வாவ்! ஒரு இடியப்ப சிக்கல் கதையை தெளிவாக எடுத்து, அதை நகைச்சுவை படமாகத் தந்திருக்கிறார்கள். கதை என்னவென்று சொல்ல வேண்டுமோ, சரி அது இதுதான்: CIA’இல் பல்லாண்டுகள் வேலை செய்து வந்த Osbourne (John Malkovich) உள்பகை காரணமாக ராஜினாமாச் செய்கின்றார். இப்போது வேலைவெட்டி எதுவுமின்றி இருப்பதால் தனது CIA அனுபவத்தை கதையாக எழுத முனைகின்றார். இவரது மனைவி Katie (Tilda Swinton) — ஒரு வைத்தியர். மணவாழ்வில் சுகமற்று இருக்கும் இவருக்கு, கணவன் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு வந்தது கடைசி அடி.
வேலையில்லாமல் இருக்கும் கணவன் குடும்பச் சேமிப்பை கரைக்கும் முன்னர் விவாகரத்து செய்ய தீர்மானிக்கின்றார். Katie’யின் விவாகரத்து வக்கீல், விவாகரத்தை முன்வைக்கும் முன்னர் Osbourne’இன் முழு பொருளாதார நிலவரத்தையும் அறிந்து கொள்ளும்படி katie’க்கு ஆலோசனை சொல்கின்றார். அதன் பேரில் Osbourne’இன் கண்ணணியில் இருக்கும் ஆவணங்களை களவாக பதிவிறக்கி ஒரு CD’இல் இட்டு வக்கீலின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றார் Katie. அந்த ஆவணங்களுடன் Osbourne’இன் நாவல் முயற்சிக்கான குறிப்புக்களும் வந்து சேர்ந்து விடுகின்றன. அந்த CD’யை வக்கீல் தனது செயலாளரிடம் கொடுக்க, அவர் அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் உடற்பயிற்சி மையத்தில் (gym) தொலைத்து விடுகின்றார். அந்த CD’யைக் கண்டெடுக்கின்றார்கள் அங்கே வேலை செய்யும் இரண்டு மாங்காய் மடையர்களான Linda’வும் Chad’உம். Linda (Frances DcDormand) முதுமையின் எல்லையைத் தொட்டுவிட்ட பெண்; தனது காதலற்ற வாழ்க்கைக்கு தனது முதுமைக் கோலமே காரணம் எனத்தீர்மானித்து பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சை மூலம் அதை மாற்ற தீர்மானிக்கின்றார் — பிரச்சனை என்னவெனின், அந்த சிகிச்சையைக்குத் தேவையான பணம் இல்லை. Chad (Brad Pitt) மூளையை பராமரிப்பதில் அக்கரை செலுத்தாது, உடலை பராமரிப்பதில் மட்டும் அக்கறை செலுத்தும் ஒருவன். கண்டெடுக்கப்பட்ட CD’யில் இருக்கும் Osbourne’இன் குறிப்புகளை காணும் இவர்கள் இருவரும் CIA’இன் ரகசிய கோப்பொன்றை கண்டுபிடித்திருப்பதாக தீர்மானிக்கின்றார்கள். மடையர்களாக இருந்தாலும், மனத்தளவில் நல்லவர்களான இவர்கள், அந்த இரகசியக் கோப்பை உரியவரிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கின்றார்கள். அந்த நற்செயலிற்காக பணப்பரிசொன்றும் கிடைக்கும் என்று நம்புகின்றார்கள் (Linda இதில் பாரிய அளவில் நம்பியிருக்கின்றார்.) வாழ்க்கையில் விரக்தியில் இருக்கும் Osbourne’க்கு நடுச்சாமத்தில் தொலைபேசி அழைப்பு வருகின்றது Linda, Chad இடமிருந்து. இவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதைபற்றி எவ்வித விளக்கமும் இல்லாத Osbourne இவர்கள் தன்னை ஏதோவிதமாக blackmail பண்ணுகின்றார்கள் என்று தீர்மானிக்கின்றார்கள். இதற்கிடையில் Harry (George Clooney) என்னும் ஒரு பாத்திரம். திறைசேரியில் (treasury) வேலை செய்யும் கலியாணமான Harry, Katie (Osbourne’இன் மனைவி) உடன் கள்ளக்காதல் வைத்திருப்பது மாத்திரமின்றி, இணையத்தளத்திலிருக்கும் Dating சேவையொன்றையும் பாவித்து வெவ்வேறு பெண்களோடும் தொடர்பு வைத்திருக்கின்றார். இவ்வாறாக சந்திக்கும் பெண்களில் கடைசி Linda! திறைசேரியில் வேலைசெய்யும் Harry’யையும், பழைய CIA உளவாளி Osbourne’ஐயும் இதையெல்லாம் வெளியே இருந்து அவதானித்துக் கொண்டிருக்கும் CIA’க்கு இது எல்லாம் ஒரு பெருங்குழப்பமாக இருக்கின்றது. இத்தனைக்கு நான் இங்கே சொன்னது அவ்வளவும் ஒரு 25% குழப்பம்தான். மிச்சக் குழப்பத்தை நீங்களாகவே அறிந்து கொள்வதுதான் சுவையாக இருக்கும்.
பொதுவாக படம் மெலிதான ஒரு நகைச்சுவையுடன், கொஞ்சம் serious’ஆகத்தான் போகுகின்றது. படத்தின் நடுவிலும், கடைசியிலும் வரும் CIA அதிகாரிகள் உரையாடும் காட்சிதான் வெடிச் சிரிப்பு. படத்தில் குழப்பம் ஆளை ஆள் சரியாகப் புரிந்து கொள்ளாததுதான்; அதிலும் உச்சக்கட்டம் இவ்வளவு குழப்பத்தையும் CIA புரிந்து கொள்ளும் விதம்! அந்த மாதிரி!! படம் கொஞ்சம் பெண்களிற்கு எதிரான படம் போல — ஏனெனில் படத்தில் வரும் குழப்பத்திற்கெல்லாம் பெரும்பாலும் மூலக்காரணம் பெண்கள்தான்.
படத்தில் இருக்கும் பெரிய புகழ்பெற்ற நட்சத்திரக்குழுவும், தங்களிற்கு வழமையற்ற பாத்திரங்களிலே வருகின்றனர். என்றாலும் வெழுத்து வாங்குகின்றார்கள். அப்படியிருந்தாலும் கதாசிரியருக்குத்தான் ஒரு “ஓ” போடவேண்டும். அப்பிடியொரு சிக்கலான நகைச்சுவைக் கதையொன்றை, கொஞ்சமும் லாஜிக் பிசகாமல் வடிவமைத்திருக்கின்றார்கள். வழமையான கதைகளுடன் வரும் படங்களை பார்த்து வருகின்ற கண்ணுக்கும் மனதுக்கும் ஒரு விருந்து. என்றாலும் சிறுவர்களிற்கான படம் அல்ல.