தலைமறைவாக இருக்கும் அஞ்சலியை யாராவது கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர் ஆந்திர போலீசார். டைரக்டர் களஞ்சியம் மற்றும் சித்தி பாரதிதேவி மீது அடுக்கடுக்கான புகார்களை கூறிய நடிகை அஞ்சலி, அடுத்து மாயமானார். புகார் கொடுத்த மறுநாளே அவர் மாயமானார். இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகவில்லை, போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அஞ்சலியின்
சகோதரர் ரவி சங்கர், ஆந்திர மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். அஞ்சலியை யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார். இதேப்போன்று அஞ்சலியின் சித்தி பாரதி தேவியும் அஞ்சலியை கடத்தி இருக்கலாம் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருக்கிறார்.
இந்நிலையில் விசாரணையை துவக்கிய ஆந்திர போலீசார், மாதாபூரில் அஞ்சலி தங்கி இருந்த தஸ்பல்லா ஓட்டலுக்கு சென்று விசாரித்தார்கள். ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அவர் தங்கியிருந்த அறைக்கு யார் யார் வந்தனர் என்பது குறித்து ஆய்வு செய்துள்ளனர். அதில் அஞ்சலி கடந்த 7ம் தேதி இரவு தனது சித்தாப்பா உடன் ஓட்டலுக்கு வந்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை காலையில் கையில் ஒரு பையுடன் ஓட்டல் அறையை விட்டு வேகமாக வெளியேறிய அஞ்சலி, வாசலில் நின்றிருந்த கார் ஒன்றில் ஏறி சென்றுள்ளார். அந்த காரில் அஞ்சலியின் பின்னால் ஒரு நபர் உட்கார்ந்து இருப்பதாக கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அவர் யார், அஞ்சலி சென்ற காரின் நம்பர் என்ன போன்றவை கேமராவில் பதிவாகவில்லை.
இதனையடுத்து அஞ்சலி தானாக அந்த காரில் ஏறி சென்றாரா...? அல்லது அவரை யாரேனும் கடத்தினார்களா...?, ஒருவேளை காரில் இருந்த அந்த நபர் அஞ்சலியின் காதலரா, இருவரும் வேறு எங்காவது ஓடி விட எண்ணியிருந்தனரா? என்று பல கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.