இணையதளங்களில் இருக்கும் ஆபாசமான கருத்துகளை நீக்க வேண்டும் என்று கூறுவதற்கு இந்தியா ஒன்றும் சீனாவைப் போன்று சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடு அன்று என்று கூகுள் இந்தியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கூகுள் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமானவைகள் போஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து வினய் ராய் என்ற பத்திரிக்கையாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இயேசு கிறிஸ்து,
முகம்மது நபி மற்றும் பல்வேறு இந்து கடவுகள்களின் ஆபாச சித்திரங்கள் கூகுள் மற்றும் பேஸ்புக்கில் வெளியிடப்படுவதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து டெல்லியில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் கூகுள், பேஸ்புக் உள்பட 21 இணையதளங்கள் மீது அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதை எதிர்த்து கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகின.
இந்த மனுக்கள் கடந்த 12ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் கெய்ட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி கெய்ட், சமூக வளைதளங்களில் ஆபாசமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தால், அதை நீக்க முடியாது என்று அவை கூறினால், சீனாவைப் போன்று இந்தியாவிலும் கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவை மூடப்படும் என்று எச்சரித்தார். மேலும் கீழ் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்கவும் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூகுள் இந்தியா சார்பில் வழக்கறிஞர் கே.என்.கௌல் ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் கூறியதாவது,
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு பேச்சு சுதந்திரம் உள்ளது. இங்கு ஒன்றும் சீனாவைப் போன்று சர்வாதிகார ஆட்சி நடைபெறவில்லை. இணையதளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். அதில் நிறுவனங்கள், தனி நபர்கள், அரசுகள் மற்றும் அதன் துறைகளும் அடக்கம்.
கூகுள் இந்தியா சர்ச் என்ஜினும் அன்று இணையதளங்களை உருவாக்கும் தளமும் அன்று. அமெரிக்காவை தலைமையகமாக்க கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்தின் இந்திய கிளை. எனவே, கூகுள் இந்தியாவுக்கு எதிராக எந்த கிரிமினல் குற்றச்சாட்டும் கூற முடியாது என்றார்.