1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பிரபல இந்தி நடிகர் சஞசய்தத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அனுமதியின்றி உயர்ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததும், அதனை சட்டவிரோதமாக அழித்ததும் நிரூபிக்கப்பட்டது.
ஆயுத தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் அவரது 6 ஆண்டு தண்டனையை 5 ஆண்டாக குறைத்து உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. சஞ்சய்தத் ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.
தற்போது அவர் இன்னும் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்துக்குள் சஞ்சய்தத் சரண் அடைந்து சிறைக்கு செல்ல இருக்கிறார். இந்த தீர்ப்பு குறித்தோ, அவரது நிலைமை குறித்தோ இதுவரை யாரும் கருத்து சொல்லவில்லை. முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறிருப்பதாவது:
எனது அருமை நண்பர் சஞ்சய்த்துக்கு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. அவருக்கு இப்போது இருக்கும் ஒரே வழி மன்னிப்புக்கான மேல்முறையீடு. அது அவருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கு நல்ல பரிகாரம் கிடைக்க வேண்டும். அவரது எஞ்சிய வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.இவ்வாறு ரஜினி தனது அறிக்கையில் கூறி உள்ளார்.