ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதா?


தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திமுக தலைவர் கருணாநிதி கண்டிப்பது, ``ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாகச் சொல்லும் பழமொழியை நினைவுபடுத்துகிறது'' என்று சபாநாயகர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மீதான அவை உரிமை மீறல் பிரச்சினையில், 2.2.12 அன்று சட்டமன்றப் பேரவை எடுத்த
நடவடிக்கை குறித்து, பத்திரிகையாளர் கேள்விக்கு, திமுக தலைவர் கருணாநிதி, ``ஜனநாயகத்துக்குப் புறம்பான காரியங்கள் மாத்திரமல்ல, ஜனநாயகத்தை உடைத்தெறியும் காரியங்கள், இந்த ஆட்சியில் தொடர்ந்து நடைபெறுகிறது. அதற்கு ஒரு உதாரணம், விஜயகாந்த் மீது செலுத்துகின்ற அடக்குமுறைகளும், அட்டூழியங்களும்'' என்று விமர்சித்துள்ளார்.


1.2.12 அன்று அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்த விஜயகாந்தும், கூச்சலிட்டு குழப்பம் விளைவித்த தேமுதிக உறுப்பினர்களும், பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவையில் அனைவரின் முன்பும், சட்டமன்றத்தினுடைய கண்ணியத்தைக் குலைக்கின்ற வகையில், விஜயகாந்த் நடந்துகொண்டதால், அவர் மீது பேரவையே நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவர் அன்றைய தினமே கேட்டுக்கொண்டிருக்கலாம்.


எனினும், உடனே அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்காமல், வெளியேற்றப்பட்ட விஜயகாந்த் தனது நிலையை எடுத்துரைக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதாலும், பேரவையில் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து, பேரவை நடவடிக்கைகளின் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களைப் பார்த்து, தீர விசாரித்து, இப்பிரச்சனை குறித்து ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக பேரவைத் தலைவரால் உரிமைக் குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.


1.2.12 அன்று மாலை நடைபெற்ற அவை உரிமைக் குழுக் கூட்டத்தில், பேரவை நிகழ்ச்சி ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களைப் பார்த்த, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், விஜயகாந்த் நடவடிக்கை அவை மரபுக்கு மாறானது என்பதை ஏற்றுக்கொண்டனர்.


மேலும், தனது நடவடிக்கை குறித்து விஜயகாந்த், 2.2.12 அன்று காலை குழு முன் நேரில் வந்து தனது நிலையை விளக்க நியாயமான வாய்ப்பு தரப்பட்டும், அதனை அவர் நிராகரித்துவிட்டார்.


இந்நிலையில், சட்டமன்ற ஜனநாயகத்தையும், சட்டமன்ற உரிமை மற்றும் மரபுகளைக் காப்பாற்ற சட்டமன்றப் பேரவையால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, திமுக தலைவர் கருணாநிதி, ஜனநாயகத்திற்குப் புறம்பான காரியங்கள் என்றும், ஜனநாயகத்தை உடைத்தெறியும் காரியங்கள் என்றும் விமர்சித்திருப்பது வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது.


பேரவையின் மாண்பினைக் காக்க அவை எடுத்த நடவடிக்கையை ``ஜனநாயகத்துக்குப் புறம்பான காரியங்கள் மாத்திரமல்ல, ஜனநாயகத்தை உடைத்தெறியும் காரியங்கள், இந்த ஆட்சியில் தொடர்ந்து நடைபெறுகிறது. அதற்கு ஒரு உதாரணம், விஜயகாந்த் மீது செலுத்துகின்ற அடக்குமுறைகளும், அட்டூழியங்களும்.'' என்று, ஐந்து முறை முதல்-அமைச்சராக இருந்த ஒருவர், ஆட்சியுடன் தொடர்புபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது விஷமத்தனமானதாகும்.


இதேபோன்ற ஒரு நேர்வில், கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, 2007ம் ஆண்டு, அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, பேரவைத் தலைவர் மீது பேரவைக் காவலரின் தொப்பியை ஏறிந்தார் என்று கூறி, சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், அடுத்த கூட்டத் தொடர் தொடங்கி முதல் 10 நாட்கள் வரை நீக்கிவைக்கும் தீர்மானம் சட்டப் பேரவையில் 19.10.2007 அன்று நிறைவேற்றப்பட்டு, சுமார் மூன்று மாதங்கள், அதாவது 2008 ஜனவரி முடிவு வரை அவ்வுறுப்பினருக்கான ஊதியமும், சலுகைகளும், தகுதிகளும், ஆதாயங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.


அன்றைக்கு அந்தப் பிரச்சனையை உரிமைக் குழுவிற்கு அனுப்பி, விஜயகாந்துக்கு குழு முன் விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கப்பட்டது போல், தனது நிலையினை விளக்க, உறுப்பினர் போசுக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்கப்படாமலேயே பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் தண்டிக்கப்பட்டார்.


பதிமூன்றாவது பேரவையில் போஸ் மீது எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கைக்காகப் பரிந்துரைத்து, குறைவான தண்டனையாக இருப்பினும் அது எதிர்காலத்திலே ஜனநாயகத்தைக் காப்பாற்ற உதவும் என்று பேரவையில் 19.10.2007 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போது இந்நேர்வில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு, உரிமைக் குழுவிற்கு அனுப்பி, அவர் விளக்கமளிக்க வாய்ப்பளித்த பின்னர், குழுவினால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதனடிப்படையில் பேரவை எடுத்த நடவடிக்கையை ``ஜனநாயகத்திற்குப் புறம்பான காரியம்'' என்றும், ``விஜயகாந்த் மீது செலுத்துகின்ற அடக்குமுறைகளும், அட்டூழியங்களும்'' என்றும் விமர்சித்துள்ளது, `ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாகச்' சொல்லும் பழமொழிய நினைவுபடுத்துகிறது.


அதைப்போன்று இந்தப் பேட்டி கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget