இப்பொதெல்லாம் தமிழ் சினிமா இயக்குநர்கள் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை வைத்தே ஒரு படத்திற்கான கதையை பிடித்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை செய்தி தான் ‘ஒருவர் மீது இருவர் சாய்ந்து’ படத்தின் கதை. தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்கும் வேலை செய்யும் நாயகி சுவாதியை, ஹீரோ லகுபரன் காதலிக்கிக்கிறார்.
மற்ற ஹீரோக்களைப் போலவே சுவாதியை மடக்க பல டெக்னிக்குகளை கையாள, இறுதியில் சுவாதியும் லகுபரனின் காதலை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் ஒரு கண்டிஷன் போடுகிறார்.
அதாவது, சுவாதியை எப்படி லகுபரன் காதலிக்கிறாரோ, அதே போல சுவாதியின் மிக நெருக்கமான தோழியையும் லகுபரன் காதலிக்க வேண்டும் என்றும், சுவாதி மற்றும் அவருடைய தோழியையும் லகுபரன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்த கண்டிஷன். கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? என்ற விளம்பரம் போலவே ஹீரோயின், நம்ம ஹீரோவுக்கு ஆஃபர் கொடுக்க, இந்த அதிரடி கன்டிஷனை கேட்ட லகுபரன், தலைச் சுற்றி கீழே விழுகிறார். பிறகு என்ன ஆனது? ஏன் சுவாதி இப்படி ஒரு கன்டிஷன் போட்டார்? சுவாதியின் அந்த தோழி யார்? லகுபரன் ரெண்டு லட்டு திண்ணாரா அல்லது அந்த இரண்டு பேரையும் திருத்தினாரா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ரொம்ப காண்டர்வஷியான சப்ஜக்ட்டாக இருந்தாலும், அதை காமெடியில் மூலம் சொல்லி ரசிகர்களை சமாதனப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலசேகரன்.
ஹீரோ லகுபரன், முந்தையப் படத்தில் காட்டிலும் இதில் பாடல் காட்சிகளில் நடனத்தில் அசத்துகிறார். நடிப்பிலும் பாஸ் மார் வாங்குகிறார்.
சுவாதி ஹோம்லியான நாயகியாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியான சானியா தாரா கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இருவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வேலையை செய்திருக்கிறார்கள்.
சிங்கம் புலியின் ரிவர்ஸ் காமெடி சில நேரங்களில் கடுப்பாக இருந்தாலும், புதிய காமெடி நடிகராக அறிமுகமாகியிருக்கும் மாஸ்டர் பரத், சிங்கம் புலியிடம் கேட்கும் கேள்வி சென்சார் கட்டுக்கு ஆளாகும் கேள்வியாக இருந்தாலும், கரகாட்டாக்காரன் படத்தை ஞாபகப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறது.
பாக்யராஜ், விசு இருவரும் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு அனைத்தும் கதைக்கு ஏற்ப சுமாராக அமைந்திருப்பது போல படமும் சுமார் தான்.