1971ம் ஆண்டு நடந்த லண்டன் லொயிட்ஸ் வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கின்றார்கள். நிலத்திற்கடியில் சுரங்கம் கிண்டி வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறைக்குள் (safety deposit box vault) நுழைந்து கொள்ளை அடித்திருக்கின்றார்கள். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு இற்றைவரைக்கும் தெளிவாகத்தெரியாது, ஏனெனில் அங்கு கணக்கு வைத்திருந்த பெரும்பாலானோர் தாங்கள் என்ன பொருட்களை பாதுகாப்புப் பெட்டியினுள்
வைத்திருந்தார்கள் என வெளியிடவில்லை. இதிலும் விட மர்மம் என்னவெனில் கொள்ளை நடந்து நான்கு நாட்களில் இங்கிலாந்து அரசாங்கம் அந்தக் கொள்ளையை ஒரு அரசாங்க பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம் என அறிவித்து, அது சம்பந்தப்பட்ட செய்திகளையெல்லாம் ஒட்டு மொத்தமாக செய்தியூடகங்களிலிருந்து நீக்கியமை! இந்த மர்மங்களை மையமாக வைத்து கற்பனையை நேர்த்தியாக புகுத்தி மிகவும் ரசிக்கக் கூடியவாறு படத்தை எடுத்திருக்கின்றார்கள்.
இங்கிலாந்து அரச குடும்பத்தினர் ஒருவரின் காமக்களியாட்டத்தை புகைப்படம் பிடித்து விடுகின்றான் மைக்கேல் என்பவன். இங்கிலாந்தில் வெளிப்படையாக மிகவும் அட்டூழியம் செய்துகொண்டிந்தாலும், இந்தப் புகைப்படங்களை துருப்புச் சீட்டாக வைத்திருப்பதால், அரசு இவனை ஏதும் செய்ய முடியாது இருக்கின்றது. ஒருவாறாக இந்தப் புகைப்ப்டங்ள் லொயிட்ஸ் வங்கியிலிருக்கும் இவனது பாதுகாப்புப் பெட்டியில் இருப்பதை அறிகின்றது அரசு. பொதுமக்களின் கவனத்தை தவிர்க்க வேண்டும் என்றால் இந்தப் விடயத்தை நேரடியாக அணுக முடியாது. இதனால் இங்கிலாந்து உளவுத்துறை MI6இன் கையில் இந்த வேலை கொடுக்கப்படுகின்றது.
பழைய கார்களை வாங்கி திருத்தி விற்கும் வேலை Terryயினது. வியாபாரம் சரியாகப் போகவில்லை என்பதால் கடனில் மூழ்கி நிற்கின்றார், கூடவே கல்யாணம் கட்டி இரு குழந்தைகள் வேறு. Terryயின் பழைய காதலி Martine (ஓம், இது பெண் பெயர்தான்) – Terry குட்டி குட்டி கொள்ளைகள், மோசடிகள் செய்து கொண்டிந்த நேரத்தில் பழக்கமானவர். Terry பழைய வாழ்வைவிட்டு விலகி வந்து விட்டாலும், Martine இன்னமும் அதே வழியில்தான் இருக்கின்றார். இவரிற்கூடாக Terryயை வளைக்க திட்டமீட்டுகின்றது MI6. போதைப்பொருள் கடத்தும் Martineஐ திட்டமிட்டு பிடிக்கிறது MI6. சிறையிலிருந்து தப்பிக்கவேண்டும் என்றால் வங்கியுடைப்புச் செய்யவேண்டும் என்பது நிபந்தனை. கடனில் சிக்கித் தவிக்கும் Terryயை கொள்ளைக்கு சம்மதிக்கவைக்கின்றார் Martine. ஆனால் Terryக்கு கொள்ளையின் உண்மைக்காரணம் தெரிவிக்கப்படவில்லை. Terryயும் அவரது நண்பர் குழுவும் மிகவும் அழகாக கொள்ளைக்கு திட்டம் போடுகின்றனர். அது வெற்றியடையும் நேரத்தில் Martineஇன் செய்கைகளை கூர்மையாக அவதானிக்கும் Terry கொள்ளையின் உண்மைக்காரணத்தை அறிகின்றார். புகைப்படங்கள் MI6இடன் கைமாறிய பின்னர் அந்தப் படங்களை பார்த்த தமது உயிர்களிற்கு உத்தரவாதம் இல்லை என்று உணர்ந்து கொள்ளும்Terry, MI6 இடமிருந்து தலைமாறைவாகின்றார். இதில் அடுத்த சிக்கல் என்னவென்றால், அதே வங்கியில் அதே பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த இன்னொரு பிரபல்ய அட்டூழியக்காரனின் ஆவணங்களும் அதே கொள்ளையில் இணைந்து விடுகின்றது. இப்போது சமூகத்தின் இரண்டு பாகங்களிலிருந்தும் தேடப்படுகின்றார் Terry. இவர்களோடு Terry ஆடும் கண்ணாம் பூச்சிவிளையாட்டு படத்தின் மிச்சப்பாகம்.
படத்தில் Terry மற்றும் அவரது கொள்ளைக்குழு கற்பனைப்பாத்திரங்கள். மற்றப்ப்டி, அந்தக்கொள்ளை, அது நடந்தவிதம், படத்தில் வரும் மற்றைய பாத்திரங்கள் அனைத்தும் நிஜமானவை. உண்மைச் சம்பவங்களை தமது கற்பனையைக் கொண்டு அழகாக பின்னி கதையை அமைத்திருக்கின்றார்கள். கதையை பல கோணங்களிலிருந்து ஆரம்பித்து கடைசியாக ஒன்றாக கொண்டுவந்து முடிச்சுப்போடுவது புதிதில்லை என்றாலும் மிகவும் நன்றாக இருக்கின்றது. கடைசி வரை விறுவிறுப்பாகக் கொண்டு போயிருக்கின்றார்கள்.
படத்தில் சில நிமிடங்கள் (தேவையற்ற) நிர்வாணக்காட்சிகள் உண்டு. கூடவே வன்முறை, கெட்டசொற் பிரயோகங்களும உண்டு. எனவே படம் சிறுவர்களிற்கு ஏற்றதல்ல. மற்றப்படி ரசிக்கக் கூடிய படம்.