இதுவரை அஞ்சலி நடித்த படங்களைவிட திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த த்ரில்லராக அஞ்சலியின் வாழ்க்கை கடந்த சில தினங்களாக மாறியிருக்கிறது. இரண்டு தினங்கள் முன்பு, ஹைதராபாத்தில் இருந்தபடி, என் உயிருக்கு ஆபத்து என அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டார் அஞ்சலி. தனது சித்தி பாரதி தேவியும், இயக்குனர் மு.களஞ்சியமும் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், அவர்கள் விருப்பப்படி நடக்க நிர்பந்திப்பதாகவும், தனது கோடிக்கணக்கான பணத்தை இருவரும் சுருட்டிவிட்டதாகவும் அதிர்ச்சிகளாக அடுக்கினார்.
திரையுலகினருக்கு - குறிப்பாக அஞ்சலியை அறிந்தவர்களுக்கு இது பேரதிர்ச்சி. அஞ்சலியின் நிழலாக எப்போதும் அவருடன் இருக்கும் பாரதி தேவியை அஞ்சலியின் அம்மா என்றே பலரும் நினைத்திருந்தனர். அவர் அஞ்சலியின் அம்மா இல்லை என்று அறிய நேர்ந்ததும், பாரதி தேவி குறித்த அஞ்சலியின் குற்றச்சாற்றுக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்தது.
இந்நிலையில், அஞ்சலியின் குற்றச்சாற்றுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்த மு.களஞ்சியம், அஞ்சலி தன் மீதான குற்றச்சாற்றை வாபஸ் பெறாவிட்டால், அவரது ரகசியங்களை வெளியிடுவேன் என அறிவித்தார். கமிஷனர் அலுவலகத்திலும் அஞ்சலி மீது புகார் தெரிவித்திருக்கிறார்.
அஞ்சலி எப்படி சித்தியின் அடைக்கலத்துக்கு வந்தார்? அவருக்கும் மு.களஞ்சியத்துக்கும் என்ன தொடர்பு...?
இதற்கான விடைகள் அதிர்ச்சி தரக்கூடியவை.
அஞ்சலியின் தாயார் பார்வதி தேவி. அவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் (அஞ்சலி) குழந்தை. ஆந்திரா ஜெகன்பேட்டையில் வசித்து வந்த நேரம் அஞ்சலியின் தந்தை அவர்களைவிட்டு பிரிந்திருக்கிறார். ஆந்திராவில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அஞ்சலி அப்படிதான் சென்னையில் உள்ள பார்வதி தேவியின் தங்கை பாரதி தேவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தார்.
பார்வதி தேவியின் முயற்சியால் மு.களஞ்சியத்தின் சத்தமில்லாமல் முத்தமிடு படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் பண நெருக்கடியால் வெளிவரவில்லை. அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் என சுற்றித் திரிந்து ராமின் கற்றது தமிழில் தமிழ் அறிமுகம். அங்காடித்தெரு அஞ்சலியை கவனிக்கத்தக்க நடிகையாக்கியது.
இப்படியொரு சூழலில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் நடித்த சீதம்மா... தெலுங்குப் படத்தில் டைட்டில் ரோலில் நடிக்க அதிர்ஷ்டம் அஞ்சலிக்கு கிடைத்தது. கதைப்படி அவர் வெங்கடேஷின் மனைவி, மகேஷ்பாபுவின் அண்ணி. படம் ஹிட். வேறு பல தெலுங்கு வாய்ப்புகள் அஞ்சலியை தேடி வந்தன. கூடவே வெங்கடேஷ் தனது புதிய படத்திலும் அஞ்சலியை ஒப்பந்தம் செய்தார். இந்தி பேல் பச்சான் படத்தின் தெலுங்கு ரீமக்கான இதில் நடிக்க ஹைதராபாத்தில் தங்கியிருந்த போதுதான் அஞ்சலி, உயிருக்கு ஆபத்து என்ற அதிர்ச்சியை வெளியிட்டார்.
அஞ்சலியால் குற்றம்சாற்றப்பட்ட அவரின் சித்தி, அஞ்சலி குறித்து தெரிவித்திருக்கும் பிளாஷ்பேக் கதைகள் அஞ்சலியின் இமேஜுக்கு பலம் சேர்க்கக் கூடியது அல்ல. 12ஆம் வகுப்புப் படிக்கையில் இளைஞன் ஒருவனுடன் அஞ்சலி ஓடிப்போனதாகவும், ஒருமாதம் கழித்தே அவரை தேடிப்பிடித்து அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் கன்னட இயக்குனர் பரத்ஷாவுடன் அஞ்சலி ஒருமுறை ஓடிப்போனதாகவும் தெரிவித்துள்ளார்.
அஞ்சலியின் அம்மா பார்வதி தேவி இரண்டாம் தாரமாக ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு, அவர் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இதன் காரணமாகவே தனது சித்தி பாரதி தேவியின் அடைக்கலம் அஞ்சலிக்கு தவிர்க்க முடியாமல் இருந்திருக்கிறது.
இன்று மாலை ஹைதராபாத்திலிருந்து வந்திருக்கும் செய்தி அஞ்சலி விவகாரத்தை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. ஹைதராபாத் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அஞ்சலியை இன்று காலை முதல் காணவில்லையாம். அவர் மாயமாகிப் போனதை அஞ்சலியின் சகோதரரும் உறுதி செய்திருக்கிறார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்கு அஞ்சலி வரவில்லை என புகார் தரப்போவதாக எரிகிற கொள்ளியில் இன்னொரு விறகை சொருகியிருக்கிறார் வெங்கடேஷ். அஞ்சலி பிரச்சனை எழுந்ததும் வெங்கடேஷின் பெயர்தான் அடிபட்டது. அவரின் கஸ்டடியில்தான் அஞ்சலி இருக்கிறார், சித்தியின் அடைக்கலத்தை துறக்க அஞ்சலி துணிந்ததற்கு வெங்கடேஷ்தான் காரணம் என கிசுகிசு எழுத்தாளர்கள் எழுதத்தலைப்பட்டனர். இந்நிலையில் வெங்கடேஷின் புகார் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அஞ்சலிக்கு என்னானது என்பது தெரியாத நிலையில் அவர் மீதே புகாரா...? வெங்கடேஷின் இந்த அவசரத்துக்கு என்ன காரணம்...?
த்ரில்லரை விஞ்சும் திருப்பங்கள் அடுத்தடுத்த நாட்களிலும் அரங்கேறலாம்.