தந்தை கமல் ஹாசன் நடித்த, "உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். அதன் பின், அவரது இசைப்பயணம் தொடரும் என்று பார்த்தால், அதையடுத்து, முழுநேர நடிகையாக கவனத்தை திசை திரும்பிவிட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி என, பிசியாக நடித்து வருகிறார். அதிலும், தெலுங்கில் நடித்த,"கப்பர் சிங் படம், ஆந்திராவில் பட்டி தொட்டி எங்கும், பட்டையை கிளப்பியதால், அங்கு முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.
ஸ்ருதிக்கு, கவிதைகள் மீது ஆர்வம் அதிகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம், கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அப்படி, இதுவரை அவர் எழுதி வைத்திருக்கும் கவிதைகள், பல தொகுப்புகளாக வெளியிடும் அளவுக்கு உள்ளதாம். காதல், சமூகம் என, பல கருத்துகளின் அடிப்படையில், தான் எழுதியுள்ள கவிதைகளை தமிழ், ஆங்கிலம் என, இரண்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்.