சுதந்திரத்துக்கு முந்தைய முப்பதுகளின் காலகட்டத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட அவலத்தை சொல்லும் ரெட் டீ நாவலை அடிப்படையாக வைத்து பரதேசியை பாலா உருவாக்கியிருக்கிறார். தென் தமிழ்நாட்டிலிருந்து ஜனங்களை வேலைக்கென்று கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று தேயிலை தோட்டங்களில் கொத்தடிமைகளாக்கினார்கள்.
அப்படி அழைத்துச் செல்லப்பட்ட சாலூர் கிராமத்திலிருந்து கதை தொடங்குகிறது.
கதை தொடங்கும் காலகட்டம் 1939. அன்றைய தென்னக கிராமம் ஒன்றை, அன்று கிராமமும், மனிதர்களும் இப்படிதான் இருந்திருப்பார்கள் என்று மனதார நம்பும்வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கலை இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் இணைந்து அன்றைய காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். அதேபோல் பேச்சு வழக்கு. கிராமத்து இயல்பு அச்சு அசல் அப்படியே.
களிமண்ணை கொடுத்தாலும் பாலா அதற்கும் ஒரு தேசிய விருது வாங்கித் தருவார் என்பதை ஒவ்வொரு கணமும் நினைவுப்படுத்துகிறது படத்தில் இடம்பெற்றவர்களின் நடிப்பு. அதர்வாவின் நடிப்பை எப்படி குறிப்பிடுவது? அதிலும் வகை வகையாக அவர் அழும் காட்சிகள். திருமணத்தில் சோறு கிடைக்காமல் ஆங்காரத்தில் அழுவது ஒருவகை என்றால், தான் இருக்கும் பாழும் கொத்தடிமை குழியில் மனைவியும், மகனும் அகப்பட்டத்தை நினைத்து கதறுவது இன்னொரு வகை. ஒவ்வொரு வருடமும் கூலி மறுக்கப்பட்டு மீண்டும் கொத்தடிமை தொழிலுக்கு திரும்புகையில் ஒட்டு மொத்த பச்சாதாபத்தையும் பெறுகிறது அவரின் நடிப்பு.
அதர்வாவின் அப்பத்தாவாக வரும் கிழவி பஞ்சாயத்தில் கற்பூர தீயை அணைத்துவிட்டு, சத்தியம் எல்லாம் பண்ணியாச்சு போ... போ என்று அசட்டையாக சொல்லுமிடத்தில் கிராமத்து கிழவியை அப்படியே நேரில் பார்க்கிற உணர்வு. வேதிகாவுக்கு வழக்கமான தமிழ்ப்பட ஹீரோயின்களின் துடுக்குத்தனம் எட்டிப் பார்க்கிற வேடம். நெருப்பாக தொட்டல் வெடிக்கும் கேரக்டரில் அப்படியே பொருந்திப் போகிறார் தன்ஷிகா. இதுபோன்ற ஜனத்திரளில் கடைசி நடிகனும் ஒழுங்காக காட்சிக்குரிய உணர்வோடு பிரேமில் பார்ப்பது அரிது. பாலாவின் கடும் உழைப்பு அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
பஞ்சம் பிழைக்க தேயிலை தோட்டத்தை தஞ்சமடையும் ஏழைகள் அனுபவிக்கும் கொடுமைகள். இந்த ஒரு வரிதான் கதை. அதைத் தாண்டி எதுவும் இல்லை. இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதேநேரம் ஒரு படைப்பில் இயக்குனர் கைக்கொள்ளும் கிராஃப்ட்தான் அந்தக் கலையின் தரத்தை நிர்ணயிக்கிறது. பரதேசியில் பாலா கிராஃப்டை முற்றிலுமாக இடைநீக்கம் செய்திருக்கிறார். கிராஃப்ட்தான் ஒரு படைப்பில் உள்முரண்களையும், கதாபாத்திரங்களின் அக உணர்வை வெளிப்படுத்தும் நுட்பமான காட்சிகளையும் உருவாக்குகிறது. பரதேசியில் அதற்கு இடமில்லை. உள்முரண்கள், பேரலல் டெக்ஸ்ட் எனப்படும் இணைபிரதி, அக உணர்வை வெளிப்படுத்தும் நுட்பமான காட்சிகள் எதுவுமில்லாத Hard hitting movie என்று பரதேசியை சொல்லலாம் (மருத்துவமும், சாமியும் ஏழைகளின் பணத்தை பிடுங்கிக் கொள்வதை உணர்த்தும் ஓரிரு காட்சிகள் மட்டும் விதிவிலக்கு).
பஞ்சம் பிழைக்கப் போய் கொத்தடிமைகளாகும் ஒன் லைனில் என்னவெல்லாம் இருக்கும்? பின்னணியில் சோகப்பாடல் ஒலிக்க ஊரைவிட்டு கிளம்பும் காட்சி, சகிக்க முடியாத வேலைச் சூழல், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் வெள்ளைத்துரை, கனவு கலைந்து போனதால் உண்டாகும் ஏக்கம், தப்பிக்க முயற்சித்து தண்டனைக்குள்ளாகும் அவலம்... எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது. அப்நார்மல் ஹீரோ, துடுக்கு ஹீரோயின், அப்பட்டமான வன்முறை என்ற பாலாவின் சட்டகத்தை இந்தப் படமும் தாண்டவில்லை. ஹீரோ நாயகியை சீண்டுவதும், கடைசிக் காட்சியில் நாயகன் எதிரியை துவசம் செய்வதும் மட்டும் இதில் இல்லை. படம் நெடுக விடைத்துக் கொண்டு நிற்பது சோகம்... மேலும் சோகம்.
இதைச் சொல்லும் போது - தவிர்க்க முடியாமல் - இந்த உதாரணத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. சில்ட்ரன் ஆஃப் ஹெவனில் வரும் குழந்தைகளை யாரும் துன்புறுத்துவதில்லை. தொலைந்து போன ஷுக்களுக்குப் பதிலாக வேறு ஷு வை அவர்களின் அப்பா வாங்குகிறார். இருந்தும் அந்தக் குழந்தைகளின் சோகம் தேசங்கள் கடந்து காலங்கள் கடந்து நம்மை பாதிக்கிறது. பாலா காட்டடியாக தாக்குவதை மட்டுமே சோகத்தை பிழிந்தெடுக்கும் கருவியாக நம்புகிறார். பாலாவின் ரியாலிட்டி ஆஃப் மேக்கிங் வீடியோவே அதிர்ச்சியை தரும்போது பரிதாபத்துக்குரிய பின்னணியை உடைய ஒரு கதாபாத்திரம் சித்ரவதை அனுபவிக்கையில் சோகம் எழத்தானே செய்யும்?
பஞ்சம் பிழைக்க சாலூர் கிராமம் கிளம்பியதும் செங்காடே சோகப்பாடல் ஒலிக்க, போகிற இடத்தில் இவர்கள் சித்ரவதை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது. அந்த சித்ரவதை என்னவாக இருக்கும் என்ற நமது கற்பனை அப்படியே காட்சிகளாக வருகையில் ஒருவித சலிப்பு தட்டுகிறது. முக்கியமாக சோகத்தை முன்னறிவிப்பதாக வரும் பின்னணி இசையும் பாடல்களும்.
தமிழில் வருகிற பிற படங்களுடன் ஒப்பிடுகையில் நேர்மையான காத்திரமான படைப்பு பரதேசி. ஆனால் அதனை அவர் சொல்லியிருக்கும் விதம் தட்டையானது, அவரின் வழக்கமான சட்டகத்துக்கு உட்பட்டது. அதன் காரணமாக ஒரு படைப்பை பார்க்கையில் - அது சோகமாக இருந்தாலும் கொடூரமாக இருந்தாலும் - கிடைக்கக் கூடிய pleasure பரதேசியில் கிடைப்பதில்லை.