அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனையாகவும், சிவகார்த்திகேயனுக்கு கோச்சாகவும் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். தற்போது நளனும் நந்தினியும், இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து வருபவர் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
யாரைப் போன்று நடிக்க விரும்புகிறீர்கள்?
நான், என்னை மாதிரி தான், நடிக்க விரும்புகிறேன். வேறு எந்த நடிகையையும்,ரோல் மாடலாக கருதவில்லை. நந்திதா நல்ல நடிகை என, அனைவரும் பேசும் அளவுக்கு பெயர் எடுக்க வேண்டும். அந்த ஆசையை தவிர, வேறு, எந்த ஆசையும் இல்லை.
"எதிர்நீச்சல் படத்துக்கு பின், புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளதா?
இரண்டு வாய்ப்புகள் வந்துள்ளன. பேச்சு வார்த்தை நடக்கிறது. கதை பிடித்திருந்தால், நடிக்க, சம்மதித்து விடுவேன். நான், கொஞ்சம் விவரமான பொண்ணு. தமிழ் சினிமாவில் தேறிடுவேன் என, நினைக்கிறேன்.
"நளனும் நந்தினியும் படம், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக பேசப்படுகிறதே?
படத்தின் கதையை பற்றி, நான், எதுவும் கூற முடியாது. அதைப் பற்றி, இயக்குனரிடம் தான், கேட்க வேண்டும். இந்த படத்தோட, பாடல் வெளியீட்டு விழா, சுவிட்சர்லாந்தில் நடக்கப் போகிறதாம். வாய்ப்பு கிடைத்தால், நானும் போவேன். ஹாயா, ஒரு வெளிநாட்டு டூர் அடித்தது மாதிரி இருக்கும்.
எந்த மொழிப் படங்களில் நடிக்க விருப்பம்?
நான், கர்நாடகத்தை சேர்ந்தவள். ஆனாலும், தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. புதிது புதிதாக ஏராளமானோர், திரையுலகத்துக்கு வருகின்றனர். ஒவ்வொருவரும், வித்தியாசமாக யோசிக்கின்றனர். இப்போது, "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடிக்கிறேன். விளம்பரத்தை பார்த்ததும், என் தோழிகள், எனக்கு பாராட்டு தெரிவித்தனர்.
"அட்டக்கத்தி படத்தில், முதலில் நடிக்க மறுத்ததாக கூறப்பட்டதே?
உண்மை தான். "அட்டக்கத்தி படத்தில், ஒர்க் பண்ற அனைவரும், புதியவர்கள் என, தெரியவந்தது. இதனால், அம்மாவுக்கு தயக்கமாக இருந்தது. கதையை கேட்டதும், பிடித்திருந்ததால் சம்மதித்தேன். நான், நினைத்தது சரியாக இருந்தது. படம், பெரிய வெற்றி பெற்று, ஒட்டு மொத்த திரையுலகமும், எங்களை திரும்பி பார்த்தது. இது, மறக்க முடியாத அனுபவம்.