தி பைசைக்கிள் தீவ்ஸ் ஹாலிவுட் விமர்சனம்!


"தி பைசைக்கிள் தீவ்ஸ்" ஒரு சாமானியனின் வாழ்க்கைப் போராட்டத்தை உயிர்ப்புடன் சொன்னவிதம்தான் இப்படத்துக்கான அடிநாதம். வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்திருக்கும் ரோம் நகரின் சூழலைப் பின்புலமாகக்கொண்டு அமைந்திருந்தது இந்தத் திரைப்படம். அந்தோனியோ ரிச்சி வேலையில்லாத தந்தை. அவருடைய மகனும் படிக்கமுடியாமல் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் வேலைசெய்கிறான்.

ஏழ்மை, வாழ்க்கையை நகர்த்த முடியாதபடிக்கு பாரமாக இருக்கிறது. அப்போது தந்தைக்கு போஸ்டர் ஒட்டும் வேலை கிடைக்கிறது. ஆனால் சைக்கிள் இருந்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலை. என்ன செய்வதென்று அவர் தவியாய் தவிக்கிறார். கடைசியில் தன் வீட்டில் இருக்கும் போர்வையையும் பெட்ஷீடையும் விற்று ஒரு சைக்கிள் வாங்குகிறார்.
மறுநாள் காலை அவருக்கு எவ்வளவு நம்பிக்கையாகப் பிறக்கிறது தெரியுமா? அவருடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. தனக்குக் கிடைத்த ஒரு தேவதையைப்போல அவர் அந்த சைக்கிளைப் பார்க்கிறார்.
சைக்கிளை எடுத்துக்கொண்டு முதல்நாள் வேலைக்குச் செல்கிறார். ஓர் இடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் போது, அவர் கண்ணெதிரிலேயே சைக்கிளை ஒருவன் திருடிச் செல்கிறான்.
வாழ்க்கையைத் தந்த அந்த சைக்கிளை தந்தையும் மகனும் கண்ணீர் மல்க நகர் முழுவதும் தேடியலைகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஒரு கட்டத்தில் தந்தையும் மகனுமே திருடனைப் பிடித்துவிடுகிறார்கள். ஆனால் சாட்சிகள் சரியாக இல்லாததால் அந்தத் திருடனை போலீசால் தண்டிக்க முடியாமல் போகிறது. சைக்கிளை மீட்க அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சியும் விழலுக்கு இரைத்த நீராக போகிறது.
வாழ்க்கை அந்தோனியோ ரிச்சியை சைக்கிள் திருடத்தூண்டுகிறது. அப்படி சைக்கிள் திருடும் போது மாட்டிக்கொண்டு மகன் எதிரிலேயே அடியும் அவமானமும் அடைகிறார். போலீஸிடம் அவர் ஒப்படைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார். தந்தையும் மகனும் அழுதபடியே வாழ்க்கையின் அடுத்த அடியை எதிர்நோக்கியபடி வெறிக்க... படம் நிறைவடைகிறது.
இத்திரைப்படத்தின் வாயிலாக இயக்குநர் ஏழ்மை நிலை, ஒரு சாமானியனின் வாழ்க்கை, அது தரும் சவால்கள், கஷ்டங்கள் என யதார்த்தமாகப் பதிவு செய்கிறார். இப்படம் 1948ல் எடுக்கப்பட்டது.
இது ஒரு நியோ ரியலிச திரைப்படம். நியோ ரியலிசம் என்பது கடந்த நூற்றாண்டில் இத்தாலியில் உருவான ஒரு சினிமா இயக்கம். இது பாசிசத்துக்கு எதிரான குரலாக இரண்டாம் உலகப்போரில் இத்தாலியர்களுக்கு யதார்த்த வாழ்க்கையைச் சொல்வதாக இருந்தது.
இந்தியர்களின் வாழ்க்கை முறையுடன் முழுக்கப் பொருந்தும் ஒரு சமூகத்தை நம் கண்முன் நிறுத்தும் திரைப்படமாக, "தி பைசைக்கிள் தீவ்ஸ்'படத்தை நிர்மாணித்திருப்பார் இயக்குநர் விட்டோரியா டி சிகா.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget