விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார், நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் இருக்கிறது. படப்பிடிப்பு முடியவிருக்கும் சமயத்திலும் படத்தின் பெயர் இதுவரையிலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பெயரிடப்படாத இந்த படத்திற்கு வசனங்கள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சுபாவிடமே படத்தின் தலைப்புக்கான ஐடியாவும் கேட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் ‘தல’ என்ற சொல்லின் மூலம் அஜித்குமார் பரிச்சயமானவர்
என்பதால் இந்த படத்திற்கு அந்த பெயரையே வைக்கலாம் என ஐடியா கொடுத்தார்களாம் சுபா. இந்த ஐடியாவை கேட்ட அஜித்குமார் “ அந்த பெயரையே மறந்துவிடுங்கள். கதை தான் முக்கியம். கதையை மனதில் வைத்துக்கொண்டு, கதைக்கு ஏற்றார்போல் தலைப்பை யோசியுங்கள்” என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம்.
காலில் அடிபட்டு முழு ஷெடியூலை பாதியாக குறைத்துக்கொண்டிருக்கும் அஜித்குமார், சமீபத்தில் .ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படம் பார்த்திருக்கிறார். படம் பார்த்து முடித்ததும் நடிகர் விஜய்க்கு ஃபோன் செய்து துப்பாக்கி நன்றாக வந்திருப்பதாக கூறியிருக்கிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸையும் வாழ்த்தினாராம். முருகதாஸுடன் துப்பாக்கி படம் பற்றி பேசிய பிறகும் அஜித்குமார் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தாராம்.
அஜித்-முருகதாஸ் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற ”தீனா” படத்திற்குப் பிறகு இப்போது மறுபடியும் அஜித்-முருகதாஸ் இணைவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் சமயத்தில் அஜித்குமார்-முருகதாஸின் இந்த நீண்ட உரையாடல் ரசிகர்களிடையேயும், தமிழ்த் திரையுலகிலும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.