சுவாமி ஐயப்பன் பக்திபாடல்கள் புகழ், பாடகர் கே.வீரமணியின் வாரிசு கிருஷ்ணா எனும் கிருஷ் கதாநாயகராக அறிமுகமாகியிருக்கும் படம்தான் அன்புள்ள துரோகி. கிருஷ், பிரபல குணச்சித்திர நடிகை மீரா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணன் என்பதும் குறிப்பிடத்க்கது.! கதைப்படி பிறந்த இடமும், வளர்ந்த சூழலும் சரியில்லாத நாயகர், பணத்திற்காக எதையும் செய்பவர்! கதாநாயகியும், காதலும் கதாநாயகரின் வாழ்க்கையில் குறுக்கிட்டதும், அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும்
ஏற்றங்களையும் அவர் கை விரல்களாலேயே அவரது கண்களை குத்தி குருடாக்கும் விதமாக நாயகரை வைத்தே நயவஞ்சமாக நசுக்க நினைக்கிறார் அனபுள்ள துரோகி ஒருவர்! அந்த அன்புள்ள துரோகி யார்...? அவரிடமிருந்து நாயகரும், நாயகியும் அவர்களது காதலும் தப்பி பிழைத்ததா...? இல்லை தவிடு பொடி ஆனதா...? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயற்சித்து, வித்தியாசத்தியில் வெற்றியையும், விறுவிறுப்பில் தோல்வியையும் கண்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் வி.பழனி!
சதா எனும் ஜகஜால கில்லாடி பாத்திரத்தில் கிருஷ்ணா எனும் கிருஷ் ஷீரோவாக, புதுமுகம் என்பதே தெரியாத அளவிற்கு பிரமாதமாக நடித்திருக்கிறார். எவன் செத்தால் என்ன? எவன் வாழ்ந்தால் என்ன...? என ஏமாற்றி, திருடி சம்பாதிக்கும் பணத்தில் ஜாலியாய் வாழ்பவர் வாழ்வில் நாயகி வர்ஷா கிராஸ் ஆனதும் ஏற்படும் மாற்றங்களை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் மனிதர்! மொத்தத்தில் அன்பிற்கு ஏங்கும் சதாவாக, சாதரணமாக வாழ்ந்திருக்கும் கிருஷ்விற்கு "சபாஷ்" இந்தா எனலாம்!. நாயகி வர்ஷாவை கொல்ல அவர் தாய்மாமனிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, நாயகியின் நல்லெண்ணம் கண்டு அவரை கொல்லவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் தவிக்கும் தவிப்புகள் ஒன்று போதும் கிருஷ்ஷின் நடிப்பிற்கு நற்சான்றிதழ் தர...!!
நாயகி வர்ஷாவை சின்ன நமீதா, பெரிய குஷ்பு என நடிக்க அழைத்து வந்திருப்பார்கள் போலும். அம்மணி உடம்பை குறைத்தால், தமிழ் சினிமாவில் ஒரு வல்லிய ரவுண்ட் வரலாம்! தன்னை தீர்த்து கட்ட துடிக்கும் தனது தாய் மாமா பட்ட கடனை எல்லாம் அடைத்து, ஹீரோவையும் திருத்தி தியாகி பட்டம் கட்டிக்கொள்ளும் அமெரிக்கா ரிட்டர்ன் அம்மணியை, அப்படி ஒரு வியாதி பெயர் சொல்லி சாகடிப்பதில் இயக்குநருக்கும் அப்படி என்ன ஒரு ஆசையோ...? தெரியவில்லை பாவம் தான் ஜெனிஃபர் பாத்திரத்தில் வரும் வர்ஷா!
வயசுக்கு வந்த பொண்ணும், வட்டிக்கு வாங்கி பணமும், நாளாக நாளாக கஷ்டத்தை தான் கொடுக்குமென்றும், என்ன பெரிய காதல் பேச்சுல தொடங்கி, பீச்சுல நடந்து, லாட்ஜூல முடியறது தானே காதல் என்று பஞ்ச் டயலாக் பேசியபடி பளிச் என்று நடித்திருக்கும் இப்பட தயாரிப்பாளர் தில்லை சேகர், நாயகியின் வில்லத்தனம் நிரம்பிய தாய்மாமனாக வித்தியாசமான ரோலில் பழைய நடிகர் ரங்காராவை ஞாபகப்படுத்துகிறார் பலே பலே! லிவிங்ஸ்டன், பயில்வான் ரங்கநாதன், பாலு ஆனந்த், சாப்ளின் பாலு உள்ளிட்டவர்களுடன் போட்டதெல்லாம் பொட்டிகடை குத்துப்பாடலில் ஆடும் புதுமுகம் டி.எஸ்.சக்திவேல்-ரிசா உள்ளிட்டவர்களும் கவனம் ஈர்க்கின்றனர்.
கனவுகள் ஆல்பம் புகழ் கவிஞர் மா.சிவசங்கரின் "சேட்டைதான்... சேட்டைதான் சதா வந்தா சேட்டைதான்..." பாடலும், பாடலாசிரியர் ச.முருகனின் என்பாதை...? மற்றும் என்ன மாற்றம்...? உள்ளிட்ட பாடல்களும் புதியவர் நந்தாஜியின் இசையில் தாளம் போட வைக்கும் ர(ரா)கம்! நந்தாஜியின் இசையும், விஜய் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் இப்படத்தின் பெரிய பலம் என்றால் மிகையல்ல!
ஆக மொத்தத்தில் "அன்புள்ள துரோகி" தயாரிப்பாளருக்கு, இயக்குநர் என்பது புரிகிறது! ரசிகர்களுக்கு...?! இவர்களில் யார்? என்பது தான் புரியாத புதிர்!!