தி அமேஸிங் ஸ்பைடர்மேன் - ஹாலிவுட் முன்னேட்டம்


உலகம் முழுவதும் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை, உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள் சிலந்தி மனிதனை. வரிசையாக வருகின்ற ‘ஸ்பைடர்மேன்’ படங்கள் ஹிட்டாகி வருவது இதற்கு சாட்சி. இதன் அடுத்த பாகம், ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’ என்ற தலைப்பில் ஜூலை 3ல் ரிலீஸ் ஆகிறது, ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட் வரை. முதல் மூன்று பாகங்களில், ‘ஸ்பைடர்மேன்’ பீட்டர் பார்க்கர் கேரக்டரில் நடித்த டோபேய் மகியூர் இதில் ஆப்சென்ட். அவருக்கு பதிலாக என்டராகியிருக்கிறார்
ஆண்ட்ரு கார்பீல்ட். ‘ரெட் ரைடிங்’, ‘நெவர் லெட் மி கோ’, ‘தி சோஷியல் நெட்வொர்க்’ உட்பட பல படங்களில் நடித்தவர் இவர். இவரைப் போலவே, ஹீரோயின் கிரிஸ்டனுக்குப் பதிலாக, ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட், எம்மா ஸ்டோனை நடிக்க வைத்திருக்கிறார்கள். ‘ஈஸி ஏ’, ‘த ஹெல்ப்’ உட்பட பல படங்களின் ஹீரோயின். இணைந்த முதல் படத்திலேயே எம்மாவும், கார்பீல்டும் நிஜவாழ்க்கையிலும் இணைந்துவிட்டதாக, ஹாலிவுட் முழுவதும் கிசுகிசுத்துக் கிடக்கிறது இவர்கள் பற்றிய பேச்சு. 


சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா, ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடந்தது. சோனி பிக்சர்ஸ் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் ஹீரோ ஆன்ட்ரூ கார்பீல்ட், எம்மா ஸ்டோன், தயாரிப்பாளர்கள் மாட் டோல்மாக், மைக்கேல் கிரில்லோ கலந்துகொண்டனர். எல்லோரும் மைக் பிடித்து பேசி, கைதட்டி சிரித்து எழுந்தப் பிறகு, தினகரன் நாளிதழுக்கு சிறப்பு பேட்டியளித்தார் எம்மா ஸ்டோன். ‘‘நாடகத்திலிருந்து வந்ததாலோ என்னவோ, சினிமா மீது அதிக காதல் இருந்தது. பதினோறு வயதில், ‘வாலே யூத் தியேட்டர்’ ட்ரூப்பில் சேர்ந்தேன். பதினைந்து வயதில் பெற்றோரை சமாதானப்படுத்திவிட்டு ஹாலிவுட்டுக்கு சென்றுவிட்டேன். முதலில் சீரியல்கள். பிறகு கனவு சினிமாவுக்குள் காலடி வைத்தேன். இதுதான் என்னைப் பற்றிய இன்ட்ரோ. ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேனி’ல் இதுவரை பார்த்த ஸ்பைடர்மேனின் காதலி க்வென் ஸ்டேஸி என்பதை தாண்டி, புதுமையான திரைக்கதை இருக்கிறது. கதைப்படி போலீஸ் அதிகாரியின் மகள் நான். அறிவியலில் அதிக ஆர்வம் உள்ளவள். குடும்பத்தில் மூத்தவள். பொறுப்புகள் அதிகம். பீட்டர் பார்க்கரை பார்த்த உடனேயே காதல் வந்துவிடுகிறது. ஏனென்றால் ஸ்கூலில் மற்ற மாணவர்களை விட பீட்டரிடம் ஏதோ வித்தியாசம். ஸ்பைடர்மேன் ஆவதற்கு முன்பே அவனிடம் ஹீரோயிசம் தெரிவதால் பிடித்துப்போகிறது. ஆனால் இருவருமே வெவ்வேறான வாழ்க்கையை வாழ்பவர்கள். நான், குடும்பத்தில் செல்ல மகள். அப்பா, அம்மா இல்லாமல் மாமா வீட்டில் வாழ்கிறார் பீட்டர். அறிவியலில் அவருக்கும் அதிக ஆர்வம். எங்கள் காதலுக்கு இது காரணமாகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது வெள்ளித்திரை சினிமா.


பீட்டர் பார்க்கரின் காதலி என்றாலும் நடிப்பதற்கு சவாலான விஷயங்கள் நிறைய இருக்கிறது. கற்பனை சினிமா என்பதை தாண்டி இயக்குனர் மார்க் வெப், எவ்வளவு யதார்த்தமாகக் கதை சொல்ல முடியுமோ, அப்படி சொல்லியிருக்கிறார். ஸ்பைடர்மேனில் என்ன யதார்த்தம் என்று கேட்கலாம். ஆக்ஷன் காட்சிகளை தவிர நிறைய காட்சிகளில் யதார்த்தத்தைப் பார்க்க முடியும். ஸ்பைடர்மேன் வரிசையில் இதில்தான் முதன் முதலாக, நான் உட்பட அமெரிக்கர்கள் இல்லாதவர்கள் அதிகமாக நடித்துள்ளோம். இந்தி நடிகர் இர்பான் கான் வில்லனாக நடித்துள்ளார். நானும் அவரும் சேர்ந்து வருவது போல காட்சிகள் இல்லை. ஹீரோ ஆண்ட்ரூவுக்கும் இர்பானுக்கும்தான் காட்சிகள் என்பதால் எனக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாது. பொதுவாக, ஆக்ஷன் படங்களில் ஹீரோயினுக்கு என்ன வேலை இருந்துவிட போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது. அது உண்மைதான். குறிப்பாக இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது காமிக் கதை. இதில் ஹீரோயினுக்கு அதிகபட்சம் காதலைத் தவிர வேறென்ன இருக்க முடியும்? இருந்தாலும் உலகம் முழுவதும் விரும்பிப் பார்க்கிற ஒரு கேரக்டரின் காதலியாக நடித்ததில் எனக்குப் பெருமைதான். 
‘தலைகீழாக தொங்கிக்கொண்டு ஹீரோவுக்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்களாமே?’ என்கிறார்கள். அப்படியொரு காட்சி இருக்கிறதா என்பதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், அதை விட சிறப்பான முத்தக்காட்சி இருக்கிறது. அந்தக் காட்சியில் நாங்கள் உயிர்ப்போடு நடித்துள்ளோம். 


சிறுவயதில் எல்லோரையும் போல நானும் காமிக்ஸ் புத்தகங்களை விரும்பி படித்திருக்கிறேன். அது வேறு உலகம். அந்த உலகத்தில் இருந்துகொண்டு பூமிக்கு திரும்பக் கூடாது என்றெல்லாம் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இன்று அப்படிபட்ட ஒரு காமிக் படத்தில் நடித்திருக்கிறேன் என்பது சிலிர்க்கும் விஷயம்தான். இப்படிப்பட்ட சிலிர்ப்புகள் எல்லோருக்கும் தேவையாக இருக்கிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget