இன்று ஆரம்பம் நாளை பூகம்பம்

ஒருவழியாக அஜீத்தின் படத்திற்கு தலைப்பு வெளியாகிவிட்டது. படத்திற்கு ‘‘ஆரம்பம்’’ என்று பெயர் வைத்துள்ளனர். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். பில்லா-2 படத்திற்கு பிறகு அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஆனால் படம் தொடங்கியதில் இருந்து படம் முடியும் வரை படத்திற்கு தலைப்பே வைக்கவில்லை. ஆரம்பத்தில் வலை என்று பெயர்
வைத்ததாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் படக்குழுவினர் அதை மறுத்துவிட்டனர். 

கடந்த மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போதும் பெயர் வெளியாகவில்லை. மாறாக ஒரு சிறிய டீசரை மட்டும் வெளியிட்டார்கள். அப்போது கூட அஜீத்தின் 53வது படம் டீசர் என்று தான் வெளியானது. ஒரு படத்திற்கு தலைப்பு வைக்க முடியவில்லையா என்று அஜீத் ரசிகர்களும் கோபமடைய தொடங்கினர். சிலர் தங்கள் சார்பில், படத்தின் தலைப்புகளை படக்குழுவுக்கு பரிந்துரைத்தார்கள். எந்த ஒரு படத்துக்கும் தலைப்பு குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை.

இந்நிலையில் ஒருவழியாக படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ஆரம்பம் என்று பெயர் வைத்துள்ளனர். அஜீத் சுயவிளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுய புகழ்பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு இப்போது ஆரம்பம் என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா, கி‌ஷோர், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்சுரேகர், சுமா ரங்கநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ரகுராமன் தயாரிக்கிறார், கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் விஷ்ணுவர்தன். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

பழைய பதிவுகளை தேட