
வசூல் வேட்டை: 2012-ஆம் ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளிய தமிழ்த் திரைப்படங்கள்.
துப்பாக்கி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய விஜய், காஜல் அகர்வால்
ஜோடியாக நடித்து வெளிவந்த படம் துப்பாக்கி. படத்தின் மீது பல சர்ச்சைகள் கிளம்பிய போதும், அனைத்தையும் சமாளித்து தீபாவளிக்கு ரிலீஸாகி பிரம்மாண்டமாக வெடித்தது துப்பாக்கி. முதன்முறையாக முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்தது, நீண்ட நாட்களாக விஜய் எதிபார்த்துக் கொண்டிருந்த வெற்றி ஆகிய சில சிறப்புகள் துப்பாக்கி படத்தின் மூலம் கிடைத்தன.
நண்பன்
இயக்குனர் ஷங்கர் விஜய், ஜீவா,ஸ்ரீகாந்த் ஆகிய இளம் ஹீரோக்களுடன் கைகோர்த்து ஜாலியாக இயக்கிய படம் நண்பன். இந்தியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியடைந்த ‘3 IDIOTS' படத்தின் ரீமேக் தான் நண்பன். ஷங்கர், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் ஆகியோரின் இயல்பான நகைச்சுவை திறன் தான் நண்பன் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. விஜய் நடித்த வேலாயுதம் சொதப்பிய நிலையில் நண்பன் படத்தின் வெற்றி விஜய்க்கு ஒரு புதிய உற்சாகத்தையும், மிகப்பெரிய படங்களில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டிருந்த ஷங்கருக்கு ஒரு புத்துணர்ச்சியும் அளித்தது நண்பன் திரைப்படம். ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன் என நண்பன் படத்தில் நடித்த பலருக்கும் திருப்புமுனையாக அமைந்தது நண்பன்.
நான் ஈ
தெலுங்கில் வெற்றிப்படங்களையே கொடுத்து வரும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌளி தனது படங்களை மற்ற மொழி ரசிகர்களுக்கும் ரசிக்கும் வகையில் டப்பிங் செய்து வெளியிடுவதில் வல்லவர். அந்த வகையில் ராஜமௌளி இயக்கத்தில் ஹீரோவாக தெலுங்கு நடிகர் நானி, வில்லனாக கன்னட நடிகர் சுதீப், ஹீரோயினாக நடிகை சமந்தா நடித்து வெளிவந்த படம் ‘நான் ஈ’. நடிகை சமந்தா இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தது ஒருபுறம் இருக்க, மொத்த ரசிகர்கள்
மனதையும் வில்லன் சுதிப்பும், கிராஃபிக்ஸ் ‘ஈ’யும் தான் கொள்ளையடித்தனர்.
ஒரு கல் ஒரு கண்ணாடி
இயக்குனர் ராஜேஷின் முழுநீள காமெடி பட டிரெண்ட் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களின் வெற்றியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலும் தொடர்ந்து வெற்றியடைந்தது. ஆனாலும் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ரிலீஸாவதற்கு முன் ரசிகர்கள் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால் ஓகே ஓகே படத்தில் ஹீரோவாக நடித்திருந்தது புதுமுக நடிகர் உதயநிதி ஸ்டாலின். தயாரிப்பாளர் என்ற முறையில்
சினிமாவுடன் உதயநிதிக்கு சம்மந்தம் இருந்தாலும், நடிப்புக்கும் அவருக்கும் ஓகே ஓகே தான் முதல் சந்திப்பு. ஆனால் அனைத்து சந்தேகங்களையும் பொடிப்பொடியாக்கி மிகப்பெரிய வெற்றியடைந்தது ஓகே ஓகே.
சுந்தரபாண்டியன்
புதுமுக இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், லட்சுமி மேனன், விஜய சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் சுந்தரபாண்டியன். வரிசையாக வெற்றிப்படங்களில் நடித்து வந்த சசிகுமார், புதுமுக இயக்குனரின் படத்தில் நடித்ததால், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிபார்ப்புக்குள் சென்றது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் சுந்தரபாண்டியன் மிகப்பெரிய வெற்றியடைந்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்றது. சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் ஒரு அழகு நடிகை (லட்சுமி மேனன்) தமிழ்த் திரையுலகத்திற்கு கிடைத்தார்.
கும்கி
மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் இயக்குனர் பிரபு சாலமன். மைனா படத்தில் நடித்த தம்பி ராமையாவிற்கு தேசிய விருதும் கிடைத்ததால், பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் கும்கி படத்தில் ஹீரோவாக நடிப்பது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு எனத் தெரிந்ததும் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் கும்கி பக்கம் திரும்பியது. எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு திரையில் இறங்கிய கும்கி வசூலை அள்ளியது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா, கும்கி யானை மாணிக்கம் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்துடன் பொருந்தி இருந்தது கும்கியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
செல்லூலாய்டு சிற்பங்கள் :
சொல்ல வந்த கருத்தை ரசிகர்களின் மனதில் ஆழப்பதித்துச் சென்ற அற்புதமான திரைப்படங்கள்.
வழக்கு எண் 18/9
காதல், கல்லூரி ஆகிய தரமான படங்களை கொடுத்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9. தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்தது. பள்ளி மாணவ/மாணவிகள் பெற்றோரின் கண்காணிப்பு வளையத்திலிருந்து தவறினால் எவ்வித அபாயத்திற்கு ஆளாகின்றனர், அதனால் யாரெல்லாம் பாதிக்கப்படலாம் என சிறந்த படைப்பை ரசிகர்களுக்குத் தந்து பெற்றோர்களிடையே ஒரு விழிப்புணர்வை தனது படத்தின்
மூலம் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
சாட்டை
இயக்குனர் பிரபு சாலமனின் உதவியாளர் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் சாட்டை. மாணவர்கள் நன்றாக படிக்கவும், கவனக்குறைவான ஆசிரியர்களை அடிக்கவும் சாட்டை தவறவில்லை. சில கிராமப்புற பள்ளிகளில் நடந்துகொண்டிருக்கும் தவறுகளையும், அதற்கான காரணங்களையும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தது சாட்டை.
நீர்ப்பறவை
தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு, சுனைனா, சரண்யா நடித்து வெளிவந்த படம் நீர்ப்பறவை. தமிழ் சினிமாவில் யாரும் தொட நினைக்காத கதைக்களமான தமிழக மீனவர் பிரச்சனையை கையிலடுத்து ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. விஷ்ணு, சுனைனா ஆகியோருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் நீர்ப்பறவை.
எதிர்ப்பார்ப்பை கிளப்பிய ஏமாற்றங்கள் :
2012-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றங்களைத் தந்தன.
பில்லா II
இயக்குனர் சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜித், பார்வதி ஓமனக்குட்டன், வித்யுத் ஜம்வால் நடிக்க தமிழ் சினிமாவில் வெளியாகும் முதல் prequel படம் என்ற சிறப்புடன் வெளியானது பில்லா II. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
முகமூடி
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே நடித்து வெளிவந்த முகமூடி படத்திற்கு ரசிகர்களிடையே ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது. சிறிய வயது முதல் பெஇய வயது வரை ரசிக்கக் கூடிய சூப்பர் ஹீரோ படமாக எடுக்கப்பட்டது முகமூடி. ஜீவாவின் கடும் உழைப்பும், மிஸ்கினின் திறமையும் ரசிகர்களுக்கு தெரிந்தமையால் தமிழ் சினிமாவில் வெளியாகும் முதல் சூப்பர் ஹீரோ படம் என்ற பெருமையுடன் வெளியான முகமூடி
எதிர்பார்த்த ரிசல்ட்டைத் தரவில்லை. முகமூடி பிரம்மிப்பில்லை என்றாலும் நம்ம ஊரு ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி நல்லா எடுத்திருந்தாங்க.
3
ஐஷ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் ஜோடியா நடித்து வெளியான படம் 3. பள்ளிப் பருவக் காதல், கல்லூரிக் காதல், திருமணமான பின் காதல் என காதலின் 3 நிலைகளை விளக்குவதாக திரைக்கதை அமைக்கப்பட்டு அது சொதப்பலாகிவிட்டது. தனுஷுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை, வேங்கை, மயக்கமென்ன ஆகிய படங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் தராத நிலையில், அவரது மனைவி இயக்கிய 3 படமும் சறுக்கிவிட்டது.
சகுனி
தொடர்ந்து ஐந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த கார்த்தி நடித்த படம் என்பதாலும், அரசியல் சம்மந்தப்பட்ட படம் என்பதாலும் மிகுந்த எதிபார்ப்புகளுடன் வெளியாகியது கார்த்தி, ப்ரணிதா, சந்தானம் நடித்த சகுனி. ஆனால் ரசிகர்களின் எதிபார்ப்புகளை பொய்யாக்கியது ஷங்கர் தயாள் இயக்கிய சகுனி. கதாபாத்திரங்களை சரிவர கையாண்டு, கதைக்களத்தை சரியாக அமைக்காததே சகுனியின் சறுக்கலுக்கு காரணமாக அமைந்தது.
மாற்றான்
இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரட்டையராக நடித்திருந்த படம் மாற்றான். விஞ்ஞான வளர்ச்சியினாலும், அதில் நடக்கும் சில தவறுகளினாலும், சாதாரண ஒரு விஞ்ஞானியின் பேராசையால் நடக்கும் தவறினாலும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பே மாற்றான் படக்கதை. ஏழாம் அறிவு படத்திற்குப் பின் வெளியான மாற்றான் படத்திற்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியிருந்தது. ஆனால் ஏழாம் அறிவு படமும், மாற்றானும் ஒரே மாதிரியான கதைக்களத்தைக் கொண்டதாக தோன்றியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் கே.வி.ஆனந்தின் முயற்சிகளும், சூர்யாவின் கடுமையான உழைப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டதும் உண்மை.
சின்ன பட்ஜெட் - பிரம்மாண்ட வெற்றி :
2012-ஆம் ஆண்டு சிறிய பட்ஜெட் படங்களுக்கு சிறந்த ஆண்டு என்றே சொல்ல வேண்டும். மிகப்பெரிய பேனர் இல்லாமல், அதிக புரமோஷனும் இல்லாமல் அமைதியாக திரைக்கு வந்து, சக்க போடு போட்ட படங்கள் 2012-ல் அதிகம். அவை,
காதலில் சொதப்புவது எப்படி
இயக்குனர் பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி? என்ற குறும்படத்தை பார்த்த நடிகர் சித்தார்த், கண்டிப்பாக இதை முழுநீளப் படமாக எடுக்க வேண்டும் என அவரைத் தேடிக்கண்டுபிடித்து இந்த படத்தை எடுக்க வைத்தார். காதலர்களுக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளே படத்தின் திரைக்கதை. இயக்குனர், ஒளிப்பதிவாளர், ஹீரோ, ஹீரோயின் என அனைவரும் தனக்கு கொடுத்த பொருப்பை கணக்கச்சிதமாக செய்து முடித்ததே, காதலில்சொதப்புவது எப்படி சொதப்பாமல் வெற்றியடைந்ததற்கு காரணம்.
அட்டக்கத்தி
ப.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த இளைஞர்கள் அதிகம்விரும்பிய படம் அட்டக்கத்தி. படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருந்ததால் இளைஞர் தரப்பை தியேட்டருக்கு இழுத்த அட்டக்கத்தி படத்தில் இருந்த காமெடி கலாட்டாவினால் அனைத்து தரப்பு ரசிககளையும் கவர்ந்தது. ஹீரோவின் ஒவ்வொரு காதலும் ஏமாற்றத்தில் முடிவதும், அதற்கு அவர் தரும் ரியாக்ஷனும் என காமெடி கலகலப்பாக இருந்த அட்டக்கத்தி மிகப்பெரிய ஹிட் ஆனது.
பீட்சா
பல குறும்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தில் சபாஷ் வாங்கினார். விஜய சேதுபதி, ரம்யா நம்பேசன் நடிப்பில் வெளியான பீட்சா இளசுகளின் ருசிக்கு ஏற்ற தீணி. ஒரே ஒரு பங்களாவை வைத்துக்கொண்டு சிறந்த திகில் படத்தை எடுத்திருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். நிதானமாக வளர்ந்து வந்த நடிகர் விஜயசேதுபதிக்கு பீட்சா ஒரு பெரிய திருப்புமுனையாக இருந்தது. பேய்க்கதையை வைத்து காமெடியும், திகிலும் கலந்து ரசிகர்களின் யூகத்திற்கு அப்பார்ப்பட்டு திரைக்கதை அமைத்திருந்தது படத்திற்கு பிளஸ்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான நடுவுல கொன்சம் பக்கத்த காணோம் படம் தன் பெயராலேயே ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. கதை என்பதைப் பற்றி கவலைப்படாமல் ‘என்னாச்சு?’ என்ற ஒரு வார்த்தையின் மூலம் ரசிகர்களை சிரிப்பலைகளுக்குள் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குனர். மறுபடியும் ஒருமுறை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ்த் திரையுலகில் தனது தடுக்கமுடியாத வளர்ச்சியை நிரூபித்திருக்கிறார் விஜயசேதுபதி.