மதில் மேல் பூனை சினிமா விமர்சனம்

டிரைவிங் ஸ்கூலில் பணியாற்றும் விஜய் வசந்துக்கும், டிரைவிங் கற்றுக்கொள்ள வரும் விபாவுக்கும் காதல். எதிர்ப்பே இல்லாமல் கல்யாணத்தில் முடிகிறது. பிறகுதான் பயங்கரங்கள் தொடர்கிறது. குலதெய்வ கோயிலுக்கு தம்பதிகள் சாமி கும்பிடச் செல்கிறார்கள். அங்கு இவர்கள் வருகைக்காக பல வருடங்கள் காத்திருக்கும் நான்குபேர் இவர்களை கடத்துகிறார்கள். இருவரையும் சித்தரவதை செய்து கொல்ல வேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.
அவர்கள் யார், எதற்காக கடத்தினார்கள், அவர்கள் நோக்கம் நிறைவேறியதா, தம்பதிகள் தப்பித்தார்களா? என்பதை திகிலோடும், திருப்பங்களோடும் சொல்கிறார்கள்.

பள்ளியில் நடக்கும் பகீர் சம்பவம் பின்னாளில் காட்டுக்குள் ஒரு திகில் சம்பவத்தை நிகழ்த்துகிறது என்ற திரைக்கதை இணைப்பு கச்சிதம். ஒரு திகில் அனுபவத்துடன் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடத்தையும் நடத்தி அனுப்புகிறார்கள். விஜய் வசந்த் முழுமையான ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம். விபாவுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்து காதலை இவர் கற்றுக் கொள்ளும்போதும் காதலை சொல்ல காப்பி ஷாப் சென்று அங்கு அவர் காட்டும் தயக்கம், காதலை விபா ஏற்றதும் ஏற்படும் திடீர் சந்தோஷம் என நடிப்பில் விஜய் மெருகேறி இருக்கிறார். பிற்பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் அடிமேல் அடிவாங்கி ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து பொளந்து கட்டுவது ஆக்ஷன் ஹீரோவுக்கான அச்சாரம். விபா அழகாக இருக்கிறார். காதலின்போது அழகாகவும் காட்டில் தவிக்கும்போது ஆக்ரோஷமாகவும் இருமுகம் காட்டி இருக்கிறார்.

 தம்பி ராமையா பள்ளி ஆசிரியராக வந்து மாணவர்களை வில்லனாக நினைத்து அவர் நடத்தும் பாடங்கள் கலகல டைப். கணேஷ் ராகவேந்திராவின் இசை திகிலூட்டுகிறது.  விபாவின் பள்ளி வாழ்க்கை, காதல் வாழ்க்கை, திகில் வாழ்க்கை மூன்றுக்கும் தனித்தனி வண்ணம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எல்.கே.விஜய். 

பள்ளி பருவத்து சம்பவங்களில் இருக்கும் அழுத்தமும், வலியும் காட்டு திகில் எபிசோடில் மிஸ்சிங். அடர்ந்த காட்டுக்குள் சிறுமியை யாராவது தனியாக அனுப்புவார்களா? அதன் பிறகு இவர்கள் தப்பிக்கத்தான் ஓடுகிறார்களே தவிர சிறுமியை பற்றி கவலைப்படவே இல்லை. விரல் துண்டிக்கப்பட்டு, கத்தியால் வயிற்றில் ஆழமாகக் குத்தப்பட்ட பிறகு விஜய் வசந்த் ஆவேசம் கொண்டு வில்லன்களை வெல்வது லாஜிக் இல்லாத ஹீரோயிசம். பள்ளி வாழ்க்கையில் நல்ல பாடம் நடத்திவிட்டு, திகில் எபிசோடில் திணறியிருக்கிறார்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget