வத்திக்குச்சி சினிமா விமர்சனம்



"வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுற வரையில.." ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில் வந்த முதல் படமான தீனாவில் வரும் பாடல் வரிதான் அவரது தயாரிப்பில் இரண்டாவது படமாக வந்திருக்கும் வத்திக்குச்சி படத்தின் ஒரு வரி கதை. ஏ.டி.எம். வாசலில் சக்தி என்னும் இளைஞனின் கழுத்தில் கத்தி வைத்து பணம் பறிக்கிறது ஒரு கும்பல். இந்த உரசலில் பத்திக் கொள்ளும் நாயகனின் எதிர்வினை தான் படம். சும்மா கொழுந்து விட்டு எரிகிறது.
ஆனால் அதனால் எவரும் எரியப்படவில்லை என்பது தான் படத்தின் பிரத்தியேக விசேஷம்.

நாயகன் சக்தியாக புதுமுகம் திலீபன் நடித்துள்ளார். தினமும் சாலையில் பார்க்க கூடிய எண்ணற்ற முகங்களில் ஒன்றைப் பெற்றுள்ளார். வாட்டசாட்டமாய் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். வேறு எவரேனும் நடித்திருந்தால் முக்கியமாக முன்னணி நாயகர்கள் யாராவது நடித்திருந்தால் படத்தின் சாயல் வேறு மாதிரி ஆகியிருக்கும். இயக்குநர் அவர் விரும்பிய படத்தை எடுக்க முடிந்ததற்கு திலீபன் முக்கிய காரணம். நாயகன் யாருக்கும் உபதேசம் செய்வதில்லை.. அநியாயங்களைக் கண்டு பொங்கி எச்சில் தெறிக்க வசனங்கள் பேசவில்லை. வெறுமென இயக்குநரின் கைப்பாவையாக மாறியுள்ளார்.

கண்ணை உருட்டி மிரட்டி நாயகனை அலைய விடும் 'எங்கேயும் எப்போதும்' அஞ்சலியை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே அழைத்து வந்து உபயோகித்துள்ளனர். ஷேர் ஆட்டோ டிரைவரான நாயகனிடம் அஞ்சலியின் அதிகாரம் தூள் பறக்கிறது. எனினும் பெரிய ஹீரோ படங்களில் வரும் நாயகிகளிடம் தெரியும் லூசுத்தனத்தையும் கொஞ்சம் பார்க்க முடிகிறது. இது நாயகனின் படம் என்பதால் கதாபாத்திரம் அளவில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. எனினும் அவர் பேசும் ஆங்கிலம் ரசிக்க வைக்கிறது.

அயர்ன் கலையாத சட்டைப் போட்டு வரும் ஜெகன் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். சிறுவன் ஒருவனைக் கடத்த கச்சிதமாக திட்டம் போடுகிறார். ஈர்க்குச்சி போல் இருக்கும் ஜெகன் மலை போல ஒரு மனிதரை எதிர்பாராத விதமாக கொலை செய்கிறார். அது அவருக்கொரு போதையைத் தருகிறது. பதட்டப்படாமல் திட்டம் தீட்டியும் உடனிருக்கும் நண்பர்களின் பதட்டத்தால் மாட்டிக் கொள்கிறார். மாட்டிக் கொண்ட அவமானத்தை அழகாக வெளிப்படுத்துகிறார்.

 பணத்தினைக் குறுக்கு வழியில் அடைய நினைக்கும் பொழுது அது மனிதனை மிருகமாக்கிறது. மிருகமாகும் மனிதன் எதையும் செய்ய துணிகிறான். ஜெகனைப் போன்ற எண்ணத்தைக் கொண்ட இன்னொருவர் சம்பத். ஆனால் ஜெகன் அக்யூஸ்ட் கிடையாது. இந்தக் கையில் கடத்துவது அந்தக் கையில் 15 லட்சம் வாங்கி.. வாழ்க்கையில் செட்டில் ஆவது தான் திட்டம். சம்பத் அப்படியில்லை. அவரது பிழைப்பே கடத்தல், கொலை முதல்லியவை தான். "இவங்க தைரியமே நீ தான்" என சொல்லி விட்டு.. சம்பத்தை அவரது அடியாட்களின் முன்னிலையில் வெளுக்கிறார் நாயகன். அதனால் சம்பத்தின் பிழைப்புக் கெடுகிறது. சவுகார்ப்பேட்டை சேட்டாக ஜெய ப்ரகாஷ் நடிக்கிறார். கருப்புப் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ள கொலை செய்ய ஆட்களை ஏவும் பணக்காரர்.

இதில் நாயகனை உரசி விடுவது படிப்பறிவில்லாத சம்பத். அதனால் பத்திக் கொள்ளும் நாயகன்.. தனக்கு நேர்ந்தது யாருக்கும் நேர கூடாதெனத் தேடிப் போய் ஜெய ப்ரகாஷின் திட்டத்தை முறியடிக்கிறார். எங்கே நாயகனால் தனது திட்டம் சொதப்பி விடுமோ என நாயகனைத் தேடிப் போய் பாதையிலிருந்து விலக்கப் பார்க்கிறார் படித்த இளைஞரான ஜெகன். இந்த மூவரையும் நாயகனின் பாதையில் அழகாக கோர்த்துள்ளார் இயக்குநர் கின்ஸ்லின். 

கெளதம் வாசுதேவ் மேனன் பாணியில் கதையை சொல்லவும், கதாபாத்திரங்களின் மனநிலைகளை பிரதிபலிக்கவும் வாய்ஸ்- ஓவர் நிறைய இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் ஃபிக்சல் உடைந்து பல்லிளிக்கிறது குருதேவ்வின் ஒளிப்பதிவு.  எனினும் திகட்டாத திரைக்கதை, உறுத்தாத சண்டைக் காட்சிகள் என படம் வயிற்றில் பாலை வார்க்கிறது. 

இறுதிக் காட்சிகளில் பெரிய பெரிய இரும்புக் கருவிகளுடன் ஆட்கள் நாயகனைத் தாக்க ஓடி வருகின்றனர். 'அவன் மண்டையிலே அடி' என்று குரல் வேறு கேட்கிறது. சமீப காலங்களாக துயரமான முடிவுகளைப் பார்க்க நேர்ந்த திகிலில், "நங்"கென்ற ஓசை கேட்டுவிட கூடாதென மனம் பரிதவிக்கிறது. வன்முறையை தீர்வாக முன்மொழியாத.. அபூர்வத்திலும் அபூர்வமான படமாக வந்துள்ளது. ஆனால் சண்டைக் காட்சிகள் நிரம்பிய ஆக்ஷன் படம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget