தமிழ் சினிமாவில் வருடந்தோறும் பல நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் வசூல் ரீதியாக அவை பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. 'படம் நல்லாதான் இருக்கு... ஆனா ஓடாது' எனும் போக்கு அதிகரித்துவிட்டது. இந்த முரண்பாட்டுக்கு மீடியாவும் கூட ஒரு காரணம்தான். ஏனெனில் இந்த பேச்சை முதலில் தொடங்கிவைப்பதே அவர்கள்தானே! இந்த 2012-லும் அப்படி சில படங்கள் வந்து, சுவடு தெரியாமல் போய்விட்டன. சில படங்களுக்கு ஓஹோ என விமர்சனங்கள் கிடைத்தும் அவை படத்தின்
ஓட்டத்துக்கு உதவாமல் போயிருக்கின்றன. அப்படிப்பட்ட சில படங்கள்...
செங்காத்து பூமியிலே...
பாரதிராஜாவின் கதாசிரியர்களுள் ஒருவரான ரத்னகுமார் இயக்கிய படம் இந்த செங்காத்து பூமியிலே. ரத்த உறவுகளுக்குள் வரும் சண்டை, பூமியை ரத்தத்தால் நனைக்கும் கதை. இளையராஜாவின் உருக்கும் இசை. நல்ல நடிப்பு என அனைத்தும் இருந்தது படத்தில். ஓரளவு நல்ல விமர்சனங்கள் கிடைத்தும் படம் ஓடவில்லை.
பச்சை என்கிற காத்து
புது இயக்குநர் கீரா இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்து வந்த இந்த படைத்தை மீடியாக்களும் விமர்சகர்களும் பெரிதாக சிலாகித்துதான் எழுதினார்கள். ஆனால் அதெல்லாம் 'அம்மஞ்சல்லிக்குப்' பிரயோசனமில்லாமல் போய்விட்டது. படம் வந்த சுவடே தெரியவில்லை. இப்போது ரெகுலராக சினிமா பார்க்கும் யாரையாவது கேட்டுப் பாருங்கள்... அப்படி ஒரு படம் வந்ததா என திருப்பிக் கேட்பார்கள்!
ராட்டினம்
கிட்டத்தட்ட 'காதல்' படத்தைப் போன்றதொரு படைப்புதான். ஆனால் ரொம்ப ப்ரெஷ்ஷான ஒரு படத்தைப் பார்த்த உணர்வைத் தந்திருந்தார் இயக்குநர் தங்கசாமி. தூத்துக்குடி பின்னணியில் வெகு இயல்பான கதை, இயல்பான க்ளைமாக்ஸ். படத்தை பலரும் பாராட்டினார்கள். இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு நல்ல விஸிட்டிங் கார்டாக அமைந்தது என்பதோடு சரி. வசூல் ரீதியாக பெரிய சாதனை எதுவும் இல்லை.
தடையறத் தாக்க
பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் அருண் விஜய்யை ஒரு நடிகராக ஒப்புக் கொள்ள வைத்த படம் இது. விறுவிறுப்பாகவும் தரமாகவும் எடுக்கப்பட்ட இந்தப் படம், கமர்ஷியலாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.
மதுபானக்கடை
ஒரு டாஸ்மாக் பார், நான்கைந்து குடிகார பாத்திரங்களை வைத்தே முழுப் படத்தையும் எடுத்திருந்தார் இயக்குநர் கமலக்கண்ணன். ஆனால் அனைவருக்கும் பிடித்த படம் என்று இதனைச் சொல்ல முடியாது.
சாட்டை
இயக்குநர் பிரபு சாலமன் தயாரிப்பில் சமுத்திரக் கனி நடிப்பில் வெளியான படம். ஒரு அரசுப் பள்ளிதான் கதை, கதையின் நாயகன், கதைக் களம் எல்லாமே... கொஞ்சம் நாடகத்தனமான காட்சிகள் இருந்தாலும் 2012-ம் ஆண்டில் அதிக பாராட்டுகளைப் பெற்ற படங்களுள் இதுவும் ஒன்று. பெரிய லாபமில்லை. ஆனால் பிரபு சாலமனுக்கு நிறைந்த மகிழ்வைத் தந்த படம்.