கணிப்பொறியும் கட்டாய பணியும்

கம்ப்யூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் நம் உடனுறை நண்பனாக மாறிவிட்டது. மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி. இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை
வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா? என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி, நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம்.

கம்ப்யூட்டர், கீபோர்ட், மானிட்டர் திரை: உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் சுத்தமாக வைத்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரைச் சுற்றிப் பரவும் தூசியும் அழுக்கும், கம்ப்யூட்டர் சிபியுவில் புகுந்து, உள்ளே வெப்பத்தினைத் தணிக்க இயங்கும் மின் விசிறிகளின் செயல்திறனைக் குறைக்கும். இதனால், கம்ப்யூட்டரின் செயல் திறனும் குறையும். 

சுத்தப்படுத்துவதற்கான பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, மின் இணைப்பிலிருந்து நீக்கி, ஸ்குரூக்களை நிதானமாகக் கழற்றி, உள்ளே சேர்ந்திருக்கும் தூசியையும், அழுக்கையும் அகற்றவும். உள்ளே மின்விசிறியிலும், வெளியே வெப்பம் வெளியேறும் துவாரங்களிலும் நிச்சயம் அதிகமாகத் தூசு தென்படும். இவற்றை நீக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். குறைந்த அளவில் வேகமாக காற்று அடிக்கும் கருவியைப் பயன்படுத்தி, சிபியு மின்விசிறி, மதர்போர்ட் மற்றும் கிராபிக்ஸ் போர்ட் ஆகியவற்றில் படிந்துள்ள தூசியை நீக்கவேண்டும். வேறு இடங்களில் படிந்துள்ள தூசியையும் நீக்கவும். 

அடுத்ததாக கீ போர்ட். இதனைக் கழட்டி, தலைகீழாகக் கவிழ்த்து, சிறியதாகத் தட்டினால், நம்மை அறியாமல் கீகளுக்கிடையே உள்ள இடைவெளியில் சென்ற சிறிய தூசுகள் எல்லாம் வெளியேறும்.இங்கும் காற்றடிக்கும் சிறிய கருவியின் மூலம் தூசியை வெளியேற்றவும். சிறிய பேப்பர் டவலில் தண்ணீர் அல்லது பெட்ரோல் நனைத்து, கீகளின் மேலாகவும்,  பக்கவாட்டிலும் சுத்தம் செய்திடவும். குறிப்பாக நம் விரல்கள் கீகளின் எந்த இடத்தில் தொடுகிறதோ, அந்த இடங்களில் அழுக்கு சேர்ந்திருக்கும். இதனைக் கட்டாயம் நீக்க வேண்டும். இதே போல மவுஸ் சாதனத்தையும் சுத்தப்படுத்தவும். இறுதியாகக் கவனிக்க வேண்டியது மானிட்டர். மைக்ரோ பைபர் துணி கொண்டு இதனைச் சுத்தம் செய்திடலாம். இதனை நீர் அல்லது வினீகரில் நனைத்து, திரையையும் சுற்றி உள்ள பகுதியையும் சுத்தம் செய்திட வேண்டும்.

டேட்டா பேக் அப்: இந்தக் கட்டுரையில் தரப்பட்டிருக்கும் டிப்ஸ்கள், அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசையில் இல்லை. இருந்தால், இந்த டிப்ஸ்தான் முதலில் இருக்க வேண்டும். உங்கள் கம்ப்யூட்டர் ஆண்டாண்டு காலம் இயங்கிக் கொண்டே இருக்காது. ஒரு நாளில், முடங்கிப் போய் தன் இயக்கத்தை நிறுத்திவிடும். உள்ளே நாம் சேர்த்து வைத்த முக்கிய பைல்களை நம் பயன்பாட்டிற்கு எடுக்க இயலாமல் போய்விடும். வெள்ளம், தீ, பூகம்பம், திருட்டு மற்றும் பிற விபத்துக்கள் எதிர்பாராமல் நடப்பது போல, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கும் சுழலாமல் நின்று விடும். என்ன செய்தாலும், அதில் உள்ள பைல்கள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, நம் உழைப்பின் கனிகளான அந்த பைல்கள் உங்களுக்கு வேண்டும் எனில், அவற்றை உருவாக்கிய வுடனேயே, அதற்கு பேக் அப் எடுக்க வேண்டும். இதற்கு பேக் அப் சாப்ட்வேர் பயன்படுத்தலாம். அல்லது, நாமே விழிப்புடன் இருந்து, ஒன்றுக்கு இரண்டாக நல்ல பிளாஷ் ட்ரைவ் அல்லது எடுத்துச் செல்லக் கூடிய ஹார்ட் ட்ரைவ்களில் நம் டேட்டா பைல்களை பேக் அப் எடுக்க வேண்டும். 

மால்வேர் பாதுகாப்பு: நான் அனைத்து பாதுகாப்பு வழிகளையும் கையாள்கிறேன். சந்தேகத்திற்கிடமான இமெயில்களைத் திறப்பதில்லை; தேவையற்ற தளங்களைப் பார்ப்பதில்லை; எனக்கு இதுவரை மால்வேர் புரோகிராம்களே வந்ததில்லை என்று நீங்கள் உறுதியாக இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டர் இந்த வகையில் அடிபடும் வாய்ப்புகள் அதிகம். நீங்கள் என்னதான் கவனமாக இருந்தாலும், ஏதேனும் ஒரு சிறிய செயல்பாடு, உங்கள் கம்ப்யூட்டருக்கு வைரஸைக் கொண்டுவரலாம். எனவே, ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதற்கென இலவச புரோகிராம்கள் மட்டுமின்றி, கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராம்களும் கிடைக்கின்றன. இவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து இயக்கி வந்தாலும், அவற்றை அவ்வப்போது இணைய இணைப்பு கொடுத்து அப்டேட் செய்திட வேண்டும். இல்லையேல் பயன் இருக்காது.

சாப்ட்வேர் அப்டேட்: சாப்ட்வேர் என்பது சாக்லேட் பால் மாதிரி. முதலில் அதனை மிக மிக விரும்புவீர்கள். அடிக்கடி பயன்படுத்துவீர்கள். நாள் ஆக ஆக, அதன் தன்மை மாறும். நம்பகத்தன்மை குறையும். பாதுகாப்பு கிடைக்காது. எனவே எந்த ஒரு பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராமினையும், அப்டேட் செய்திட வேண்டும். நீங்கள் என்ன செய்திட வேண்டும் என அந்த சாப்ட்வேர் தொகுப்பினை உருவாக்கி, அப்டேட் தரும் நிறுவனம் கற்றுக் கொடுக்கும். எனக்குப் பழையதே போதும் என ஒருநாளும் இருக்க வேண்டாம்.

பைல்களை ஒழுங்குபடுத்தல்: நாம் எப்போதும், டெஸ்க்டாப்பில் பைல்களைக் குவித்து வைப்போம். அப்புறம் அவற்றை போல்டருக்குக் கொண்டு செல்லலாம் என்று சொல்வோம்; ஆனால், செய்ய மாட்டோம். அதே போல, டாகுமெண்ட்ஸ் (மை டாகுமெண்ட்ஸ்) போல்டரில் உள்ள ஏதேனும் ஒரு போல்டரில், பைல்களை எல்லாம் போட்டு வைப்போம். இது போன்ற ஒத்தி வைக்கும் செயலால், நமக்குதான் பிரச்னை வரும். 
உங்கள் பைல்களின் தன்மை உங்களுக்குத் தான் தெரியும். எனவே, அவற்றின் தகவல் பண்பின் அடிப்படையில், போல்டர்களை உருவாக்கி, பிரித்து, பயன்படுத்தத் தயாராக வைத்திருக்கவும். இதனை உடனுடக்குடன் செய்வது சிறப்பு என்றாலும், வாரம் ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும். நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 பயன்படுத்து பவராக இருந்தால், இதற்கென உள்ள Libraries வசதியைப் பயன்படுத்தவும். 

பைல்களை இவ்வாறு ஒழுங்கு படுத்தும் போது, இன்னொரு வகை பிரச்னையைச் சந்திக்கலாம். பழைய, மிகப் பழைய, பயனற்ற பைல்கள், பல போல்டர்களில் குவிந்து போய் இருக்கும். ஏன், அப்ளிகேஷன் புரோகிராம்களே, அதிக இடத்தை எடுத்து அடைத்துக் கொண்டிருக்கும். இவற்றை நீக்கி, உங்கள் கம்ப்யூட்டரைச் சுத்தப்படுத்தலாம். பைல்களை நீங்களாகச் சுத்தப்படுத்திய பின்னர், சிகிளீனர் போன்ற, கம்ப்யூட்டர் பைல்களைச் சுத்தம் செய்திடும் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.

சொந்தக் கதை சோகக் கதையை சுருக்க: உங்களுடைய வாழ்க்கையின் எவ்வளவு பகுதி, பைல்களாக உங்கள் கம்ப்யூட்டரில் அடைந்து கிடக்கிறது. மருத்துவ சோதனை அறிக்கைகள், பேங்க் ஸ்டேட்மெண்ட் அல்லது மற்றவர்கள் பார்க்கக் கூடாத பிற சொந்த பைல்கள் என எத்தனையோ, நம் பெர்சனல் பைல்கள் கம்ப்யூட்டரில் பதியபட்டு இருக்கலாம். இந்த வகை பெர்சனல் பைல்களை, மற்றவர்கள் பார்க்க இயலாதபடி, என்கிரிப்ட் (encrypt) செய்து விட வேண்டும். இதற்கு உதவிட ட்ரூகிரிப்ட் போன்ற தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் கிடைக்கின்றன.

பாஸ்வேர்ட்களை மாற்றவும்: ஒரே பாஸ்வேர்டை அனைத்து புரோகிராம்களிலும் பயன்படுத்த வேண்டாம். சரியான, வலுவான பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன் படுத்தவும். குறிப்பிட்ட கால வரையறையில் அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், எந்த பாதுகாப்பு சிஸ்டமும், முழுமையான நம்பிக்கைக்குரியவை இல்லை. எனவே, அதிக பாதுகாப்பு தேவைப்படும், நிதி சார்ந்த பணிகளுக்குப் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்களை, அடிக்கடி கூட மாற்றலாம். இவ்வாறு மாற்ற வேண்டியதனை, நினைவு படுத்தவும் தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்புகள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. 

ஸ்டார்ட் அப் டியூனிங்: கம்ப்யூட்டரை இயக்க அமர்ந்தால், அது நிலைப்பாட்டிற்கு வர அதிக நேரம் எடுக்கிறதா? நீங்கள் அமைக்காத, உங்களுக்குத் தேவைப்படாத, பல புரோகிராம்கள், ஸ்டார்ட் அப் போல்டரில் அமர்ந்து கொண்டு, கம்ப்யூட்டரை இயக்கும்போது, தாங்களும் இயங்கி, பின்னணியில் செயல்படுகின்றன என்று பொருள். எனவே, அடிக்கடி, ஸ்டார்ட் அப் பிரிவு சென்று, தேவைப்படாத புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டு இருந்தால், அல்லது முன்பு இணைக்கப்பட்டு, தற்போது தேவைப்படாத புரோகிராம் இருந்தால், இவற்றை நீக்கவும். இந்த வகையில் சிகிளீனர் புரோகிராம் உதவிடும்.

இன்பாக்ஸ் கிளீனிங்: கம்ப்யூட்டரில் மற்ற பிரிவுகளை ஒழுங்கு படுத்துகையில், உங்களுடைய இமெயில் இன்பாக்ஸ் உங்களுக்குப் பிரச்னையைத் தரலாம். உங்கள் தனிப்பட்ட வேலைகளுக்கு, அலுவலகப் பணிகளுக்கு, இந்த மின் அஞ்சல் இன் பாக்ஸ்களை நீங்கள் சார்ந்து இருக்கலாம். ஆனாலும், காலப் போக்கில் சேரும் தேவையற்ற மெயில்களை அழிக்க வேண்டும். 

முதலில் பல போல்டர்களை உருவாக்கி, மெயில்களைப் பிரித்து, இன்பாக்ஸை அமைக்க வேண்டும். பின்னர், இவற்றில் உள்ள தேவையற்ற மெயில்களை நீக்க வேண்டும். இதனால், எந்த எந்த மெயில்கள் எங்கு உள்ளன என்று உங்களுக்கும் தெரியவரும். அவற்றைக் கையாள்வதும் எளிதாகும். 

மின் அஞ்சல்களில், பலர் எந்த நியூஸ் லெட்டருக்கும் சரி எனத் தன் மின் அஞ்சலைக் கொடுப்பார்கள். பின்நாளில், அவற்றைத் திறந்து கூடப் பார்க்காமல், ட்ரேஷ் பெட்டிக்கு அனுப்புவார்கள். இதனால், உங்கள் மின்னஞ்சல் போல்டர் திணறும். தேவையற்ற நியூஸ் லெட்டர், அலெர்ட் மெயில் சந்தாக்கள் ஆகியவற்றை, அவ்வப்போது நீக்க வேண்டும்.

தானாகச் செயல்பட அமைக்கவும்: மேலே கூறப்பட்ட பல கிளீனிங் செயல்பாடுகளைத் தானாகக் கம்ப்யூட்டரே மேற்கொள்ளும் வகையில் அமைக்க பல இலவச புரோகிராம்கள் உள்ளன. அவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள். 

பெர்சனல் கம்ப்யூட்டரைச் சுத்தமாக அனைத்து வழிகளிலும் வைத்து கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கு ஒரு தலைவலியாக இருக்காது. இவை எல்லாவற்றையும் தினந்தோறும் பார்க்க வேண்டியது இல்லையே. குறிப்பிட்ட கால வரையறையில், மாதம் ஒருமுறை கூட, மேற்கொள்ளலாம். அல்லது, மேலே கூறியபடி, தானாகச் செயல்படும் புரோகிராம்களை செட் செய்திடலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget