"அட்டோன்மெண்ட்' திரைப்படம் ஆத்மார்த்தமான ஒரு அழகிய காதல், ஒரு சிறுமியின் தவறால் அழிந்து போகிறது. 1935களில் இங்கிலாந்தில் நடப்பதுபோல கதை தொடங்குகிறது. மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்து நாயகி, அந்த வீட்டு வேலைக்காரப் பெண்மணியின் வசீகரமான நாயகனைக் கண்டு சஞ்சலமடைகிறாள். இருவருக்குள்ளும் இனம் புரியாத காதல் பனிமேகம் போலப் படருகிறது.
ஒருநாள் ஜன்னல் கம்பிகளுக்கிடையில் ஒரு காட்சியைப் பார்த்து விடுகிறாள் நாயகியின் தங்கை. அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, நாயகன் பாலியல் குற்றவாளியாகி சிறைக்குச் செல்லக் காரணமாகிறாள். சந்தர்ப்பங்களும் அப்படியே அமைகின்றன. தன் அக்காவுக்கு நல்லது செய்துவிட்டதாக நினைக்கிறாள் அந்தத் தங்கை.
இதனிடையே போர்க்காலம் வந்துவிடுகிறது. போர்க்களத்தில் நாயகனும் நாயகியும், போர்வீரனாகவும் செவிலியாகவும் தனித்தனியே மிகுந்த துயருருகிறார்கள்.
தான் தவறு செய்து விட்டோம் என்று நாயகியின் தங்கை உணரும் போது காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிடுகிறது.
யாரிடமும் மன்னிப்பு கேட்கமுடியாமல் நாயகியின் தங்கை தவிக்கும் தவிப்பு துன்பியல் கவிதையாக மாறி நம்மையும் துயருறவைக்கிறது. காதலிக்குச் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றமுடியாமல் போர்க்களத்திலேயே அதுவும் போர் முடிந்த கடைசிநாளில் உயிரை விட்டுவிடுகிறான் நாயகன். காதலியும் அன்றே ஒரு விபத்தில் சிக்கி இறந்துபோகிறாள்.
துயரத்தின் கடைசி சொட்டாய் மிச்சமிருப்பது அவர்களுடைய காதல்தான் என்று நினைக்கும்போது நம்மையும் அறியாமல் அவர்களின் மேல் இரக்கம் வந்துவிடுகிறது.
அதே நேரம் தங்கை அற்புதமாக எழுதக்கூடியவளாக இருக்கிறாள். அவள் மனத்துயரத்தை எழுதி எழுதியே ஆற்றிக்கொள்கிறாள். அப்படித்தான் அவளுடைய அக்காவின் காதல் கதையும் அவளால் எழுதப்படுகிறது. "நான் நிஜத்தில் அவர்கள் காதலை அழித்தேன். என் எழுத்தில் அவர்கள் காதலை வாழவைக்கிறேன்' என்று பேட்டி கொடுப்பதாக படம் நிறைவடைகிறது. மனதைப் பிழியும் அந்த மூவரின் நடிப்பும், படம் பார்த்து வெகுநாள்களுக்கு பிறகும் இன்றுவரை மனதைவிட்டு நீங்காமல் இருக்கிறது. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்து ஆஸ்கர் விருதுபெற்ற வெனிசா ரெட்கிரேவ் நடிப்பு இந்தப்படத்தில் அபாரமாக இருக்கும்.
"மெக் எவன்ஸ்' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவர் ஜோ ரைட்''