ஒரே ஒரு கொலவெறி பாடல் பாடியது மட்டும் தான் தனுஷ் செய்தது. அதன் பின் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக புகழ் வந்து சேர்ந்து கொண்டே இருந்தது. புகழுடன் சில பிரச்சினைகளும் வந்தது தான். இருந்தாலும் பின்பு அவை காணாமல் போயின. தனுஷ், சச்சின் டெண்டுல்கருக்காக இசை ஆல்பம் செய்யும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.
கொலவெறிப் பாடல் எப்படி இந்த அளவுக்கு புகழ்பெற்றது என்பதை மாணவர்களுக்கு பாடமாக எடுக்கப்போகிறார் தனுஷ். ஆமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் என்ற தொழிற்படிப்புக் கல்லூரியில் சி.எப்.ஐ பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு தனுஷ் இந்த பாடலை எவ்வாறு வெற்றி பெறச் செய்தார், இந்த பாடல் சில நாட்களில் எப்படி கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்தது என்பதை பற்றி கற்பிக்கவுள்ளார்.
தனுஷ் மட்டும் அங்கு செல்லவில்லை. தனுஷுடன், அவரது உறவினர் மற்றும் கொலவெறிப் பாடலின் இசையமைப்பாளர் அனிருத்தும் பாடம் எடுக்கிறார். இதை பற்றி கேட்பதற்காக தனுஷ் பேசியபோது “மாணவர்களுக்கு விளக்கம் தந்தால் அவர்களுக்கு வாழ்வில் சாதிக்க உதவும் எனக் கேட்டார்கள். நானும் வருவதாக கூறிவிட்டேன்” என்று கூறினார்.
கொலவெறிப் பாடல் ஹிட்டான சமயங்களில் “நான் என்ன செய்தேன். ஒரு பாட்டை சும்மா பாடி அதை யூ-டியூபில் போட்டேன். அது இந்த அளவுக்கு பாப்புலராகும் என யாருக்குத் தெரியும்” என்று பேட்டி ஒன்றில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.