நகம் கடித்தால் என்னவாகும் - ஜோதிட ரகசியம்

நகம் கடித்தால் நோய் வரும் என்று தானே அறிவியல் சொல்கிறது! ஆனால், ஆன்மிகம், வறுமை வரும் என்கிறதே! நகம் கடிப்பதற்கும் வறுமைக்கும் என்னைய்யா சம்பந்தம்?இருக்கிறது...! வீட்டிற்குள் இருக்கும் போது, யாராவது நகத்தைக் கடித்து துப்பிக் கொண்டிருந்தால், இப்படி செய்யாதே! தரித்திரம் வரப்போகிறது என்று பெரியவர்கள் கடிந்து கொள்வார்கள். நகம் கடித்து துப்பும்போது, அது அங்குள்ள உணவில் விழலாம். விபரம் புரியாத குழந்தைகள்
அதை என்னவோ ஏதென்று எடுத்து விழுங்கி விடலாம். பிறகென்ன! அது அழ ஆரம்பிக்கும். தெரியாமல் உணவைச் சாப்பிடுபவர்கள் வயிற்று உபாதைகளால் சிரமப்படுவர். பிறகென்ன! டாக்டரிடம் போனால் அவர் எக்ஸ்ரே, ஸ்கேன் என எடுத்து, ஒரு பில்லை நீட்டி விடுவார். சின்ன விஷயம் தான்! ஆனால், அது எவ்வளவு பெரிய செலவைத் தந்து விடுகிறது பார்த்தீர்களா! யார் பணக்காரன் என்று ஒரு கேள்வி கேட்டால், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று பழமொழியே சொல்லி வைத்திருக்கிறார்கள். பணம் தேவையில்லாமல் குறையக் குறைய ஏழ்மை சூழ்வது இயற்கை தானே! அதனால் தான் நகம் கடிப்பது தரித்திரம் என முன்னோர் சொல்லியிருக்கிறார்கள்.

நகத்தை வீட்டுக்கு வெளியே வந்து முறையாக வெட்டும் பழக்கத்தை இனியேனும் செய்வீர்களா!

பழைய பதிவுகளை தேட