இயற்கையின் கொடையான பூமியில் மனித தேவைக்கான புதையல்கள் ஏராளம். அவற்றில் முதலிடத்தில் இருப்பவை காய்கறிகள், பழங்கள்.
உடல் இயக்கத்துக்கு தேவையான சத்துகளை காய்கறிகள் தருவதாகவும் உடலில் தேவையற்ற பொருட்களை பழங்கள் நீக்குவதாகவும் மருத்துவ உலகம் கூறுகிறது.
கிருமி மற்றும் நோய் தாக்குதலில் இருந்தும் இவை நம்மை பாதுகாக்கின்றன. பழங்களிலும் பல்வேறு வகையான சத்துகள் உள்ளன. ஒவ்வொரு பழத்திலும் தன்மைக்கேற்ப உள்ள சத்துகள் ஆரோக்கியம் அளிப்பவை.
கிவி பழத்தில் வைட்டமின் சி, தாதுக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஆன்டி ஆக்சிடென்ட்கள், பைடோநியூட்ரியன்ட் சத்துக்கள், நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.
இதன் உள்புறம் பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் தங்கம் போல இருக்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடையது. ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது. மொத்தத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது.
கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் குடல் புற்றுநோய், இதய நோய்கள், முதுமையில் ஏற்படும் தோல் பாதிப்பு, சர்க்கரை நோய் தீவிரம் குறையும். செரிமான கோளாறுகள் நீங்கும்.
இது மட்டுமின்றி இருமல், சளி, ப்ளூ காய்ச்சல், ஆஸ்துமா போன்றவற்றையும் கிவி பழம் விரட்டுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் உடல் வலுவடையும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சோர்வின்றி உற்சாகத்துடன் இருக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.