சமீப காலங்களில் பெண்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் முதுகு வலி முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது. வீட்டிலிருக்கும் பெண்கள், அலுவலகம் போகும் பெண்கள் என வித்தியாசம் பார்க்காமல் வாட்டி வதைக்கும் நோய் முதுகுவலி இந்நோயின் காரணங்களை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். உடலுக்கு எந்த வேலையையுமே கொடுக்காத பெண்களுக்கு முதுகு வலி வரும் வாய்ப்பு அதிகமாம். உடல் எடை அதிகரிக்கும் போது முதுகு வலி வரலாம்.
கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு முதுகு வலி வருவதும் இதனால் தான். மெனோபாஸ் காலத்தில் பெண்களது உடலில் ஹர்மோன் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். அதனாலும் முதுகு வலி வரலாம். உடலமைப்பிற்கும், முதுகு வலிக்கும் எந்தத் தொடரமைப்பும் இல்லை.
முதுகு வலி என்பது குண்டான, ஒல்லியான, உயரமான, குட்டையான என எல்லாப் பெண்களுக்கும் வரலாம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்போருக்கும் முதுகு வலி வரலாம். எனவே அப்படி பட்ட வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி எழுந்து நிற்கவோ, நடக்கவோ வேண்டும். படுக்கும் போது அடிக்கடி திரும்பி படுக்க வேண்டும். ஒரே மாதிரி தூங்கக் கூடாது.
இனி சிகிச்சை முறைகள் :
நிற்கும் போது உடலில் எடையை இரு கால்களுக்கும் சம அளவு தாங்கியிருக்கும்படி நிற்க வேண்டும். பைசா கோபுரம் கணக்கில் சாய்ந்து நிற்கும் வேலை வேண்டாம். உட்காரும் போது முதுகுப் பகுதிக்கு சப்போர்ட் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னால் குஷன் வைத்த தலையணை வைத்துக் கொள்ளலாம்.
கீழே விழுந்த எதையாவது எடுக்க வேண்டுமானால் அப்படியே வளைந்து குனியாமல், உட்கார்ந்து முதுகை வளைக்காமல் எடுக்கவும். ஏற்கனவே முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை தவிர்க்கவும். அதிக எடையுள்ள பொருட்களை தூக்க வேண்டாம். கொஞ்சம் எடை அதிகமான பொருளைக்கூட வயிற்றுக்கு மேல் உயர்த்தி தூக்க வேண்டாம்.
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த உடற்பயிற்சியையும் செய்ய வேண்டாம். முதுகுவலி இருப்பவர்கள் நிற்கும் போது முழங்கால்களை டைட்டாக வைத்துக் கொள்ளாமல், தளர்வாக வைத்துக் கொள்வது நல்லது. ஹை ஹீல்ஸ் செருப்பு மற்றும் ஷூக்களைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். எப்போதாவது அணிந்து கொள்ளலாமே தவிர தினம் கூடாது.
தவிர அதை அணிந்து கொண்டு நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ கூடாது. நீச்சல் பயிற்சி செய்யலாம். டென்னிஸ், ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். மல்லாக்கப்ப படுத்துத் தூங்குவதே நல்லது. குப்புறப் படுத்து தூங்குவது முதுகு வலிக்கு வழி செய்வதோடு, உங்கள் முகத் தசைகளையும் சீக்கிரம் முதுமையாக்கி விடும்.
ரொம்பவும் மெத்தென்று இருக்கும் படுக்கையில் படுக்க வேண்டாம். கடினமான படுக்கையே நல்லது. அதுதான் முதுகுக்கு இதமளிக்கும். மென்மையான படுக்கையில் படுத்தால், முதுகின் அடிப்பகுதி அதிகம் பாதிக்கப்படும். தலைக்கு கூடியவரை எதுவுமே இல்லாமல் தூங்கலாம். முடியாத பட்சத்தில் மிக மெல்லிய தலையணை போதும்.
திடீரென குனிவது, உடலை திருப்புவது போன்ற ஏடாகூடமான அசைவுகள் தவிர்க்கப்பட வேண்டும். நிற்கும் போது உடலில் எடையை இரு கால்களுக்கும் சம அளவு தாங்கியிருக்கும்படி நிற்க வேண்டும். பைசா கோபுரம் கணக்கில் சாய்ந்து நிற்கும் வேலை வேண்டாம்.