியீட்டினை அமைக்கலாம்.
செட்டிங்ஸ் பிரிவு செல்ல புதிய கியர் ஐகான் தரப்படுகிறது. செட்டிங்ஸ் அமைப்பு சென்றால் “Display Density” எனப் புதிய ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இதனை அணுகி, இதன் மூலம் என்ன என்ன வசதிகள் கிடைக்கின்றன என்று பார்க்கவும்.
மேலும் labels, chat, and gadget ஆகியவற்றிலும் தேவையானதைக் காட்டும் வசதியும், நாம் தேடிப் பயன்படுத்துவதனை அடுத்த முறை மெயில் அக்கவுண்ட் திறக்கையில் காட்டுவதும் புதுமையானதாக உள்ளது.
வந்த மின்னஞ்சல் செய்திகளைப் படிப்பதில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கியமானவற்றை இங்கு காணலாம்.
அஞ்சல்களின் மீது கீ போர்டில் உள்ள ஆரோ கீ மூலம் செல்லலாம். இடது பக்கம் நீல வண்ணத்தில் ஒரு நெட்டுக் கோடு, எந்த அஞ்சல் தற்போது எடுக்கத்தயாராய் உள்ளது எனக் காட்டுகிறது. முன்பு பக்கவாட்டிலான அம்புக் குறி ஐகான் ஒன்று இருந்தது.
ஒவ்வொரு அஞ்சல் அருகிலும் அனுப்பியவரின் படம் காட்டப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட அஞ்சல் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்று அனுப்பியவரின் பெயர் அருகே காட்டப்படுகிறது. அஞ்சல் வரிசையின் இறுதியில் உள்ள அம்புக் குறியினைக் கிளிக் செய்து, அஞ்சல் பெறுபவர்கள், அனுப்பப்பட்ட நாள் போன்ற தகவல்கள் அனைத்தையும் காணலாம். ஒவ்வொரு செய்தி தொகுப்பிலும், அனுப்பியவர், பெறுபவரின் போட்டோக்கள், ஒவ்வொன்றிலும் காட்டப்படுகின்றன.
வலது பக்கம் இருந்த “Reply” பட்டன் இப்போது மேல் எழும்பும் மீன் போன்ற ஒரு அம்புக்குறி ஐகானாக உள்ளது.
இப்போது, உங்கள் அஞ்சல் செய்திகளை Comfortable, Cozy and Compact என மூன்று வகையாகக் காணலாம். எத்தனை அஞ்சல்கள் காட்டப்படுகின்றன என்ற அடிப்படையில் இவை அமைக்கப்படும்.
டூல்பார் பட்டன்கள் அனைத்தும், நாம் அஞ்சல் ஒன்றைத் திறந்தாலே காட்டப்படுகின்றன.
இன்னும் பல நகாசு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றையும் பயன்படுத்துகையில் "நல்ல மாற்றம் தான்' என ரசிக்க முடிகிறது.