
அப்புகுட்டி வீட்டுக்கு அடங்காமல் கிடைக்கிற வேலையை செய்துகொண்டு திரியும் பிள்ளை. ஷகிலாவின் ரசிகன். வழக்கம்போல் ஷகிலாவின் படத்தை பார்த்துவிட்டு நண்பனின் அறையில் தங்கப் போகும்போது நண்பனின் கல்யாணத்திற்கு சாட்சி கையெழுத்து போடுகின்ற வம்பை விலைக்கு வாங்குகிறார். மணப்பெண் சுவாதியை உள்ளூர் அரசியல்வாதி சொந்தமாக்கி கொள்ள நினைக்கிறார். அதற்கு தடையாக இருக்கும் அப்புக்குட்டியின் நண்பனை தீர்த்துக்கட்ட நினைக்கிறார். ஒருகட்டத்தில் நண்பனை தீர்த்துக்கட்ட அரசியல்வாதியின் அடியாட்கள்
அவனை துரத்துகிறார்கள். அப்போது அவர்களிடமிருந்து தப்பிக்க அப்பு குட்டியுடன் சுவாதியை அனுப்பிவிட்டு, பிறகு சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறான்.
போகிற வழியில் அப்புக்குட்டியும் நண்பனின் மனைவி சுவாதியும் லாட்ஜில் தங்க நேரிட, கணவன் மனைவி என்று பொய் சொல்கிறார்கள். அந்த பொய் படத்தின் முடிவு வரை செல்கிறது. இதற்குள் அப்புக்குட்டிக்கும் அவர் முறைப்பெண் மல்லிகாவிற்கும் இருக்கும் காதல், அதற்கு தடையாக இருக்கும் இந்த நாடகம் முடியும்போது சுபம் போடுகிறார்கள்.
மன்னாருவாக அப்புக்குட்டி. நிறைவாக செய்யும் நடிகர் என்பதை தண்ணியடித்துவிட்டு அப்பாவியாக சிரிப்பதிலும் வீட்டில் சொத்துக்கு சண்டை போடுவதிலும் நிருபித்திருக்கிறார். ஒவ்வொரு லாட்ஜாக நானும் என் நண்பனோட பொண்டாட்டியும் தங்க ரூம் வேணும் என்று அப்பாவியாக கேட்கும் போது சிரிக்கவும் வைக்கிறார்.
‘ராட்டினம்’ சுவாதி அப்புக்குட்டி ஜோடியோ என்று நினைக்க வைத்து நம்மை பொறாமைப்பட வைத்த கேரள அழகி. நல்லவேளை அவருக்கு ஜோடியில்லை. நடிக்க வேண்டிய காட்சியிலும் சமாளித்திருக்கிறார்.
அப்புக்குட்டி முறைப்பெண்ணாக நடித்திருக்கும் வைசாலிக்கு கருப்பு மையை பூசி ஏன் அசிங்கமாக்கினார்களோ தெரியவில்லை (யதார்த்த சினிமாவா?). ஆனாலும் தற்கொலைக்கு முயற்சித்து பின் பயந்து திரும்புகையிலும், அப்புக்குட்டிக்காக உருகுவதிலும் நல்ல நடிப்பு.
ஊர் நாட்டாமையாக வரும் தம்பி ராமையா. இப்படத்துக்கு வசனமும் இவர்தான். மரியாதை முக்கியம் என்று அவர் செய்யும் அடாவடிகள் எல்லாம் சிரிக்க வைப்பவை. ஒரு குத்துப்பாடலுக்கு பாண்டியராஜன். காலக்கொடுமை.
கொடைக்கானல் மலைக்கு மேல் கதை நடைபெறும் இடம் என்பதால் அகுஅஜ்மலின் ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக இருக்கிறது. அமைதியாக ஒலிக்கவேண்டிய இடத்திலும் உதயனின் பின்னணி இசை இடி முழக்கம் என்பதால் அந்த காட்சியில் சோகம் நமக்கு எட்டாமலே போய்விடுகிறது. பாடல்களும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. ‘ஊரை எல்லாம் காவல் காக்கும்’ என்ற பாடல் மட்டும் கேட்கும் ரகம்.
இரண்டாம் பாதியை இழு இழு என்ற இழுப்பதுதான் படத்தின் பலவீனம். சுவாதியின் காதலன் எம்.எல்.ஏ.விடம் இருந்து தப்பும்போதே முடிவு தெரிந்து விடுகிறது. அதற்கு பின்பும் அரைமணி நேரம் இழுக்க வேண்டுமா.
இந்த வாரத்தில் குடும்பத்தோடு பார்க்கும்படியான படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் ஜெய்சங்கர். ஆனால் அதை காலத்திற்கு ஏற்றாற்போல் தந்து பதினைந்து வருடங்களுக்கு முந்தைய சினிமாவாக தராமல் இருந்திருந்தால் படத்தின் தலைப்பைபோல் நம் மனதில் இருந்திருக்கும்.