இனி வரும் காலங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களும், டேப்ளட் கம்ப்யூட்டர்களுமே அதிகம் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன என்று நாம் உறுதியாகக் கூறலாம். தமிழகத்தினைப் பொறுத்தவரை, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் இலவசமாக இவற்றைப் பெறுவதால், லேப்டாப் அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒரு சாதனமாக அனைவரிடமும் இடம் பெறும். லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை, அதனைக் கையாளும் போது வெளியாகும் வெப்பம், கவனிக்கப்பட
வேண்டிய பிரச்னை ஆகும்.
டெஸ்க் டாப் கம்ப்யூட்டரிலும் இந்த வெப்பம் வெளியானாலும், அதன் சிபியு கேபின் அல்லது மானிட்டரை நாம் உணர்வதில்லை. ஆனால் இந்த லேப்டாப் அல்லது மடிக் கணினி நம் மடியில் அமர்ந்து இயங்குவதால், அதன் கீழ்ப்பாகத்திலிருந்து வெளியேறும் வெப்பம் நம் மடிமீது முழுமையான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. எனவே இதனைச் சமாளிக்கும் வழிகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
தாங்கக் கூடிய அளவிற்கு மேல், லேப்டாப் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பம் வெளியேறுகிறது என்பதை எப்படி அறிவது? சிஸ்டம் தானாக ஷட் டவுண் செய்யப்படுகிறதா? இதற்கான முதல் காரணம் வெப்ப வெளிப்பாடாகத்தான் இருக்கும். தொட்டுப் பார்த்தாலே தெரியவரும்.
லேப்டாப்பிலிருந்து வெளியாகும் வெப்பத்தினை விரைவாக வெளியேறும் வகையில் வைத்துப் பயன்படுத்தினால், இந்தப் பிரச்னை ஏற்படாது. இதற்கு என்ன செய்திட வேண்டும்.
லேப்டாப் கம்ப்யூட்டரை தலையணை, மெத்தை போன்ற மிருதுவான மேற்பகுதி உள்ளவற்றில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. மேஜை போன்ற உறுதியான சம தளப் பகுதிகளில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். லேப்டாப் அமைப்பிலேயே, உறுதியான சம் தளத்திற்கும் லேப்டாப்பின் அடிப்பாகத்திற்கும் இடையே சிறிய இடைவெளி இருக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் வழியே வெப்பம் வெளியேறிவிடும்.
இன்னும் சிறந்த வழி வேண்டும் எனில், லேப்டாப் கூலர் என்ற ஒரு சாதனத்தை வாங்கிப் பயன்படுத்தலாம். இவை சிறிய மின்விசிறிகள் இணைக்கப்பட்ட தட்டையான பகுதிகளைக் கொண்டவை. இவை வெப்பத் தினை வாங்கி உடனுடக்குடன் வெளியேற்று கின்றன. இப்போது பிளாஸ்டிக்கினாலான ஸ்டாண்ட்கள் இதற்கென தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டு கிடைக் கின்றன. இவற்றில் லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்துப் பயன்படுத்துகையில், தளத்திற்கும் கம்ப்யூட்டரின் அடிப்பாகத்திற்கும் இடையே நல்ல இடைவெளி கிடைக்கிறது. இதனால் வெப்பம் தங்குவதில்லை. இவற்றை வாங்க விரும்பாதவர்கள், உள்ளே எதுவும் இல்லாத கார் போர்ட் அட்டைப் பெட்டி மீது வைத்துப் பயன்படுத்தலாம்.
வெப்பம் வெளியேறுவதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறு துளைகளில் தூசு படிந்து மறைக்கும் போது, வெப்பம் எளிதில் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இதனை அவ்வபோது சுத்தம் செய்வது நல்லது. ஆனால், ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரில் இந்த இடங்களைச் சுத்தம் செய்வது போல, லேப்டாப் கம்ப்யூட்டரில் சுத்தம் செய்திட முடியாது. இருப்பினும், அதிவேகத்தில் காற்றினை வெளிப்படுத்தும் சாதனம் (a compressed air canister) மூலம் தூசியினை அகற்றலாம். இந்த முயற்சியும் பலனளிக்காத போது, டெக்னிஷியன் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து, லேப்டாப் கம்ப்யூட்டரின் பின்புறத்தைக் கழட்டி சுத்தம் செய்வதே நல்லது.