கருப்பம்பட்டி சினிமா விமர்சனம்



நடிகர் : அஜ்மல்
நடிகை : அபர்ணா பாஜ்பாய்
இயக்குனர் : பிரபு ராஜசோழன்
இசை : கண்ணன்
ஓளிப்பதிவு : சந்தோஷ்

கருப்பம்பட்டி ஊரில் சொத்து பத்தையெல்லாம் அடகு வைத்து தனது பிள்ளையை நன்றாக படிக்க வைக்கும் அப்பா- அம்மாவுக்கு மகனாக அஜ்மல்.
இவர் தான் படிக்கும் கல்லூரியில் தன்னை மிகப்பெரிய பணக்காரராக சித்தரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கல்லூரி விழா ஒன்றில் தனது அப்பா- அம்மாவாக கோட் சூட் போட்டு, பட்டுப்புடவை கட்டி என வாடகைக்கு அப்பா, அம்மா அமர்த்திக் கொள்கிறார். இந்த நேரத்தில் அஜ்மலின் உண்மையான அப்பா- அம்மா அங்கு வர, அவர்களை தன் வீட்டு வேலைக்காரர்கள் என சொல்லும் அஜ்மல், ‘ஏன் இங்கு வந்தீங்க? இங்கிருந்து போங்க’ எனக்கூறி அவர்களை விரட்டியடிக்கிறார். இதே கவலையில் ஊருக்கு திரும்பும் அம்மா இறந்து போகிறார். அம்மாவின் சாவுக்கு ஊருக்கு வரும் அஜ்மல் அவருக்கு கொள்ளிபோட மறுக்கிறார். ஏனென்றால் கொள்ளி போட்டால் மொட்டை அடிக்க வேண்டும். அழகு கெட்டுவிடும் என நினைக்கிறார். இதனை அந்த ஊர் மக்கள் கண்டிக்கின்றனர்.

தன்னை கண்டிக்கும் ஊர் மக்களின் சொத்து பத்திரங்களை திருடிக் கொண்டுபோய் அடகு வைத்து, அந்த பணத்தில் பாரீஸ் சென்று குடியேறுகிறார். அதன்பின் கருப்பம்பட்டி ஊரே காலியாகிறது. இவருடைய சொந்த பந்தங்கள் எல்லாம் சிதறிப் போகிறது. இந்த விஷயத்தை தனது மகன் அஜ்மலிடம் சாவு நிலையில் கிடக்கும்போது சொல்கிறார் தந்தை அஜ்மல்.

அப்பாவின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த ஊருக்கு வருகிறார். தனது சொந்தங்களையெல்லாம் ஒன்று திரட்டுகிறார். இதற்கிடையில் அபர்ணா பாஜ்பாயை காதலிக்கிறார். இறுதியில் தன் ஊர்க்காரர்களுடன் அஜ்மல் சேர்ந்து வாழ்ந்தாரா? தனது காதலியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

அப்பா- மகன் என இருமாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார் அஜ்மல். 90-களில் வரும் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஒரு சில இடங்களில் நடிப்பை வரவழைக்க கஷ்டப்பட்டிருந்தாலும், பல இடங்களில் பரிதாபத்தை வரவழைத்திருக்கிறார்.

அஜ்மல்போல், நாயகி அபர்ணா பாஜ்பாய்-ம் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கல்லூரி காலங்களில் அஜ்மலிடம் தனது காதலை சொல்லும்போது, அவர் அதை மதிக்காமல் கிண்டல் செய்யும்போது தன்னுடைய உணர்ச்சியை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகள் குறைவு என்பதால் இவரது நடிப்புக்கு வாய்ப்பு குறைவே.

ஆங்கிலப் பேராசிரியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் முதல் பாதி முழுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். இவருடைய தோற்றம், நகைச்சுவை கலந்த ஆங்கிலப் பேச்சு என அட்டகாசமாக பண்ணியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு வரும் நண்டு ஜெகன், ஸ்ரீநாத் என இருவரும் காமெடி என்கிற பெயரில் காதுகளுக்கு இரைச்சலைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரபுராஜ சோழன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். உறவுகளோடு வாழ்கிற வாழ்க்கைதான் சந்தோஷம். பணம் ஒன்றும் பெரிதில்லை என்ற கதையை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறார். சென்டிமென்ட்டுக்கள் கொஞ்சம் காமெடியை புகுத்தி சொல்லியிருக்கிறார். கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதை, வசனத்தில் கவனம் செலுத்தாமல் போனதுதான் வருத்தமளிக்கிறது.

கண்ணன் இசையில் பப்பிலஹரி பாடல் காதுகளில் இனிமையாக ரீங்காரமிடுகிறது. சந்தோஷ் ஸ்ரீராம், சஞ்சீவியின் கேமரா கருப்பம்பட்டி கிராமத்தின் பசுமை, வெறுமை என அனைத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget