கூகுள் மின்னஞ்சலில் புத்தம் புது வசதிகள்

கூகுள் தரும் ஜிமெயில் தளம் அதன் பலவகை வசதிகளுக்குப் பெயர் பெற்றது. பெரும்பாலானவர்கள், இவற்றில் சிலவற்றைக் கூட முழுமையாகப் பயன்படுத்த மாட்டார்கள். அடிப்படையில், தங்களுக்கு வரும் மெயில்களைப் பார்ப்பது, இணைப்புகளை டவுண்லோட் செய்வது, பதில் அஞ்சலை, தேவை எனில் இணைப்புகளுடன் அனுப்புவது என்ற அளவிலேயே செயல்படுவார்கள். இவற்றில் சில செட்டிங்ஸ் மேற்கொண்டால், சில அஞ்சல்
செயல்பாடுகள், கூடுதல் பயன் தருபவையாகவும், விரைவில் மேற்கொள்ளப்படுவதாகவும் அமையும். அவற்றை இங்கு காணலாம்.

ஜிமெயின் இன்பாக்ஸ்: கூகுள் நிறுவனம் தன் ஜிமெயில் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் ஒரு புதிய வசதியை அளிப்பது வழக்கம். இந்த வசதிகளே, அதன் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து அதன் பக்கம் வைத்துள்ளது. புதிய அறிமுகங்கள் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை எடுத்துவிடவும் அல்லது மற்றவற்றுடன் இணைக்கவும், கூகுள் தயங்காது. கூகுள் தந்துள்ள புதிய வசதி ஒன்று குறித்து இங்கு பார்க்கலாம். 

தற்போது கூகுள் ஜிமெயில் இன்பாக்ஸில் புதிய பிரிவுகளை வடிவமைத்து அளித்துள்ளது. அவை primary, social, promotions, updates and forums ஆகும். இதில் ஏதேனும் உங்களுக்குத் தேவை இல்லை என நீங்கள் எண்ணினால், அதனை நீக்கிவிடலாம். இந்த வகை இன்பாக்ஸ் தோற்றத்தை நீங்கள் விரும்பிய வகையிலும் அமைக்கலாம். இதற்கு முதலில், மெயில் தளத்தின் திரையில் வலது மேல் மூலையில் உள்ள, செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தவும். அடுத்து “Configure inbox” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு பாப் அப் ஆகி வரும் பட்டியலில், தேவையற்ற பாக்ஸ்களுக்கான டேப்களுக்கான டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின் சேவ் செய்திடவும்.

காலண்டரில் நிகழ்வுகள் இணைப்பு: நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையினை மேற்கொள்பவராக இருந்தால், அவற்றை கூகுள் காலண்டரில் இணைப்பது மிக எளிதான ஒன்றாக இப்போது அமைக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல்களில் உள்ள தேதி மற்றும் நேரம் தற்போது அடிக்கோடிடப்படுகின்றன. உங்கள் திட்டமிடலை முன் கூட்டியே பார்க்க விரும்பினால், இதில் ஏதாவது ஒன்றின் மேல் கர்சரைக் கொண்டு செல்லவும். நீங்கள் விரும்பினால், தேதி மற்றும் நேரத்தினை மாற்றலாம். பின்னர், “Add to Calendar” என்பதில் கிளிக் செய்து உங்கள் திட்டமிடலில் அதனை இணைக்கலாம். உங்கள் காலண்டரில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பதிவில், உங்கள் பழைய மூல அஞ்சலுக்கு ஒரு லிங்க் ஏற்படுத்தப்படும். இதனால், இந்நிகழ்வு சார்ந்த அனைத்தையும் எளிதாகப் பார்வையிட முடியும். 

விருப்பமில்லையேல் முடக்கிவிடலாம்: குறிப்பிட்ட மின் அஞ்சல் சார்ந்து பலர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திடுகையில், அவை தொடர்ந்து நீண்டு கொண்டே போகும். ஒரு கட்டத்தில், தொடக்க நிலையில் எழுதப்பட்ட கருத்துக்குச் சம்பந்தமில்லாத கருத்துகள் பதிவு செய்யப்படலாம். உங்களுக்கு அதில் விருப்பமில்லாமல் இருக்கலாம். இருப்பினும், அந்த அஞ்சல் சங்கிலித் தொடராக உங்கள் பெட்டியில் வந்து கொண்டே இருக்கும். இதனை உங்கள் மெயில் பாக்ஸில் வராமல் இருக்க, கூகுள் ஒரு வசதியினைத் தந்துள்ளது. “Mute conversations” என்னும் அந்த வசதியினை இயக்கி விட்டால், தொடர் அஞ்சல்கள் வராது.

ஒரு அஞ்சல் தொடரினை முடக்க நினைத்தால், அதன் அருகே உள்ள சிறிய சதுரப் பெட்டியில் கிளிக் செய்து, முதலில் அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து “More” என்பதில் உள்ள கீழ் விரி மெனுவினை விரிக்கவும். இதில் காணப்படும் “Mute” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், இந்த தகவல் சார்ந்த அனைத்து மெயில்களும் நீக்கப்பட்டு, ஆர்க்கிவ் எனப்படும் கிடங்கில் வைக்கப்படும். எனவே “All Mail” என்ற லேபிள் மீது கிளிக் செய்தால், இவற்றை எப்போதும் நீங்கள் காணலாம். இதில் மட்டும் புதியதாக “Muted” என்ற லேபிள் காணப்படும். பின் ஒரு நாளில், இதனைத் தொடர்ந்து நீங்கள் பெற விரும்பினால், மீண்டும் இதனைத் தேர்ந்தெடுத்து, “Move to Inbox” என்பதில் கிளிக் செய்திடவும்.

பெரிய பைல்களுக்கு ஜி டிரைவ் பயன்படுத்தல்: ஜிமெயில், அஞ்சலுடன் இணைக்கும் பைல்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட அளவிற்கு மேல், அந்த பைல் அல்லது, இணைக்கப்படும் மொத்த பைல்களின் அளவு இருந்தால், எந்த பைல் அளவினை மீறுகிறதோ, அதனை ஏற்றுக் கொள்ளாது. நமக்குக் கட்டாயம் பைலை அனுப்பியாக வேண்டிய சூழ்நிலையில் இருப்போம். இது போன்ற வேளைகளில் கூகுள் ட்ரைவ் பயன்படுத்தி அனுப்பலாம். இதனைப் பயன்படுத்தி, 10 ஜிபி அளவிலான பைலை அனுப்ப முடியும். இது வழக்கமான பைல் அளவினைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாகும். 

மிகப் பெரிய பைலை அனுப்பு முன்னர், அதனை ஜி ட்ரைவில் அப்லோட் செய்திட வேண்டும். அதன் பின்னர், ஜிமெயில் தளத்தில், Compose விண்டோவில் Drive ஐகான் மீது கிளிக் செய்திட வேண்டும். பின்னர், நாம் அனுப்ப விரும்பி, கூகுள் ட்ரைவிற்கு ஏற்கனவே அனுப்பிய பைலைக் கிளிக் செய்திட வேண்டும். நீங்கள் அனுப்பிய பைலுக்கு, அதனைப் பெறுபவராக நீங்கள் தேர்ந்தெடுத்தவர் அணுக முடியுமா எனப் பார்க்கும். இல்லையேல் சில செட்டிங்ஸ் மாற்ற கூகுள் உங்களைக் கேட்டுக் கொள்ளும். இவற்றை மாற்றி அமைத்த பின்னர், உங்கள் பைல் அவருக்குச் செல்லும். அவர் அஞ்சலைப் பார்க்கையில், கூகுள் ட்ரைவிலிருந்து, குறிப்பிட்ட பைல் அவர் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget