
விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இன்னும் 15 நாட்களில் படத்திற்கான எல்லாம் வேலைகளும் முடிந்து தயாராகிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தடைகள் பல கடந்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் கடந்த பிப்-7ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் ஜன-25ம் தேதியும், வடமாநிலங்களில் பிப்-1ம் தேதியும் ரிலீஸ் ஆனது.
படமும் ஹாலிவுட் தரத்தில் வந்திருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் விஸ்வரூபம் படம் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தனர். அதன்படி விஸ்வரூபம் முதல் பாகம் தயாரான போதே பார்ட்-2வுக்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், விஸ்வரூபம் பார்ட்-2விலும், கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், ஆகியோரே முக்கிய ரோலில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி விரைவில் கமல், ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் படத்தில் பணியாற்ற இருப்பதால் விஸ்வரூபம்-2 வேகமாக முடித்துவிட எண்ணியிருந்தார். லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல் படி, இன்னும் இரண்டு வாரகாலத்திற்குள் விஸ்வரூபம் பார்ட்-2-வுக்கான முழு ஷூட்டிங்கும் முடிந்தும் விடும் என்றும், அதனைத்தொடர்ந்து விரைவில் படமும் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.